தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

சமூகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் நம்பகமானவைகளா??

20210226224348428.jpeg

மக்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்வோம்...

க.ஜெயராமன், சைதாப்பேட்டை.

முன்னாள் அமைச்சர் எவவேலு வருமானவரி சோதனையில் 3.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக காலையில் செய்தி வருகிறது.. மாலையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ‌மறுப்பு தெரிவித்து, ஒரு செய்தி வருகிறது. நாங்க எதை தான் நம்புவது? இதையெல்லாம் பார்க்கும்போது நம்பகத்தன்மை குறைவது போல தான் நினைக்கிறோம்.


பா.ராஜா, மும்பை.

கட்சிக்கு ஒரு பத்திரிகை நியூஸ் சேனல்ன்னு அவங்கவங்க அவங்களுக்கு சாதகமா செய்தி போடுற காலம் இது. இந்த சமூகவலைத்தளங்கள் தான் பல சமயங்களில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.


லதா கண்ணன், பெங்களூர்.

பெரிய பெரிய அரசியல்வாதிங்க, தொழிலதிபர்கள் தான் செய்தி நிறுவனங்கள் நடத்துவாங்க... இந்த சமூகவலைதளங்கள் என்பது பொதுமக்கள் தாங்கள் கண்ணால் பார்க்கும் செய்திகளை செய்தியாக, வீடியோவாக எடுத்து வெளியிட்டு பல ஆயிரம் பேர் அதை பகிர்ந்து மற்றவர்களுக்கு, தெரியப்படுத்துவதால் மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். சமூகவலைதளங்கள் என்பது மக்கள் மக்களுக்காக நடத்தும் செய்தி நிறுவனங்கள் என்றுகூட சொல்லலாம்.


சி.கோகுல், கோயம்புத்தூர்.

கேரளாவுல 12 வயசு பையன் சமூகவலைத்தளங்களில், தலைமுடியை நெருப்பு பற்ற வைத்து ஸ்டைல் செய்யும் வீடியோ ஒன்றை பார்த்து, அதே போல் தனது‌ முடியை நேராக்கி கொள்கிறேன் என்று தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி பத்த வைத்து கொண்டு இறந்து போய்விட்டான். இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு செல்ஃபோன் தான் பொழுதுபோக்கே..! அதில் பார்க்கும் காட்சிகள் எல்லாம் உண்மை என்று நம்பும் குழந்தைகள்... உடலளவில், மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தி கொள்வது மட்டுமில்லாமல், இது போன்று உயிரிழப்பும் ஏற்படுவது கொடுமையாக இருக்கிறது.


ம.ஜானகிராமன், கடலூர்.

பாதி பொய்..! மீதி கற்பனை..!


கோ.வெங்கடாசலம், திருச்சி.

இந்த பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து ஒரு சாமி க்ரூப் மாதிரி வாட்ஸ்அப்ல வச்சிக்கிட்டு.. தீடிர்னு ஒரு நாள் “வீட்டு ஆம்பளைங்களை வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சிட்டு, சனிக்கிழமை சாயங்காலம் 5 விளக்கை ஏத்தி வாசல்ல வச்சா புருஷனுக்கு நல்லது, அண்ணன் தம்பிக்கு‌ நல்லது.. இல்லாட்டி உசுருக்கு ஆபத்து”ன்னு எதையாவது கிளப்பி உட்டுறாங்க..

