
மிஸ்டர் ரீல், திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை பார்க்கப் போனபோது, அவர் பிரச்சாரத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். “உங்க தொகுதிக்கு தானே போகிறீர்கள்” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் மி.ரீ.
அப்போது உதயநிதி ஸ்டாலின்... “திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் நான்தான் என்று உறுதியா, அடிச்சு சொல்லிட்டாங்க தொகுதி மக்கள்... அதுக்கப்புறம் எனக்கு அங்கு என்ன வேலை..? மீதி தொகுதியில் போய், தேர்தல் பிரசாரம் பண்ணி சூரியனை ஜெயிக்க வைக்க வேண்டாமா... அதான் கிளம்புறேன்” என்றார்.
அந்த சமயத்தில் ஒரு தொண்டர் ஓடிவந்து, உதயநிதி ஸ்டாலினிடம்... “அண்ணே ராமசாமி மயிலாப்பூர் தாலுகா ஆபிஸ் பியூன். நான் அவர்கிட்ட மணி என்னன்னு கேட்டேன்... அவர் திமிரா நான் வாட்ச் கட்டிக்கலை, அதனால மணி எவ்வளவுன்னு தெரியாது என்று சொன்னார். வாட்ச் கட்டாவிட்டால் என்ன..? யாரிடமாவது கேட்டு சொல்ல வேண்டியதுதானே” என்று அந்தத் தொண்டர் சொன்னதும்... உதயநிதி ஸ்டாலின்... “அதானே” என்று சொல்லிவிட்டு, லேப்டாப்பை திறந்து ராமசாமி மயிலாப்பூர் தாலுகா ஆபீஸ் பியூன் என்று பதிவு செய்து கொண்டார். கூடவே, “நாம் ஆட்சிக்கு வந்ததும்... நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் 56563 பேர்” என்றார்.
அப்போது மிஸ்டர் ரீல்... “உங்க கட்சிக்காரர் வாட்ச் கட்டாதவர்கிட்ட போய் டைம் என்னன்னு கேட்டு இருக்கிறார்.. அவர் எப்படி சொல்வார்? பாவம். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா உங்களுக்கே தெரியலையா” என்று கேட்க...
உடனே உதயநிதி ஸ்டாலின்... “ஓ.. நீங்க எடப்பாடி ஆதரவாளரா” என்று கேட்க... அதற்கு மிஸ்டர் ரீல்... “நான் யார் ஆதரவாளரும் இல்லை” என்று பதில் சொல்ல...
உடனே உதயநிதி... “வேண்டுமானால் என் ஆதரவாளராக இருக்க விரும்பினால்.. நீங்கள் விருப்ப மனு தாருங்கள், பரிசிலிக்கிறேன்” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்... “என்ன புதுசா இருக்கு... தேர்தலில் போட்டியிட தான் விருப்ப மனு தர சொல்வாங்க, இப்ப ஆதரவாளராக இருக்கனும்னா கூட விருப்ப மனு தரணுமா” என்று கேட்க...
அதற்கு உதயநிதி... “திமுக என்பது ஒரு இயக்கமாக இருந்தது எங்க தாத்தா காலத்தில். இப்போ திமுக ஒரு சிஸ்டம். ஒருத்தர் கூட இந்த சிஸ்டம் சரியில்லை என்று சொல்லக் கூடாது. ஒருத்தர் அப்படி சொல்லிக்கொண்டே இருந்து... கட்சியை துவக்காமலே ரிடையர் ஆனார். அந்த மாதிரி யாரும் சொல்லக்கூடாது. திமுகவை ஒரு சிஸ்டமா மாத்த முயற்சி செய்கிறேன். இளைஞரணி தலைவராக இருந்து என்ன சாதித்தேன் என்று அண்ணன் துரைமுருகன் கேள்வி கேட்டா... என்னால பதில் சொல்லாமல் இருக்க முடியாது, அதுக்கு தான் இப்படி எல்லாம் ஏற்பாடு” என்று உதயநிதி சொல்ல...
உடனே மிஸ்டர் ரீல்... “உங்களை கேள்வியெல்லாம் கேட்பார்களா..? அந்த அளவுக்கு யாருக்காவது திமுகவில் அதிகாரம் இருக்கா?” என்று கேட்க... அதற்கு உதயநிதி ஸ்டாலின்.. “திமுக உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சி, இங்கே யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால், பதில் எதிர்பார்க்கக்கூடாது. காரணம்.. அதுதான் எங்க சிஸ்டம்” என்று பதில் சொல்ல... “இது என்ன.. புது சிஸ்டமா இருக்கிறது” என்று மிஸ்டர் ரீல் அங்கலாய்த்தார்.
