

காவிரி மைந்தன்

உன்னுடன் உலாவந்த ஓராயிரம் இடங்களில்..
அன்பே!
வான் மேகங்கள் வந்து வாழ்த்துக்கள் பாடிநிற்க.. கார்மேகங்கள் தங்கள் நன்கொடையை தந்துசெல்ல.. அன்றொருநாள்.. குடகுமலை மேல்நின்று ரோஜாத் தோட்டத்தில் நடைபயின்றது நினைவுண்டா?
தவழ்ந்து வரும் வெண்பஞ்சு மேகங்கள் நம் தோள்களைக் கடந்துசென்ற காட்சியெல்லாம் இயற்கையின் சீதனங்களல்லவா?
இன்று நினைத்தாலும்.. இதயம் துள்ளிடும் உற்சாகம் பெறுமல்லவா?
செவ்வானம் ஆங்காங்கே தென்பட்ட வெண்மேகங்கள்.. இன்னும் பல இயற்கை சூழல்.. காதல் வாசஸ்தலமாய் காவிரி உற்பத்தியாகும் குடகுமலையை எழுதிவைக்கவா?
கற்பனைகள் ஊற்றெடுக்கும் மலையகத்தின் நடுவில்.. எப்பகுதி தோன்றியதோ.. எல்லாம் ஒருமிக்க சங்கமிக்க.. தலைக்காவிரி புறப்படும் இடத்தை தரிசனம்பெற்றோம்!
அகத்தியர் கமண்டலத்திலிருந்து வழிந்த தண்ணீர் காவிரியாய் பெருகிவந்தது என்று புராணம் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும்.. அதைப் போலவே ஒரு சிறிய இடத்தில் தோன்றும் இந்த நதியின் உற்பத்திக்கு அந்த மலைத்தொடர் முழுவதுமிருந்து ஊற்றெடுத்தும்.. மழைநீராகவும் பொழிந்த நீரெல்லாம் வழியும் காட்சி மனதில் நிறைகிறது!
கல்மழை.. ஐஸ்கட்டி மழை என்பார்களே அந்த மழை வந்ததன்றோ.. நீரின் ஜாலங்கள் விதவிதமாய் காட்டிநின்ற அந்தப் பேரழகை.. ஒரு முறை பார்த்தால்போதும்.. உள்ளத்தில் பதியம்போடும்!
உன்னுடன் உலாவந்த ஓராயிரம் இடங்களில் உயர்ந்த இடம் இதுவென்றேன்! உடனே நீ ஆம் என்றாய்!
அன்பினில் தாலாட்டி, ஆசையில் நீராட்டி கண்மணி நீயென காதல்மொழிபேசி இன்பத்தின் எல்லைகளை எத்தனையோ முறை தொட்டு.. இதழ்நீராடிக் களித்த இன்பவேளைகள் என்றைக்கும் நினைவலைகளில் நீந்திக்கிடக்க..
புன்னகை ஏந்திடும் பூமுகம் கொண்டவளாய்.. என்னுயிர் காதலி என்கின்ற உறவாலே எனை உயிர்ப்பிக்கும் ஆயிழையே.. என் ஆருயிரே.. அஞ்சுகமே.. என உனக்கான சுபலாலி பாடுகிறேன்.. சுகம்.. சுகம் அது என்று சொல்லி என் மடிதனில் துயில்கொள்!!
விழியிடம் விழிசொல்லும் பாடங்கள் அத்தனையும் கற்றுக்கொள்ள புகலிடம் நாளுமே தந்து நில்! அவசரம் ஏதும் இங்கு வேண்டாம்.. அணைப்பதிலும் நிதானம் காட்டு நீ!
புதுசுகம் இது என்று தேடும் படலத்தில் நீ எந்தன் ரசிகை.. நான் உந்தன் ரசிகன்!
இந்த சமதளப்பாதையில் வேகங்கள் காட்டியபின் விண்ணோக்கிப் பறக்கும் விமானம்போல் இறக்கை விரிப்போம்!

Leave a comment
Upload