நம்ம வீட்டம்மாவும் இத நம்பி வெளிய போனா அவ்வளவு தான்ன்னு மிரட்டி வூட்ல உக்கார வச்சிடுதுங்க.. இப்படிதான் போன வாரம் “வூட்டு ஆம்பளைக்கு கொரோனா வராம இருக்கணும்னா... வேப்பிலை மட்டும் கட்டிக்கிட்டு, பக்கத்து மாரியம்மன் கோயில்ல நம்மள மல்லாக்க படுக்க வச்சு.. வயித்து மேல மாவிளக்கு மாவு உருண்டை புடிச்சு வச்சு, அதுல விளக்கேத்தனும்ன்னு சொல்றாங்க”ன்னு சொன்னா..! அவ்வளவு தான்..!கொரோனா காலம்ன்னு கூட பார்க்கலையே நானு.. ஆபீஸில வேலைன்னு பொய் சொல்லி அவசரத்துல பேண்ட் கூட எடுக்காம வெறும் ரெண்டு சட்டைய மட்டும் பேக் பண்ணிட்டு எடுத்தேன்‌ பாருங்க சென்னைக்கு ஜூட்டு. இன்னும் ஒரு மாசம் இங்க தான் நமக்கு ஜாகை..


ர.மாணிக்கம், தாம்பரம்.

நல்லவேளை..! டி.வி மற்றும் பத்திரிகைகள் மேல் இன்னும் சிறிது நம்பகத்தன்மை இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை சரிப்பார்த்து கொள்ளலாம்.


சு.பத்மநாபன், நங்கநல்லூர்.

“புல்வாமா தாக்குதலை நாங்க தான் பண்ணோம்” என பாகிஸ்தான் பாராளுமன்றத்திலேயே இம்ரான் கட்சியின் மந்திரிகள் சொல்லி அந்த வீடியோ ஆதாரங்கள் இந்தியாவில் பரவினால் கூட “இல்லவே இல்லை..! அவர்கள் செய்யவில்லை..! இது இந்திய தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்திய ஆளுங்கட்சி செய்த சதி..!” என்று இன்றும் கூவிக்கொண்டிருக்கும் கேடுக்கெட்ட அறிவில்லாத கூமுட்டைகள் இருக்கும் வரை சமூகவலைத்தளங்களில் உண்மை செய்திகள் வந்தாலும், அதற்கு மதிப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


ஸ்ரீஜித்முரளி, தாம்பரம்.

ஃபேஸ்புக் - பொய்யி
வாட்ஸ்அப் - பொய்யோ பொய்யி
Twitter - பொய் பொய்யோ பொய்யி ..!!
அவ்வளவு தான்.. சிம்பிள்..


சி.யுவராஜ், கேளம்பாக்கம்.

முகநூல்ல போலிச் செய்திகளைப் பரப்புர ஆளுகளை 1 லட்சம் பேரு ஃபாலோ பண்றானுங்க. பொய்யா உண்மையான்னு பாக்காம அத ஷேர் பண்ண ஆயிரக்கணக்கான வாத்து மடையர்கள் இருக்கிற வரை சமூகவலைத்தளங்களின் நம்பகத்தன்மை பத்தி யார் கவலை படப்போறாங்க!!?


டி.சுரேஷ் பாபு, உள்ளகரம்.

சமூக வலைதளங்களில் எவ்வளவோ நன்மைகளும் இருக்கின்றன. நம்ப‌த்தகாத செய்திகளை, சரிபார்த்து விட்டு செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே மக்கள் அதை பகிர வேண்டும். இதில் சமூகவலைதளங்களை குறை கூறி பயனில்லை. சாதாரண குடிமக்களும் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


கி.தம்புராஜ், ஆதம்பாக்கம்.

ஒன்னு நல்ல ஞாபகம் வச்சிக்கிங்க..

நிஜ செய்திகளுக்கும், போலி செய்திகளுக்கும் இடையே ஒரு மெல்லிய வித்தியாசம் தான் இருக்கு. அதாவது நெருப்பில்லாம புகையாது என சொல்லலாம். ஆனா அது வெறும் சாம்பிராணி புகையா கூட இருக்கலாம். அதனால எனக்கு ஒரு செய்தி வந்துதுனா முதல்ல மற்ற நியூஸ் சேனல்ல சரி பார்ப்பேன். அடுத்தது கூகுள்ல பார்ப்பேன். அதுலேயே உண்மை தெரிஞ்சிடும்.


ராஜன் கணபதி, திருச்சி.

