
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான தோழர் டிகேஆர் என்று அழைக்கப்படும் டி.கே. ரங்கராஜன் தனது மாநிலங்களவை உரைகள் - கடிதங்கள் என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இவரது மாநிலங்களவை உரை அனைத்தையும் தோழர் ச. வீரமணி தொகுத்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தனது அணிந்துரையில் - ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி என்பவர், எல்லா சமயங்களிலும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நாடியை பிடித்துப் பார்க்கும் வல்லமை படைத்தவராக இருக்க வேண்டும். மக்களின் நலன் என்று உறுதி ஏற்றுக் கொள்வதும், அவர்களின் நலன்களுக்காக போராட தயாராக இருப்பதும் ஒரு வெற்றிகரமான மக்கள் பிரதிநிதியின் முத்திரைச் சின்னம் ஆகும் என்று டிகேஆர்-ஐ பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார் எச்சூரி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் தனது வாழ்த்துரையில் டி.கே. ரங்கராஜனைபற்றி குறிப்பிடும்போது, தனது முதல் உரையிலேயே மத்திய அரசினுடைய தாராளமய பொருளாதாரக் கொள்கையை சுட்டிக்காட்டிய தோழர் டிகேஆர், இந்த அரசு தொழிலாளர் நலனுக்காக பாடு படுவதை விட கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல... உச்சநீதிமன்றம், வேலை நிறுத்த உரிமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருப்பதையும், அவையின் கவனத்துக்கு கொண்டு சென்றவர். வேலை நிறுத்த உரிமை, அடிப்படை உரிமை என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் தோழர் ஜி ராமகிருஷ்ணன்.
டிகேஆர் இந்த புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இந்த 12 ஆண்டுகளில்... காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், அதன் பிறகு பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியில் இருந்தது. முன்னது பெரு முதலாளித்துவ கட்சி என்று தங்களது தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார் டி.கே.ஆர். இதேபோல் பாரதிய ஜனதாவை பற்றி குறிப்பிடும்போது பெரு முதலாளித்துவ மதவாத கட்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
டி.கே. ரங்கராஜன் மாநிலங்களவையில் எல்லோருக்கும் ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். விவசாயி, தொழிலாளி, தலித் பழங்குடியினர், ஒப்பந்த ஊழியர்கள், பெண்கள் பாதுகாப்பு, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, கரும்பு விவசாயிகள், முஸ்லிம் சகோதரர்கள், இலங்கைத் தமிழர்கள், வறட்சி மற்றும் வெள்ளம், மரண தண்டனை என்று அவர் பேசாத விஷயமே இல்லை. அவர் குரல் மாநிலங்களவையில் பேதமின்றி எல்லோருக்காகவும் ஒலித்தது என்பதுதான் உண்மை. அதற்கு இந்த புத்தகமே சாட்சி.
மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை டிகேஆர் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ் உள்பட ஐந்து மொழிகள் செம்மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதற்கு பதில், ‘செம்மொழி வாரம்’ கொண்டாடுங்கள் என்று யோசனை தெரிவித்திருக்கிறார். சமஸ்கிருத மொழி எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறுவது ஒரு வரலாற்றுப் பிழை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதேபோல் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டிகேஆர், மரண தண்டனை என்பது வன்முறை கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறதே ஒழிய... அது ஒரு தீர்வாக இல்லை என்றும் சுட்டிக் காட்டி இருக்கிறார். மரணதண்டனையை ஒழிப்பது மக்களால் வரவேற்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்தி பேசிய டி.கே.ஆர், ஒரு மதத்தால் நாட்டில் ஒற்றுமையை கொண்டுவர முடியாது. மதத்தால் நாட்டில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் என்றால் உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நாடுகளும், ஒரே தேசமாக இருந்திருக்கவேண்டும். அதேபோன்று அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒரே தேசமாக இருந்திட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள், மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிறார். குறிப்பாக... கல்வியை, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலுவான வாதத்துடன் மாநிலங்களவையில் டிகேஆர் பேசியிருக்கிறார்.
இதேபோல் மென்மையான இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடித்ததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில், மாநிலங்களவையில் டிகேஆர் உள்ளது உள்ளபடி என்ற வகையில் பேசியிருக்கிறார். இதேபோல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது மட்டும், மக்களுக்கு அமைதியை தந்துவிடாது, இது வரலாறு. 1975இல் அவசரநிலை பிறப்பிக்கப்படாமல், நாட்டை காங்கிரஸ் கட்சியால் ஆட்சி செய்ய முடியவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து 77 இல் அது தோற்கடிக்கப்பட்டது, இதுவும் வரலாறுதான் என்று சொல்லியிருக்கிறார்.
இதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு பேசியுள்ள டிகேஆர், எஸ் ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் மதசார்பின்மை நடவடிக்கைகளுக்குள், மதம் ஆக்கிரமிப்பது கறாராக தடை செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும் நீதிமன்றம், மதச்சார்பின்மையை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடமை சட்டப்படியும், நிர்வாக உத்தரவு படியும் அரசுக்கு உண்டு என்றும் அது கூறியிருக்கிறது. ஆட்சியில் ஒரு அங்கமாக மதத்தை அங்கீகரிப்பது தடை செய்யப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியிருக்கிறது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி டிகேஆர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேசியிருக்கிறார்.
இப்படி பல வரலாற்றுத் தகவல்களை சுட்டிக்காட்டி தனது வாதத் திறமையை மாநிலங்களவையில் வெளிப்படுத்திய டிகேஆர், மாநிலங்களவையின் வரலாற்று சிறப்புமிக்க உறுப்பினர்கள் பட்டியலில் நிரந்தரமாக இருப்பார் என்பதுதான் உண்மை.

Leave a comment
Upload