சிஸ்டம்னா சிஸ்டம் தான் என்ற உதயநிதியிடம்... “நீங்க தானே வருங்கால துணை முதலமைச்சர். திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி துறையை உங்ககிட்டதானே தருவார் உங்க அப்பா” என்று மிஸ்டர் ரீல் சொல்லி ஆழமாய் பார்த்தார்.
அதற்கு உதயநிதி... “அப்பா, பையன் எல்லாம் சித்தரஞ்சன் சாலை வீட்டில் தான். வெளியே வந்ததும் அவர் கட்சித் தலைவர், நான் இளைஞர் அணி. எனவே, துணை முதல்வர் என்ற சின்ன வட்டத்துக்குள் நான் போக விரும்பவில்லை” என்றார்.
“அப்ப நீங்க வெறும் சட்டமன்ற உறுப்பினர்தானா?”
“அதெல்லாம் இல்லை. திமுக எப்போதும் தொண்டர்கள் கட்சி. அது தொண்டர்களை பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பது தான் வழக்கம். நான் கட்சியின் கடைசி தொண்டன். துரைமுருகன், டி.ஆர். பாலு, ஏவா வேலு, கே.என். நேரு போன்ற சக தொண்டர்கள் என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்க விரும்புகிறார்கள். திமுக எப்போதும் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய கட்சி. அவர்கள் விருப்பத்திற்கு எப்போதும் குறுக்கே நிற்காது” என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல... உடனே மிஸ்டர் ரீல்... “அப்ப நீங்க தான் முதல்வரா?” என்று கேட்க...
அதற்கு உதயநிதி ஸ்டாலின்... “அது எனக்கு தெரியாது. ஆனால், தொண்டர்கள் விருப்பம் அதுதான் என்றால்... அவர்கள் விருப்பத்திற்கு நான் அடிபணிந்து இருப்பேன். இது எனக்கு என் தாத்தா சொல்லித் தந்தது. நான் எப்போதும் தாத்தாவின் கொள்கையை பின்பற்றுகிறவன்” என்று சொல்ல...
உடனே மிஸ்டர் ரீல்... “அப்போ கட்சித் தலைவர் ஸ்டாலின் தான், முதல்வர் வேட்பாளர் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ராகுல் காந்தி கூட அப்படித்தான் சொல்கிறார்” என்று கேட்க... அதற்கு உதயநிதி ஸ்டாலின்... வேட்பாளர் வேறு, முதல்வர் வேறு.. நீங்கள் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். தேர்தலில் என் தானைத் தலைவன் தளபதி தான் முதல்வர் வேட்பாளர். ஆட்சியை பிடித்ததும், அவர் சட்டப் பேரவை தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அந்தப் பதவியில் அவரை உட்கார வைக்க இந்த கடைசி தொண்டன் ஆசைப்படுகிறான். காரணம்... முதல்வர் நாற்காலியை விட, பேரவைத்தலைவர் நாற்காலி 4 இன்ச் உயரம். இப்படி ஒரு உயர்ந்த பதவியில் அவரை உட்கார வைத்து, அழகு பார்க்கவேண்டும் என்ற இந்த கடைசி தொண்டனின் ஆசையை என் கட்சி தலைவர் நிறைவேற்றுவார், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது மட்டுமல்ல... பேரவைத் தலைவர் உள்ளே நுழையும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட எல்லோரும் எழுந்து மரியாதை செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு உன்னத பதவியில், உயர்ந்த பதவியில், என் தலைவரை வைத்து அழகு பார்க்க விரும்புகிறேன். இது என் நீண்ட நாள் கனவு, எங்கள் குடும்பம் இதுவரை வகிக்காத பதவி பேரவை தலைவர் பதவி. அந்தப் பதவியில் நான் என் அன்புத் தளபதி, திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினை உட்கார வைத்து அழகு பார்க்க விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு, உதயநிதி ஸ்டாலின் மோட்டுவளையை பார்க்கத் துவங்கி விட்டார்.
சினிமா நடிகர் கனவு சீன் ஓபன் ஆகியிருக்கும் என்றபடி மிஸ்டர் ரீல் புறப்பட்டார். போகும்போது பேரவைத் தலைவர் ஸ்டாலின் என்று சொல்லிப் பார்த்தார்... அரசியலில் இப்படியும் நடக்கும்.. அப்படியும் நடக்கும் என்பது உண்மைதானே என்றபடி புறப்பட்டார் மிஸ்டர் ரீல்.

Leave a comment
Upload