
கடந்த ஆண்டு கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி-யாக இருந்த எச்.வசந்த்குமார் கொரோனா நோய் தொற்றால் காலமானார். இதன் காரணமாக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது.
பா.ஜ. சார்பில் மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த்குமாரின் மூத்த மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் தாக்கல் செய்த வேட்பு மனுவில்... தனக்கு அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு ருபாய் 40.45 கோடி, அவரது மனைவிக்கு 60.37 லட்சம் அசையும் சொத்துக்கள் மற்றும் ருபாய் 55 லட்சம் தங்க நகைகள், தனது இரண்டு குழந்தைகளின் பெயரில் 13 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும், வசந்த் & கோ நிறுவனத்தில் தனக்கு 25 சதவிகித ஷேர் இருப்பதாகவும் விஜய் வசந்த் குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ஜ. வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்த அபிடவிட்டில், ரொக்கமாக ருபாய் 48,580/-, வங்கி இருப்பு ருபாய் 50.56 லட்சம், அசையா சொத்துகளில் விவசாய நிலத்தின் மதிப்பு ருபாய் 2.51 கோடி, மற்ற நிலங்களின் மதிப்பு ருபாய் 4.39 கோடி, வணிக கட்டிட மதிப்பு ருபாய் 8.25 லட்சம் என மொத்த மதிப்பு ருபாய் 6.99 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தும், பிஜேபி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனும் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கள் கிராமங்களில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை எச்.வசந்த்குமார் நிறைவேற்றி தந்திருக்கிறார். ஒருசில கிராமங்களை தத்தெடுத்து, அக்கிராமங்களுக்கு தேவையான ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர், கழிவறை, சாலை, கல்வி ஆகியவற்றை செய்து கொடுத்திருக்கிறார் என்று தோவாளை கிராம மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரசாரத்திற்க்கு செல்லும் போது நினைவு கூர்கின்றனர்.
குமரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சேதப்படுத்திய போது, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார், மத்திய அரசுடன் பேசி, பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் நிதியுதவியும் செய்ததை மீனவர்கள் நினைவுகூறுகிறார்கள்.
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது, குமரி மாவட்டத்திற்கு நிறைய சாலைகள் மற்றும் மத்திய நிதியை பெற்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்ற பெருமையுடன் தொகுதி மக்களிடம் வாக்கு கேட்டு வலம் வருகிறார். பொன்ராதாகிருஷ்ணன் தனது காரில் போகும் போது தொகுதிவாசிகள் மனுக்கள் கொடுத்தால், அதனை வாங்கி பரிசிலிக்க அனுப்பி வைப்பார். மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் தேர்தலில் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக வாய்ப்பு என்று தொகுதியில் பரவலான பேச்சு உள்ளது. பொன். ராதாகிருஷ்ணன் அமைதியாக தனது பணிகளை ஆற்றுவதால், இவரை தொகுதிவாசிகள் விலாங்கு மீன் என்று செல்லப்பெயர் வைத்து, வட்டார வழக்கில் அழைக்கின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளராக தேர்தல் களத்தில் சுழன்று வரும் விஜய்வச்ந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தந்தையை போல் மக்கள் பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. விஜய்வசந்த் இளமையுடன் தேர்தல் களத்தில் சுற்றிச் சுழலுவதால் தொகுதி மக்கள் இவரை செல்லமாக சுறாமீன் என்று வட்டார வழக்கில் அழைக்கிறார்கள்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வெற்றி ரேஸில் சுறா மீன் முந்துகிறதா அல்லது விலாங்கு மீனா என்ற பரபரப்பு தொகுதி முழவதும் உள்ளது.

Leave a comment
Upload