தொடர்கள்
கதை
“முத்தங்கள்...” - வெ.சுப்பிரமணியன்

20210226224923664.jpeg

“தாத்தா… இன்னிக்கு, ஸ்கூல்ல இருந்து வந்ததும், அம்மா என்னை அடிச்சுட்டாத் தெரியுமா?” என்று, ஈசிச்சேரில் சாய்ந்துகிடந்த என்னிடம், தன் கம்பிளெயின்ட் பாக்ஸைத் திறந்தாள் என் பேத்தி.

“எதுக்கும்மா அம்மா உன்னை அடிச்சா? நீ என்ன தப்பு பண்ணினே?” எனக் கேட்டேன்.

“தப்பெல்லாம் ஒண்ணுமே செய்யல்லே தாத்தா... ஸ்கூல் முடிஞ்சு அம்மாவோட ஸ்கூட்டர்ல ஏறி உட்காரப் போனேனா… அப்போ என் கிளாஸ்மேட் மகேஷ் ஓடிவந்து, “பைபை… அனுன்னு” சொல்லிட்டு, எனக்கு, கையிலே முத்தம் குடுத்துட்டு, ஓடிப்போய், அவன் அம்மாவோட ஸ்கூட்டர்லே ஏறிண்டான்.

உடனே, மகேஷோட அம்மா, அவனை தலையிலே குட்டு வைச்சுட்டு, நம்ப மம்மிகிட்டே வந்து சாரி கேட்டாங்க.

வீட்டுக்கு வந்த பிறகு, மம்மி, “ஏண்டி கழுதை… இனிமே, அந்த மகேஷோட பேசினே, தொலைச்சிடுவேன்” அப்படீன்னா?

“நேத்திக்கு ஸ்கூல் முடிஞ்சு வரப்போ, நான் அவனுக்கு பை-பை சொல்லி, அவனோட கையிலே முத்தம் குடுத்தேன். பதிலுக்கு இன்னிக்கு அவன் எனக்கு, பை-பை சொல்லி, கையிலே முத்தம் குடுத்தான். இதுபோய் தப்பான்னு மம்மிகிட்டே கேட்டேன். அதுக்குப் போய் என்னை அடிச்சுட்டா”.

“நான் ரொம்ப கவலையா இருக்கேன். நீ அம்மாவைத் திட்டு தாத்தா” என்றாள், இரண்டாம் வகுப்பு படிக்கும் என் பேத்தி அனு.

“அப்பா… கொஞ்சங்கூட மேனேர்ஸே இல்லாம, இவளோட கையிலே முத்தம் குடுத்தான் அந்த ராஸ்கல். ஸ்கூல்ல என்ன டிஸிப்பிளின் சொல்லிக் குடுக்கறாளோ. பிரின்ஸ்பாலிடம் ரிப்போர்ட் பண்ணலாம்னா, இவ நேத்திக்கு அவனுக்கு முத்தம் குடுத்தேன்னு சொல்லி மானத்தை வாங்கறா. அடிக்காம என்ன செய்யறது,” என்று பொரிந்து தள்ளிவிட்டாள் என் மருமகள்.

என்னையறியாமல், என் கைகள் இரண்டும், என் நெற்றியைத் தடவிக்கொண்டன.

“அறிவுகெட்ட நாயே… ஆறாங்கிளாஸ் படிக்கிறே. வெட்கமா இல்லே? யாருடா அவ?. தினசரி உன்னோட கூடவே ஸ்கூல்ல இருந்து தெருமுனை வரைக்கும் வராளாமே? நடு ரோட்ல வைச்சு உனக்கு முத்தம் குடுக்கறாளாமே? மளிகைக் கடைக்காரர் வீட்டுக்கு வந்து சொல்லிட்டுப் போறார். அப்பாவுக்கு தெரிஞ்சுது, உன் தோலை உரிச்சுடுவார்” என்று அம்மா மிரட்டும்போதே ஈரக்குலை நடுங்கிப் போனது.

குரலில் நடுக்கத்துடன், “அது, ராஜம்னு ஒரு அக்காம்மா. என்னோட ஸ்கூல்ல படிக்கிற ஃபிரெண்டுமா. அந்த அக்கா எட்டாங்கிளாஸ் படிக்கிறா. ஸ்கூல்ல ஈவினிங் ஸ்பெஷல் ஸ்டடீஸ் முடிச்சுட்டு ஏழுமணிக்குதானே விடுறா. அதான் ராஜம்-அக்கா துணைக்கு வந்து, வீட்டுகிட்டே விட்டுட்டு போவா. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நல்ல அக்காம்மா” என்று சொன்னேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இனிமே அந்தப் பொண்ணோட உன்னை பார்த்தேன்… தொலைச்சுடுவேன். நாளையிலே இருந்து நீ ஈவினிங் ஸ்டடிஸூக்கு போகவேண்டாம்” என்று கோபப்பட்டாள் அம்மா.

