வங்காளதேசத்திலிருந்து கவியரசு, கணேஷ்!!

வங்காளதேசத்திலிருக்கும் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடு சுந்தர்பன்ஸ்.
அங்கு வங்காளப் புலி மிகப் பிரசித்தி. இப்படித்தான் ஒரு முறை மூன்று நாட்கள் விசிட் அடித்து விட்டு ஒரே ஒரு நாள் அதிகாலை புலி உறுமுவதை மட்டும் கேட்டு விட்டு வந்தேன்.
அப்படிப்பட்ட காட்டுக்குள் திடீரென புலியை நேருக்கு நேராக கண்ணுக்கு எதிரில் பார்த்தால் எப்படி இருக்கும்?
ஒரு வருடமாக வெளி நாடு செல்லாத மோடியைப் பற்றி அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்.
பிரதமருக்கும் போரடித்திருக்கும் நிச்சயமாக.
இந்த இதழ் வலையேறும் நாள் சுடச் சுட செய்தியாக வங்காள தேச டாக்காவிலிருந்து கவியரசு, கணேஷ் மற்றும் சம்பத் பிரதமர் மோடியை மிக அருகில் பார்த்த செய்தியை புல்லரித்துப் போய் பகிர்கிறார்கள்.
பிரதமரின் டாக்கா விசிட், பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களுக்காக மற்றும் வங்காளதேசத்தின் 50வது சுதந்திர தினத்திற்காக. பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசத்திற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததே இந்தியாதான்.
அது மட்டுமல்லாது... இரு நாடுகளுக்கும் உள்ள பரஸ்பர ஒப்பந்தங்கள் கையெழுத்திட.
நமக்கு அதெல்லாம் முக்கியமல்ல... நம் தமிழ் நண்பர்களின் மோடி சந்திப்பு அனுபவம் தான் நமக்கு தேவை.

மொத்தமே 50 பேருக்கு தான் அழைப்பு. பிரதமருடன் அமர்ந்து அளவளாவதற்கு அல்ல... அவர் அரசு நிகழ்ச்சி நடக்கும் பான் பசிஃபிக் சோனார்கா நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழையுமுன் அவரை வரவேற்க மட்டுமே இந்த அழைப்பு.
அதில் எட்டு பேர் மட்டுமே தமிழர்கள்.
அழைப்பின் முதல் கண்டிஷன். கோவிட் சோதனை செய்து நெகட்டிவாக இருக்க வேண்டும்.
பின்னர் முதலில் இந்திய தூதரகத்திற்கு சென்று விட்டு, வெள்ளி காலை அவர்களுடன் பிரத்யேக காரில் பான் பசிஃபிக் வந்து காத்திருக்க வேண்டும்.
பிரதமர் உள்ளே நுழைந்து, சந்திப்புக்களுக்கு போகும் முன்னர் திருப்பதி தரிசனம் போல சில நிமிடங்கள் அல்லது நொடிகள் தான்.
மோடி கம்பீரமாக உள்ளே சிவப்பு கம்பளத்தில் நடந்து, மிதந்து வர... நம் தமிழர்களின் வணக்கம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் கோஷம் களை கட்டியது.
கவியரசுவிடம் கேட்டேன் எப்படியிருந்தது அனுபவம் என்று?
அனைத்து தமிழர்களுமே சிலிர்த்துப் போனது என்று தான் சொல்கிறார்கள்.

அத்தனை வணக்கம் சொன்னீர்களே... கிட்டே வந்து வணக்கம் சொன்னாரா என்று கேட்டதும்... சொல்லியிருப்பார்.. அவரும் முகமூடி அணிந்திருந்ததால் கேட்கவில்லை அது மட்டுமல்ல வரவேற்பு கூட்டத்தில் நின்றிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் பிரதமர் குதூகலித்துப் போய் அவர்களுடன் பேசத் துவங்கி விட்டார் என்றார்.
கணேஷ் சொல்லும் போது ஏன்யா கேக்கற நேத்து வரைக்கும் போனை சார்ஜிலயே போட்டு வெச்சிருந்தேன், இன்னிக்கு கரெக்டா மோடிய பாக்கறதுக்கு முன்னாடி பாட்டரி போச்சு. ஒரு போட்டோ கூட எடுக்க முடியலை என்று வருந்தினார்.
ஆனா கரோனாவுக்கு பின்னர், பிரதமர் கொஞ்சம் டவுனா இருப்பார்னு நினைச்சோம். ஆனா மனுசன் அடுத்த ரவுண்டு கிளம்பிட்டாரு போல. அதே கெத்து, அதே உற்சாகம் என்றார்.


எனக்கு சில வருடங்களுக்கு முன் ஷாங்காய் வந்த பிரதமரை நண்பன் சாய்ராமுடன் விமானத்தை தவற விட்டு, ரயிலை தவற விட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு போய் பார்த்தது நினைவுக்கு வந்தது.
மொத்தத்தில் ஒரு வருட கரோனா வன வாசத்திற்குப் பின் முதல் முறையாக வங்காள தேசத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்றதில் நம் நண்பர்கள் வானில் உலா போவது போல மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
வணக்கம்.. வணக்கம் என்று கேட்டதும் தேர்தலை மனதில் கொண்டு மோடி கொஞ்சம் அருகே வந்து வணக்கம் சொல்லி உங்கள் ஓட்டு தாமரைக்கே என்று சொல்லியிருந்தால் எப்படியிருந்திருக்கும்????
வெளிநாட்டு பயணத்தில் பிரோட்டோக்கால் இதற்கெல்லாம் அனுமதி தராது!!!

Leave a comment
Upload