“தாய் மொழியை தட்டி
கழித்தால் தாயை
வெறுப்பதற்கு சமம்”
கடந்த வாரம் உலக தாய் மொழி தினம் அனுசரிக்கப்பட்டது...
உலக அளவிலுள்ள அனைத்து நாடுகளும், தங்களின் தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது...
நம் பாரத பிரதமர் மோடி கூட தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்...
முக்கியமாக நம் தமிழகத்தில், தாய் மொழியின் முக்கியதுவம் குறைத்து தான் பார்க்கமுடிகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா... தாய் மொழி பற்றை இறுக்கி பிடித்துள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மாநிலங்களில், தாய் மொழி செய்திதாளை தான் வாசிக்கிறார்கள்.... நம் தமிழகத்தில் மட்டும் ஆங்கில மோகம் அதிகம் தான். ஆங்கில நாளிதழ்களை கையில் வைத்திருப்பதே பெருமையாக கருதும் இளைஞர் கூட்டம் உண்டு.
ஆங்கில படத்தை புரியாமல் உற்று பார்க்கும் நாம்... படத்தில் சிரித்தால்... நாமும் சிரிப்பது தொடர்கிறது.
இந்த நிலைமை தொடர.... ஊட்டி அரசு கல்லூரி தமிழ் உயராய்வு துறை மாணவர்கள், உலக தாய் மொழி தினத்தை.... உலக தமிழ் தாய் மொழி தினமாக கொண்டாடி கலக்கினார்கள்.
இந்த நிகழ்வை நடத்தின மாணவர்களில் முதுகலை மாணவி
கௌரி
கௌரியிடம் பேசினோம்... “உலக தாய் மொழி தினம் பிப்ரவரி 21 ஆம் நாள் அனுசரிக்க படுகிறது. இந்த வருடம் எங்கள் பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் மாணவர்கள் இணைந்து, இந்த நாளை தமிழ் மொழி தினமாக சிறப்பித்தோம். கட்டாயம் புதுமை இருப்பதால் பத்து பாட்டு, எட்டு தொகை, பதினென்கீழ் கணக்கு போன்றவற்றை மாணவர்கள் சித்தரித்து காட்டினார்கள்.
எனக்கு என் தாய் மொழிமேல் அதிக பற்று உண்டு... அதனால் தான் தமிழ் மொழியில் முதுகலை பட்டத்தை படித்து வருகிறேன்.
இன்று தமிழக்தில் மாணவர்கள் தாய் மொழி தமிழை புறக்கணித்து... ஹிந்தி, பிரெஞ்சு மொழியை படிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழை இவர்கள் மறந்து போய்விடுவது... தாய் மொழிக்கு செய்யும் துரோகமாக நினைக்கிறேன்.
தமிழக அரசும்... தமிழ் பத்திரிகைகளும் தான் தாய் மொழியை மேம்படுத்துகிறார்கள்.
தாய் மொழி தமிழை புறக்கணித்தால், நம் தாயை புறக்கணிப்பதற்கு சமம். எங்க கல்லூரி தமிழ் துறை இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்ற மாணவர்களுக்கும், தாய் மொழி பற்றை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர வேண்டும் என்று முடித்தார்.
நந்த குமார்
இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் நந்த குமார் கூறும் போது... “எங்க அரசு கலை கல்லூரியில், உலக தாய் மொழி தினத்தை பற்றி மற்ற மாணவர்கள் புரிந்து கொள்ள... தாய் மொழி தமிழை எல்லோரும் உணர சிறந்த கருத்தரங்குகள் நடை பெற்றன. அதில் தாய் மொழிக்கேற்ற ‘பெண்ணியத்தை’ பற்றிய கருத்தரங்கு அருமை. எங்க கல்லூரி முதல்வர், மற்ற துறை பேராசிரியர்கள், மாணவர்கள்... கல்லூரியை சுற்றி நடந்த தாய் தமிழ் மொழி பவனியில் கலந்து கொண்டது சிறப்பான ஒன்று... அதிலும் மாணவர்கள் சாட் பேப்பரில் தமிழை பற்றி எழுதிய பதாகைகள், அனைவரையும் ஈர்த்தது. எப்படி மற்ற நாடுகளிலும், மாநிலங்களிலும் தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களோ, அது போல நாமும் நம் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்பதை உணர வேண்டும். தமிழ் என்ற சொல்லை நாங்கள் மாணவர்கள் வடிவமைத்தது மறக்க முடியாதது” என்று முடித்தார்.
கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முருகேசனை தொடர்பு கொண்டு பேசினோம்...
