தொடர்கள்
தேர்தல் திருவிழா
ஃபாலோ-அப் - “எந்த குதிரை பேரமும் இல்லை... சவாரி மட்டும்..!” - ஸ்வேதா அப்புதாஸ்

20210226163032677.jpeg

கடந்த வாரம் 20-3-2021 விகடகவியில் “ராஜா மேல் அமர்ந்து வந்த வேட்பாளர்” என்ற தலைப்பில் ஜாலியான ஒரு தேர்தல் கட்டுரை எழுதி இருந்தோம். அந்த வேட்பாளர் ஊட்டி தொகுதி படுக தேச பார்ட்டி நிறுவனர், தலைவர் மஞ்சை மோகன். கட்டுரை வெளிவந்த பின், தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார்...

அதை தொடர்ந்து நமக்கு ஏகப்பட்ட போன் கால்கள்... ஒரு பத்திரிகை நண்பர் போனில், “மஞ்சை மோகன், வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார். அஇஅதிமுக மற்றும் பி.ஜே.பி-யுடன் குதிரை பேரம் பேசி, ஆளும்கட்சிக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்... மேலும்... சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் நம்மிடம் கூறினார்.

நாம் மஞ்சை மோகனை தொடர்பு கொண்டு, வேட்பு மனு வாபஸ் பெற்றதற்கு காரணம்... மற்றும் ஆளும்கட்சியுடன் குதிரை பேரம் நடைபெற்றதா என்று கேட்டோம்.

“எங்கள் படுக தேச பார்ட்டியின் ஒரே தேவை, குறிக்கோள்... எங்கள் நீலகிரி படுக இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்... திமுக முயற்சி செய்கிறோம் என்று தான் கூறுகிறார்கள்... அதே சமயம் 28-1-2021 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிந்த கையுடன் மத்திய அரசாங்கத்திடம் பேசி பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்... மேலும் பாரதிய ஜனதா கட்சி, கண்டிப்பாக எங்களின் கோரிக்கையை ஏற்று முடித்துக் கொடுப்போம் என்று உறுதி அளித்துள்ளதால் தான் இந்த முடிவை எடுத்தேன்..

20210226163139673.jpeg

நான் சிறுபான்மையினருக்கு எதிர்ப்பாளர் போல சித்தரிப்பது சரியானது அல்ல...

எங்க மாவட்டம் முழுவதும் உள்ள படுக ஹட்டிகளில்.. (கிராமம் ) முஸ்லிம் சமுதாயத்தினர் கடைகள் வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.. அவர்களுடன் நல்ல சகோதர தொடர்பு உண்டு. கிறிஸ்தவர்களிடம் அதிக உறவு உண்டு. என் அப்பா விசுவநாதன், திருப்பூர் பிஷப் உபகார ஸ்வாமி பள்ளியில் பயின்றவர்.... நான் மின்சார வாரியத்தில் பணிபுரிந்த போதும், சரி இப்பொழுதும் சரி... அவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.. ஐ.ஏ.எஸ். பயிற்ச்சி துவங்கும் போது, எனக்கு உதவி கரம் கொடுத்தது கிறிஸ்தவ நிறுவனங்கள். என் மகள் படித்தது ஊட்டியில் கிறிஸ்தவ பள்ளியில். இப்படி இருக்க.. என்னை குற்றம் சொல்வது சரியில்லை.
நீலகிரியை பொறுத்தமட்டில் ஜாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இல்லை... எல்லோரும் சகோதர, சகோதிரிகளாக தான் பழகி வாழ்கிறோம். அதை யாராலும் பிரிக்க முடியாது....

நான் எந்த குதிரை பேரமும் செய்யவில்லை.. குதிரை சவாரி தான் செய்தேன்.. என்று கூறினார் மஞ்சை மோகன்.”