தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
அடுப்பை பற்றவைக்காமல் சில உணவுகள்.. - ஶ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2021012618020814.jpeg

பொழுது விடிஞ்சு பொழுது போனா நமக்கு இருக்குற பெரிய பிரச்சனை சாப்பாடு தான். அதுவும் ஒவ்வொருத்தரும், விதம் விதமா சில வீட்டுல கேப்பாங்க. ஒரு மணி நேரத்துல முடியுற சமையல் மூணு மணி நேரம் இழுக்கும். இப்படிப்பட்ட பரபரப்பான சமையல்ல சிக்காம, சுலபமா நிதானமா ரெடி பண்ணி சாப்பிட சில சமாச்சாரங்கள் இருக்கு. அதுவும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமானது. இன்னும் சொல்லப்போனா இருக்குற காஸ் விலையில் அடுப்பே பயன் படுத்தாம சாப்பிடுறது.

முக்கியமா ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் இருக்குறவங்க இதை முயற்சி பண்ணி பாருங்க. எல்லாத்தையும் சாப்பிடணும்னு இல்ல.. எதெல்லாம் புடிக்குமோ அதெல்லாம். இது எல்லாமே நமக்கே தெரிஞ்சது தான், ஆனா சாப்ட்டிருக்க மாட்டோம். தங்கவேலு பூரி கதை மாதிரி அதான் எனக்கு தெரியும்ன்னு படிச்சிட்டு அப்படியே போகாம கொஞ்சம் முயற்சி பண்ணி சாப்டீங்கன்னா உடம்புக்கும் உங்க பர்ஸுக்கும் நல்லது.

சில பொருட்கள் விலை அதிகம் மாதிரி தெரியும். நொறுக்கு தீனிக்கு பதிலாக இவைகளை சாப்பிட்டால் இன்னும் நல்லது. கடையில கண்டதை வாங்கி வயித்த கெடுத்துக்கறதுக்கு பதிலா, அப்ப அப்போ இந்த விஷயங்களை சாப்பிட்டால் வயிறும் நிறையும், வியாதியும் குறையும்.

ஊறவைத்த பயிறுகள்

வெந்தயம்...

சர்க்கரைநோய்க்கு மிக மிக அவசியமானது. 12 மணிநேரம் ஊறவைத்து அப்புறம் அதை 24 மணிநேரம் ஈர துணில கட்டி வைக்கணும். கொஞ்சம் தண்ணியையும் தெளிக்கலாம். மூணு நாளுல நல்ல முலை காட்டிடும். அதை ஒரு வாரத்துக்கு பிரிட்ஜ்ல வெச்சு சாப்பிடலாம். கண்டிப்பா மூணு வேலை சாப்பிடணும். காலைல எழுந்த உடனே வெறும் வயித்துல கொஞ்சம். அப்புறம் சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்னாடி சாப்பிடணும். இது சர்க்கரை வியாதி நமக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளும்.

கொண்டக்கடலை மற்றும் கொள்ளுவையும் இதே போன்று ஊறவைத்து முளைகட்டி வைத்து அவ்வப்போது பசிக்கும்போது சாப்பிடலாம்.

பொறி மற்றும் வேர்க்கடலை.

ஒரு பெரிய டப்பாவில் முட்டைப்பொரியும், வறுத்த வேர்க்கடலையும் வாங்கி கலந்து போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு மிக பெரிய பொக்கிஷம். சிலர் போட்டுக்கடலையையும் சேர்த்து வைத்துக்கொள்வார். இன்னும் சிலர் நாட்டு சர்க்கரையும் கலந்து கொள்வர். இதை தான் சரஸ்வதி பூஜையின் போது நாம் வாங்கி கொடுப்போம். அதற்கு பின் மறந்துவிடுவோம். ஆனால் வருடந்தோறும் ஒரு மகத்தான சத்து உணவு.

திராட்சை தண்ணீர்

பத்து உலர்ந்த திராட்சை, அஞ்சு உலந்த பேரிட்சை, அஞ்சு பாதாம் பருப்பு. ஒரு அடுக்கு தண்ணீரில் இவைகளை இரவு ஊறவைத்து விடுங்கள். காலையில் எழுந்தவுடன் காபிக்கு பதில் இந்த தண்ணீரை கொஞ்சம் குடியுங்கள். பின்பு சிறிதுநேரம் கழித்து மீதமுள்ள தண்ணீரையும் பழங்களோடு சேர்த்து சாப்பிடுங்கள். இதற்கு பின் உங்களுக்கு காலை உணவே தேவைப்படாது. மிகவும் உடலுக்கு நல்லது. உடல் இளைக்கவும் சருமம் மெருகேற்றவும் இது மிகவும் உதவும்.

அவல் லட்டு

அவலை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பின்பு அதனை பிழிந்து தண்ணீரை நீக்கிவிட்டு அதனோடு வெள்ளம் சேர்த்து லட்டுவாக உருட்டி வைக்கலாம். அதன் மேல் கொஞ்சம் ஏலக்காய் பொடியை தூவி கொள்ளுங்கள். இதைவிட சிறந்த இனிப்பு பலகாரம் எதுவும் இல்லை.

எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அது நீர்மோர் தான். உப்பும், பெருங்காயமும், கறிவேப்பிலையும் செர்த்து, அவ்வப்போது குடித்து வயிற்றை ரொப்பிக்கலாம்.