“உலக தாய் மொழி தினத்தில், தாய் மொழி தமிழுக்கு எங்க கல்லூரி தமிழ் துறை மாணவர்கள் முன்னின்று நடத்தின நிகழ்வு எங்களை நெகிழ செய்து விட்டது.
அதே சமயம் நான் 1986-ல் இளம்கலை படிக்கும் போது, இப்படியொரு தாய் மொழி பற்று இருக்கவில்லை... எதோ ஒரு பட்டபடிப்புக்காக வேறு வழியில்லாமல் படித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலை நாடுகளில் அதிலும் இலங்கை, சீனா போன்ற நாடுகளில் உள்ள தாய் மொழி பற்று நமக்கு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
ஒரு விஷயம் தமிழின் இனிமையை அறிந்து கற்பது இல்லை.
‘நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டும்’ என்பதில் ‘அச்சம்’ என்பதை ‘மச்சம்’ என்று ஒரு மாணவன் எழுதியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தாய் மொழி தமிழை புறக்கணிப்பது வேதனையான விஷயம்.
எங்க கல்லூரியில் தாய் மொழி தமிழின் மேல் உள்ள ஆர்வம் பாராட்டுக்குரியது. இன்றைய மாணவர்களை தாய் மொழி பற்றில் அரவணைத்து செல்வது ஆசிரியர்களின் கடமை. இதில் எங்க கல்லூரியின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது. இதற்கு மணிவண்ணன் போன்ற பேராசிரியர்களின் பங்கு முக்கியம்”...
முதல்வர் ஈஸ்வரமூர்த்தி
கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும் போது... கடந்த மூன்று வருடமாக ‘உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட மாணவர்கள், தாய் மொழி தமிழ் மொழியை மிக சிறப்பாக வடிவமைத்து, தாய் மொழி தமிழின் சிறப்பை அர்த்தமுள்ளதாக விளக்கினார்கள்.
நம் தமிழக அரசு, தாய் மொழி தமிழுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார்கள். நிறைய ஊக்கத் தொகையை வழங்கி, தமிழ் வழி கல்வியை மேம்படுத்துவதை பாராட்டாமல் இருக்க முடியாது.
மாணவர்கள் மத்தியில் பள்ளி தமிழ் ஆசிரியர்கள், கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியர்கள், மாணவர்களை ஊக்குவித்து தாய் மொழி பற்றை வளர்த்தால்... அந்த பற்று அவர்களின் வாழ்கை முழுவதும் சுடர் விட்டு எரியும். எங்க கல்லூரி தமிழ் துறை மிக சிறப்பாக தாய் மொழி தமிழை வளர்த்து வருகிறது என்று பெருமையுடன் கூறுகிறேன்.”
பேராசிரியர் மணிவண்ணன்
ஊட்டி அரசு கல்லூரியில் தாய் மொழி தமிழை மிக சிறப்பாக அரவணைத்து செல்ல எல்லா முயற்ச்சியையும் செய்து வரும் பேராசிரியர் மணிவண்ணனிடம் பேசினோம்... “எனக்கு தமிழின் மேல் உள்ள அளவுக்கு அதிகமான பற்று.. என் மாணவர்களின் வாயிலாக தாய் மொழியின் சிறப்பை எடுத்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன்.
இந்த வருட உலக தாய் மொழி தினத்தை நம் தாய் மொழி தினமாக சிறப்பித்தோம். தமிழ் என்ற வடிவத்தை மாணவர்களை வைத்தே வடிவமைத்தது சிறப்பாக இருந்தது.
சங்க இலக்கியத்தில் 5 நிலத்தை குறிக்க ஐந்து மாணவர்கள் நிலங்களை சாட் பேப்பரில் எழுதி, தங்கள் நெஞ்சில் பொரித்து நின்றனர். எட்டு தொகைக்கு 8 மாணவர்கள் நின்றனர்.... அதே போல பத்து பாட்டுக்கு 10 பேர் நின்றனர்...
சங்க இலக்கிய வாசகங்கள்... திருக்குறள் பொறிக்கப்பட்டு மாணவர்கள் கல்லூரியை சுற்றி பவனி வந்தது சிறப்பாக இருந்தது. தாய் மொழியில் பேசுவதும், அதை உயர்வாக நினைப்பதை விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்... தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும்....
அப்பொழுது தான் தாய் மொழி பற்றும் உயரும். இந்த வருடம் கொரோனா தொற்றால் கல்லூரி வளாகத்தில் எங்களின் தமிழ் தாய் மொழி விழ்ப்புணர்வை நடத்தினோம்.... அடுத்த வருடம் மாவட்ட அளவில் சிறப்பிப்போம்” என்று முடித்தார்.
Leave a comment
Upload