
“மாமா, கதவை சாத்திகிடுங்க! நான் மைதானம் வரை போய் வருகிறேன். படுத்திருங்க... நான் திரும்பவந்ததற்கப்புறம் நீங்க எந்திரிக்கலாம்” என சொல்லிவிட்டு மைதானத்திற்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சி செய்ய கிளம்பினார் மூர்த்தி.
மூர்த்தியின் மாமானார் ராமலிங்கம், வயது 88. நீரிழிவு மற்றும் தனிமை எனும் நோயால் பாதித்தவர். ஒரு மகன் மற்றும் ஒரு மகளின் தந்தை.
மகனுக்கு கல்யாணமாகி வெளிநாட்டில் வசிக்கிறார். மனைவியை இழந்து மகளுடன் இருந்தவர், மகளும் தனது மகளின் இறுதியாண்டு மருத்துவ படிப்புக்காக .. சென்னையில் வாசம் செய்யவேண்டிய கட்டாயம். இங்கே, மருமகன் மூர்த்தியுடன் ஒரு வருடமாக தனிக்குடித்தனம்.
காலை முதல் கையும் ஓடலை, காலும் ஓடலை, ஆசிரியர் மூர்த்திக்கு.
இருக்காதா பின்னே? இன்னியோட அவரோட சர்வீஸ் முடியப்போகுது.
ஆசிரியரா சேர்ந்து, அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி ஓய்வு இன்றுடன்.
மாலையோட வீட்டுக்குப்போனால், அவ்வளவுதான்... நாளை முதல் இந்தப் பள்ளிக்குள் ஆசிரியனாக வரமுடியாது. காலை கிளம்பும்போதே மனைவி சொல்லித்தான் அனுப்பினாள். ‘அழாதிங்க... சந்தோஷமா பள்ளியிலே நேரத்தை செலவிட்டுட்டு வாங்க’ என்று.
ஆனால், இவருக்கு ஒரே டென்சன். பென்சன் பேப்பர்ஸ் எல்லாம் ஒழுங்கா வருமா? நம்ம மேலே எதுவும் குறை இல்லாமல் இருக்கனும் என ஒரே கவலை. இந்தக் காலத்தில் அரசு பணியாளரின் முக்கியமான கவலை இது.
மூத்த ஆசிரியை ஒருவர்... “சார்! ஓய்வுக்குப்பிறகு என்னச்செய்யப் போறீங்க?”
“பெரிசா ஒன்றும் யோசிக்கல! என் மனைவி ரெண்டு பிள்ளைகளை படிக்கவச்சு, திருமணம் செய்து வைக்கறதுக்குள்ளே ரொம்பவே சிரமப் பட்டுட்டா!அவளுக்கு உதவியா இருந்து வாழ்க்கையை இனிமேதான் ரசித்து வாழனும்” என்று தன் கனவு ஆசையை பகிர்ந்து கொண்டிருந்தார்.
நாம ஒன்று நினைச்சா எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசன், என்றார்
அப்பர் பெருமான். சும்மாவா..?
மூர்த்தி என்கிற மனிதனை நல்ல ஆசிரியராக, நல்ல தலைமை ஆசிரியனாக விளங்கியவரை, நல்ல பண்பாளாரை பாராட்டி பரிசுகளை அளித்து விடை கொடுத்தனுப்பியது பள்ளி.
மைதானத்தில் நடைப்பயிற்சி முடித்து, மாமாவுக்கு பிடித்த கீரை, புடலங்காய் வாங்கிக் கொண்டு வீடு வந்தார்..
மாமா! மாமா! என கூப்பிட... கழிப்பறையில் சப்தம் வர.. நிம்மதியானார்.
வாய்தான் மாமா என அழைக்கும். தனது அப்பாவை சிறு வயதிலேயே இழந்ததால்... மாமா மீது அளவு கடந்த பாசமும், மரியாதையும் கொண்டவர் மாப்பிள்ளை மூர்த்தி.
மாமாவும் மூர்த்தியிடம் பாசத்துடன், அவரது இரண்டாவது பிள்ளை போல் பழகுவார். ஆனால், மாப்பிள்ளை என மரியாதை கலந்த பயம் அவருடன் அதிகம் பழகாததால் உண்டு.
“மாமா உடம்பு ஏதும் செய்யுதா? முகமே சரியில்லையே” என மூர்த்திக் கேட்டதும்...”