அதென்னமோ… அந்த பள்ளியில், ஆறாம் வகுப்பில், நான் சேர்ந்த நாள் முதலாக, ‘ராஜம்’ என் மீது, காட்டிய தூய அன்பு, என்னை அவளுக்கு அடிமையாக்கியது. பொதுவாக எல்லோருடனும் நட்புடன் பழகும் ‘ராஜம்’, ஏனோ என்மீது மட்டும், இனம்புரியாத பாசத்தை பொழிந்தாள்.

“அக்கா… எங்க வீட்டுக்கு போற வழியிலே, ஒரு ரயில்வே கேட்டு வருதில்லே… அதுக்கு பக்கத்திலே இருக்கிற நவாப்பழ மரத்திலேதான் “முனி” இருக்குதாம். அந்த இடத்தை தாண்டிப்போற வரைக்கும் எங்கூட வாக்கா” என்று ஒருநாள் அவளிடம் சொன்னேன்.

அன்றிலிருந்து, தினமும் டியூஷன் வகுப்பு முடிந்ததும், பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் என் வீட்டுத் தெருமுனைவரை, எனக்கு துணையாக, வருவாள் ராஜம்.

“ஏங்கா… நீ திரும்பி போகும் போது ‘முனி’ உன்னை பிடிச்சிக்காதா?” என்று கேட்ட எனக்கு, நெற்றியில் முத்தம் தந்துவிட்டு, “அக்கா, அந்த முனிக்கும் ஒரு முத்தம் குடுத்தேன்னா, அது ஓடிப்போயிடும்” என்றாள் சிரித்துக்கொண்டே.

அன்று, பள்ளியில், எங்கள் தமிழ் டீச்சர், “முப்பது திருக்குறளையும் தப்பில்லாம மனப்பாடமாய் ஒப்பிக்காத மாணவர்கள், வகுப்பிற்கு வெளியே போய், மண்தரையில் முட்டி போடுங்க” என்றார். மொத்த வகுப்புமே, ‘சுடுமணலில்’ முட்டி போட்டிருந்தோம்.

வேறு வகுப்பறையில் இருந்த ராஜத்தின் காதுகளுக்கு, விஷயம் போனது. நானும் சுடுமணலில், முட்டி போட்டிருப்பதை பார்த்ததும், பதறினாள்.
ஆத்திரமும் அழுகையும் பொங்க, எங்கள், தமிழ் டீச்சரிடம் போனாள். கிடுகிடுவென்று முப்பது குறளையும் அவளே ஒப்பித்து, டீச்சரிடம் மன்றாடி, எங்கள் எல்லோருக்கும் மன்னிப்பு வாங்கித் தந்தாள்.
அன்று பள்ளி வராண்டாவில், ராஜம்-அக்கா எனக்கு குடுத்த, ஆதரவான நெற்றி-முத்தத்தில், என் கால்முட்டியில் கசிந்த இரத்தம், சட்டென்று காய்ந்து போனது.

மூன்றாம் ஆண்டு ‘யூஜி’ எக்ஸாம் முடித்துவிட்டு, கல்லூரியிலிருந்து வீடுநோக்கி, சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். மறு பக்கமிருந்து, சாலையைக் கடந்து வந்த ஒரு பெண், நான் நடக்கும் பாதையில், கீழே கிடந்த குடிகாரன் ஒருவனை, தூக்கிவிட முயன்றாள். அருகே போனதும்தான் தெரிந்தது, அந்தப் பெண் என் ராஜம்-அக்காவென்று.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு, அன்றுதான் மீண்டும் ராஜம் அக்காவை பார்த்தேன். “அக்கா… இப்போ நான் டிகிரி முடிக்கப் போகிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றேன்.

“இல்லைடா… என் அம்மா நாலு வருஷத்துக்கு முன்னாடியே தவறிட்டாங்க. என் அப்பாதான் குடிகாரர்னு உனக்குத் தெரியுமே. என்னை படிக்கவேண்டாம்னு சொல்லி போன வருஷமே, எங்க சொந்தக்காரப் பையனுக்கு கட்டிக்குடுத்துட்டாரு. இதோ இவர்தான் என் புருஷன். இவரும் என் அப்பனாட்டமா குடிகாரனா இருக்கார்.
இப்போ எனக்கு ஒரு கைக் குழந்தையும் இருக்கு தெரியுமா? அந்த ஆம்பளைக் குழந்தைக்கு உன் பேரைத்தாண்டா வைச்சிருக்கேன்” என்றாள்.

என்னையறியாமல், ‘ராஜம்-அக்கா’ என்று, அவளை கட்டிக் கொண்டேன். “நீ இன்னும் நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கணும்டா” என்று சொல்லியபடியே என் நெற்றியில் வழக்கம்போல் ஒரு முத்தம் பதித்தாள்.

“ஏய்… எவனோடடி நடுரோட்டிலே சரசம் பண்ணுறே” என்று புருஷனின் போதை-உளரல் கேட்டதும், என்னைப் பார்த்து, “சரி சரி… நீ கிளம்புடா” என்றாள்.