கடந்த மூணு வருஷமா இந்திய ஊடகங்களில் ‘போலிச் செய்திகள்’ வெளியிடுவது சுமார் 200 சதவீதம் அதிகரிச்சு இருக்குன்னு சொல்றாங்க. அதிலேயும் எங்கயாவது தேர்தல் நடந்தா, இன்னும் ஜரூரா நடக்குது.. இதுல எந்த செய்திய நம்புறது... எந்த கட்சிக்கு ஓட்டு போடுறதுன்னு பொது மக்களுக்கு தான் ரொம்ப டெலிக்கேட் பொசிஷன் ஆகுது.


பரிமளா கண்ணப்பன், வண்டலூர்.

ஐயோ ..இந்த வாட்ஸ்அப் தகவல்கள் இருக்கே..!! நம்ம நாட்டுல வாட்ஸ்அப் தான் மெயினா போலி செய்திகளுக்கு மையமா இருக்கு.. உண்மையிலேயே டார்ச்சருங்க.. செய்தி உண்மையா, பொய்யான்னு படிச்சு கூட பாக்காம... அப்படியே நூறு பேருக்கு ஃபார்வோர்ட் பண்ணி உசுற வாங்கிடுவாங்க.. அதுவும் கொரோனா வந்ததிலிருந்து... இத சாப்பிடு, அத குடி, இத செய்ன்னு தமிழ்நாட்டுல 8 கோடி பேரும் டாக்டர் ஆனாங்க பாருங்க... கொரோனாவே பரவால்லங்கிற அளவுக்கு ஆகி போச்சு போங்க..


ஜெ.வரதராஜன், கடலூர்.

சில சமயங்களில் பொய்யை தான் பரப்புகிறார்கள். இதனால் செய்திகளில் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். சில நேரங்களில் இத்தகைய தவறான தகவல்களால் கலவரங்களும் வன்முறையும், உயிரிழப்பும் ஏற்படுகின்ற துரதிர்ஷ்டவசமான நிலை உண்டாகிறது.


ம.நாராயணன், தாம்பரம்.

“திமுக தேர்தல் அறிக்கையில் விபரீத வாக்குறுதி”ன்னு சொல்லி “பட்டியல், பழங்குடி இனத்தினர் பிற்படுத்தப்பட்ட முன்னேறிய வகுப்பு பெண்ணை திருமணம் செய்தால் 60,000 பணமும், தாலிக்கு 8 கி தங்கம் தராங்களாம் பாத்தீங்களா.. இந்த அக்கிரமத்தை..?? நம்ம சாதி பொண்ணுங்களை ஆள் வச்சு தூக்க போறாங்க..!” என்ற ரேஞ்சில் திரித்துக் கூறி... சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய ஒரு பெண் மீது, பல்வேறு சமூகங்களிடையே வன்மத்தைத் தூண்டியதாக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் இப்ப உத்தரவு போட்டிருக்காங்க. அந்தப் பெண் சொன்னதில் உண்மை என்னவென்று பார்த்தால், இது கடந்த 30 வருஷமா கருணாநிதி முதல்வரா இருந்த காலந்தொட்டே இந்த விதி அமலில் இருக்கு. அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் கூட “டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்”ன்னு பெயரை மாத்தி அந்தம்மா தொடர்ந்து இதை நடத்தினாங்க. இன்னும் சொல்லப்போனா மத்தியரசு கலப்பு திருமணத்தை ஊக்கப்படுத்தும் விதமாக 2013-லிருந்து டாக்டர் அம்பேத்கர் கலப்புத் திருமணம் மூலமான சமூக ஒருங்கிணைப்புத் திட்டம் (Dr Ambedkar scheme for social Integration through inter caste marriage) என்ற பெயரில் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடரா இருந்தா 2.5 லட்சம் உதவி தொகை தற்ராங்க. இப்ப சொல்லுங்க.. சமூகவலைத்தளங்களில் வதந்திகள் தான் நிறைய பரப்பப்படுகிறது.