“என்னோமோ பண்ணுது சொல்லத் தெரியலை. வெளியே சரியா போகமாட்டுது. ரொம்ப கஷ்டமா இருக்கு, மூன்று நாளாக சரியா போகலை!”
“நீங்க சரியா சாப்பிடறதில்லை, அதனால் கூட அப்படியிருக்கலாம். நிறைய தண்ணீர் குடிங்க, மனசு கவலையாக இருந்தாலும், அப்படித்தான் இருக்கும் மாமா” என்றார் மூர்த்தி.
“நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை?” என வார்த்தையில் கனிவு காட்டினார் மாமா.
“கும்பகோணம் போய் டாக்டர் செல்வராஜிடம் காண்பித்து விட்டு வந்துடலாம்” என்று கூப்பிட்டார் மூர்த்தி.
“வேணாம் மாப்ள... நாளைக்குத்தான் வெளிநாட்டிலிருந்து பையன் வாரானே, அவன் கூட போகலாம். அவனுக்கு எம்மேலே பாசம் அதிகம் மாப்ள... அவனுக்கு எவ்வளவு அக்கறை தெரியுமா? நீங்க சிரமப்படாதீங்க, இரண்டு நாள் பொறுத்துக்குங்கப்பா, நான் வந்துவிடுறேன்னு சொல்லியிருக்கான்.”
“இதிலே என்ன சிரமம் மாமா? நாம போகலாம், உங்க முகமே காட்டுதே, உங்கள் உடல் நிலை சரியில்லையென்று...” எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டார்.
மறுநாள் வெளிநாட்டிலிருந்து வந்த மகன், மூர்த்தியிடம்... “ மாமா...நான் இரண்டு நாள் லீவுலேதான் வந்தேன், சட்டுனு போகணும்.. ஆகையால், வரும்போதே சென்னையிலே உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அப்பாவைச் சேர்க்க ஏற்பாட்டை செய்துவிட்டேன். நான் இப்ப, அப்பாவை அழைத்துப் போகவே வந்தேன்” என்றான்.
அதிரந்து போன மாப்பிள்ளை மூர்த்தி... “ஏன் இங்க என்ன பிரச்சினை?” என கேட்க..
“இல்ல மாமா சரியா வராது, உங்களுக்கும் சிரமம். உங்க ஓய்வு காலத்திலே அக்காவை பிரிந்து நீங்க தனித்தனியா இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு மாமா! இதுலே அப்பா வேற.”
“எங்கள் மேலே உனக்கு இருக்கிற அக்கறைக்கு நன்றி. நான் செய்த பணிக்குத்தான் ஓய்வே தவிர எனக்கு இல்லை. என்னைப்பொறுத்தவரை ஓய்வுக்குப்பிறகு ஊதியத்திற்காக உழைக்கிறதை விட ஊழியம் செய்யறதுதான் சிறப்பு. அதுவும் மாமா வேறு என் அப்பா வேறுன்னு நான் நினைக்கலை... அதுவும் மாமாவாலே எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. பாவம், அவர்தான் என் சாப்பாட்டை சகிச்சிக்கிட்டு சாப்பிட வேண்டிருக்கு. அவருக்கு உணவை விட, உணர்வை புரிந்துககொள்ள ஒருவர்தான் இப்போதைய தேவை.காசு கொடுத்து அவர்களுக்கு செளகரியம் செய்து தருவதை விட... அவங்க அசெளகரியத்தை காது கொடுத்து கேட்பதைத்தான் விரும்புவாங்க! மாமாவை இனி தனிமைப்படுத்துவது சரியில்லை. நான் பார்த்துக்கிறேன், நீ கவலையை விடு” என்றார்.
இவர்கள் பேசியது பக்கத்து அறையிலிருந்த மாமாவின் காதிலும் விழ, வெளியே வந்தவரின் விழியோரம் நீர் கோர்த்திருந்தது...
“என்ன மாமா என்னாச்சு?” என மாப்பிள்ளைக் கேட்டதும்....
“மனசு லேசான மாதிரி இருக்கு, ரொம்ப நாளைக்குப் பின்னே இன்னைக்குத்தான் கலகலனு வெளியே போச்சு, பாரம் குறைந்த மாதிரி இருக்கு” என்றவர்...
“எனக்கு முதியோர் காப்பகம் சென்று சொகுசா இருக்கிறதை விட, என் மருமகன் கையால செய்து தருகிற புடலாங்காய் கூட்டே போதும்” என்றார் கண்கள் கலங்க.

Leave a comment
Upload