தொடர்கள்
விளையாட்டு
தடகளமும்... பெருங்கடலும்...! - மரியா சிவானந்தம்

20210226102904584.jpg

கடந்த வாரத்தில் இரண்டு செய்திகள் நம் கவனத்தை ஈர்த்தன...

இரண்டு பெண் சாதனையாளர்களைப் பற்றிய செய்திகளே அவை. ஒருவர் தெலுங்கானாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சியாமளா கோலி, மற்றவர் நம் திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி. இவர்கள் வெற்றிக்கொடியை ஏந்தி வலம் வருகையில், நம் விளையாட்டுத் துறை இரண்டு இறகுகளை தன் சிரசில் சூடிக் கொண்டது.

ஐம்பதை நெருங்கும் பெண்களின் உலகம் சோர்வும், வலிகளும் மிக்கது என்று நாம் நினைப்போம். ஏறத்தாழ ஓய்வு நாடும் வயது! அந்த எண்ணத்தை உடைத்து, உலகின் கவனத்தை தன்பால் திருப்பி உள்ளார் 48 வயதான சியாமளா. இலங்கையின் தலைமன்னாரில் உள்ள சங்குமால் கடற்கரையில் இருந்து நீந்தத் தொடங்கி, பாக் ஜலசந்தியைக் கடந்து, தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு 30 கி.மீ தூரத்தை, 13 மணி நேரம் நாற்பது நிமிடத்தில் வந்து சேர்ந்தார். இந்த சாதனை மூலம் பாக் ஜலசந்தியைக் கடந்த முதல் இந்தியப் பெண்ணாகவும், உலக அளவில் இரண்டாவது பெண்ணாகவும் சியாமளா கொண்டாடப் படுகிறார்.

20210226102945768.jpg

சியாமளா கோலி தெலுங்கானவில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சமூகவியல் மற்றும் இணைய தள வடிவமைப்பு மற்றும் மல்டிமீடியா (Web Designing and Multimedia) படிப்பில் பட்டம் பெற்றவர். ‘ஜி.எஸ் டிஜிட்டல் ட்ரீம் டிசைனர் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி பெற்று, பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர். சாதிக்க துடிப்பவருக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சியாமளா. கடந்த ஆண்டே பாக் ஜலசந்தியைக் கடக்க இவர் தயாரானார்... இடையில் இடையூறாக வந்த கொரோனா இவரது வெற்றியை தள்ளிப்போட்டது. உள்ளத்தில் வலிமை கொண்டவருக்கு, உடலும் துணையாய் நிற்கும் என்பதற்கு சியாமளா நல்ல எடுத்துக்காட்டு.

இரண்டாமவர்... திருச்சியைச் சேர்ந்த இளம் புயல் தனலட்சுமி. தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்ட இந்த இளம் தாரகை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் எந்தவித ஆரவாரமுமின்றி சர்வதேச ஓட்டப்பந்தய வீராங்கனைகளின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

பாட்டியாலாவில் 14ஆம் தேசிய ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து, ஆசிய தடகள புயல்கள் டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார். மார்ச் 19 ஆம் தேதி நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, பி.டி.உஷா சரித்திரமாக்கிய சாதனையை உடைத்துள்ளார். 1998 ஆம் ஆண்டு இதே பிரிவில் பி.டி உஷா 23.30 வினாடிகளில் இலக்கைக் கடந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சாதனையை தகர்த்துள்ளார் தனலட்சுமி. இப்போட்டியில் பங்கு பெற்ற ஹிமா தாஸ், இரண்டாம் இடத்தையே பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது. சப்தமின்றி சாதனை செய்துள்ள தனலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

20210226103243504.jpg

விளையாட்டுக்களம் பணம் படைத்தவர்களுக்கானது, அரசியல் செல்வாக்கின் தலையீடுகள் தாண்டி, ஏழைகளால் அங்கு சாதிக்க முடியாது என்ற கருத்தை, இந்த சாதனையால் தனலட்சமி உடைத்துள்ளார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த தனலட்சுமியையும், அவர் தங்கைகளையும் தாயாரின் சொற்ப வருமானமே காப்பாற்றி வந்தது. தனலட்சுமியின் அசாத்திய திறமையைப் பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகம் கண்டு பிடித்தார். அவர் தந்த பயிற்சியும், உற்சாகமும், தனலட்சுமியின் இடைவிடாத உழைப்புமே இந்த மாபெரும் வெற்றியை சாத்தியமாக்கி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பரவலாகி இருக்கிறது. வெற்றி பெற்ற பின் தனலட்சுமி தரையில் அமர்ந்துக் கொண்டு, இரு கைகளிலும் தன் காலணியை ஏந்திக் கொண்டு தலை கவிழ்ந்து இருக்கும் படம் அது. “நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்தேன். இந்த வெற்றியைக் காண இயலாத என் தந்தையை நினைத்துக் கொண்டு இருந்தேன்” என்கிறார். மனதை உருக வைக்கும் இப்படம், தான் இதுவரை கடந்து வந்த கடினமான பாதையையும், இனி அவர் குவிக்க இருக்கும் வெற்றிகளையும் சூசகமாக உணர்த்துகிறது.

20210226103328947.jpg

இரண்டு பெண்களின் வெற்றி சாதனைகளைப் பற்றி நாம் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில்.... பெண்களுக்கு மன உளைச்சலைத் தரும் இரு அருவருக்கத்தக்க செய்திகளை பற்றியும் சொல்ல வேண்டி உள்ளது.

இந்த தேர்தல் களத்தில் பெண்களை குறி வைத்துத் தாக்கும் இழிமையை பேச்சாளர்கள் செய்ய... அதை கட்சித் தலைமைகள் கண்டு கொள்ளாமல் போவதை பார்த்து நம் மனம் நொந்து போகிறது.

ஒரு புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர்... பெண்களின் இடுப்பு 8 போல இல்லை என்று கவலைப்படுகிறார். இன்னொரு கட்சியின் பேச்சாளர், பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தைப் பற்றி நாகரிகம் இல்லாத சொற்களில் விமர்சிக்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பிற்போக்கான கருத்துக்களை இன்னும் இந்த சமூகம் தலையில் சுமந்துக் கொண்டிருப்பதையும், இந்த அரசியல் கட்சிகள் அவற்றை வழி மொழிவதையும் காணும் போது வேதனையையும் மன உளச்சலையும் ஏற்படுத்துகிறது.

இந்திய சமூகம், உண்மையில் பரந்து விரிந்த தடகளமாக தனலட்சுமிகளுக்கு இருக்கிறது, சியாமளாக்களுக்கு விஷப்பாம்புகள் ஊர்ந்திடும் பெருங்கடலாக இருக்கிறது. இதில் வியர்க்க, விறுவிறுக்க ‘மோதி, மிதித்து விட்டு’ ஓடியும், மூச்சுத்திணற நீந்தியும் எம் பெண்கள் சாதிக்கிறார்கள், விளையாட்டிலும், நிஜ வாழ்க்கையிலும்..!