காலம் உருண்டோடியது. சென்னையில் வேலை கிடைத்து செட்டிலாயிருந்தேன். எனக்கு திருமணம் நிச்சயமானது. ராஜத்தின் வீடு ஶ்ரீரங்கத்திலிருப்பதை கேள்விப்பட்டு, ஒருவழியாக தேடிக் கண்டுபிடித்து, அவளை பார்க்கப் போனேன்.

என்னைப் பார்த்ததும், “வாடா… எப்படி இருக்கே?” என்றாள். தன் குடிகார கணவன் இறந்தபிறகு, தனது இரண்டு குழந்தைகளின் வாழ்க்கைக்காக, ஒரு தனியார் மருத்துவ மனையில், நர்ஸாக வேலை பார்ப்பதாக சொன்னாள்.

“அக்கா… எனக்கு கல்யாணம். சென்னையிலேதான் நடக்கப்போகுது. நீ அவசியம் வரணும்” என்றேன்.

“நான் வருவது கஷ்டம்டா. நீ உன் சம்சாரத்தை கூட்டிகிட்டு என் வீட்டுக்கு வா” என்றாள். கொண்டு போன பழங்களையும், பத்திரிக்கையையும் அவளிடம் கொடுத்தபிறகு “அக்கா… எனக்கு உன் ஆசீர்வாதம் கிடையாதா?” என்றேன்.

அவளோ, என் அருகே வந்து, வழக்கம் போல், என் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள். உள்ளம் ஆனந்தத்தில், கரைபுரண்டோட “போயிட்டுவரேங்கா” என்றேன்.

அதன் பிறகு, ராஜத்தைப் பற்றிய எண்ணச் சுவடுகள் அழிந்தே போயிருந்தன. சுமார், நாற்பது வருடங்களில், பலமுறை ஶ்ரீரங்கத்தில் அவளைத் தேடினேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.

ஒருமுறை, குடும்பத்துடன், மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தேன். திருச்சியை கடக்கும்போது, எனக்கு, லோ-ஷுகர் ஆனதால், அப்படியே காருக்குள்ளேயே மயங்கிப்போனேன்.

பதறிப்போன, என் குடும்பத்தினர், ஹை-வேயருகே இருந்த ஒரு பெரிய தனியார் மருத்துவ மனையில், என்னை அட்மிட் செய்யக் கொண்டுபோனார்கள். அங்கே, ஸ்டெரெச்சரில் படுத்திருந்த எனக்கு, கிட்டத்தட்ட நினைவு போய்க்கொண்டிருந்தது.

திடீரென்று என் காதருகே, “டேய்… எழுந்திருடா. நான்தான்… ராஜம்-அக்கா” என்றக் குரலைக் கேட்டதும், என் விழிகள் திறந்தன.
கண் எதிரே ராஜம் இருந்தாள். குனிந்து என் நெற்றியில் அவளின் உதடுகளைப் பதித்து ஒரு முத்தமிட்டாள். எனக்குள் ஏற்பட்ட உந்துதலால், ‘அக்கா’ என்றபடியே எழுந்து உட்கார்ந்துவிட்டேன்.

என் மனைவியோ, ”நீங்கதான், இவரோட ஸ்கூல்ல படிச்ச ராஜம்-அக்காவா?” என்று கேட்டாள். ராஜமோ ஆச்சரியத்தில் கண்கள் மலர, என் மனைவியிடம், “உங்களுக்கு எப்படித் தெரியும்” என்றாள்.

“உங்களைப் பத்தி அடிக்கடி என் வீட்டுக்காரர் சொல்லிகிட்டே இருப்பார். அவருக்கு அக்கா இல்லாத குறையை, நீங்கதான் தீர்த்ததா சொல்லுவார். நீங்க அவருக்கு பலதடவைகள் குடுத்த “முத்தங்கள்” பற்றியும் என்கிட்டே சொல்லியிருக்கார்” என்று என் மனைவி சொன்னாள்.

எல்லோரும் என் மனைவியையும், ராஜத்தையும் அதிசயமாக பார்த்தார்கள்.

எனக்கு, சிறிய முதலுதவி செய்தார்கள். சிறிது ஓய்விற்கு பிறகு, ராஜத்தின் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டு, அன்று அவளிடமிருந்து, விடை பெற்றுக் கொண்டோம். அதன்பின், பலதடவை, ராஜத்துடன் ஃபோன் மூலமாக பேசினோம்.

“ராஜம் போனவாரம் இறந்துவிட்டாள்” என்று, நேற்றுதான் அவள் மூத்த மகன், எனக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தான்.

அப்படியே கண்களை மூடி ஈஸிச்சேரில் கிடந்த என்னை என் பேத்தி, “தாத்தா… கூடப்படிக்கிற பையனுக்கு, முத்தம் குடுக்கிறது தப்பான்னு கேட்டேன். பதில் சொல்லாம தூங்கறயா?” என்றாள்.

கண்களைத் திறந்தேன். என் பேத்திக்குப் பின்னால் ‘அருவமாய் ராஜம்’ தெரிந்தாள். “தப்பில்லேம்மா” என்று, என் உதடுகள் முணுமுணுத்தன. நீங்க என்ன சொல்லறீங்க?