வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்…!; 1000 பவுன் தங்க நகை…!!

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட... வாக்களர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ‘துலாம்’ சரவணன் என்பவர் களத்தில் குதித்து உள்ளார். அவருக்கு ‘குப்பைதொட்டி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
‘துலாம்’ சரவணன் வெளியிட்ட தேர்தல் அறிக்கை தற்போது நாடெங்கும் ஹாட்டாபிக் மாறியுள்ளது. வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் அவர், உள்ளூர் நிருபராக இருப்பதுடன், பல்வேறு மார்க்கெட்டிங் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், மக்களை கவரும் வகையில் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்ததும்... அவை தந்த வாக்குறுதிகள் பல காற்றிலேயே ‘காணாமல்’ போய்விடுவது தொடர்கதைதான். இதுவரை எந்த அரசியல் கட்சியுமே அறிவிக்காத வகையில், சுயேட்சை வேட்பாளரான ‘துலாம்’ சரவணன் அவரது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். நான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றால், என் தொகுதி மக்களை நிலவுக்கு அழைத்து செல்வேன். அவர்களுக்கு நீச்சல் குளத்துடன் 3 மாடி வீடு, என் தொகுதி வாக்களர் குடும்ப வங்கி கணக்கில் ஒரு கோடி பணம்... வீட்டுக்கு ஒரு சிறிய ஹெலிகாப்டர், அனைவருக்கும் ஐ-போன், தொகுதியில் தண்ணீர் வழித்தடம் அமைத்து வீட்டுக்கு ஒரு படகு, என் தொகுதியில் திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளம்பெண்களுக்கு 1000 சவரன் தங்க நகை என தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் இந்த சுயேட்சை வேட்பாளர். அரசியல் கட்சிகளே இவரது வாக்குறுதிகளை கேட்டு சற்று மிரண்டுதான் போயிருப்பார்கள் என்று தொகுதி மக்களிடையே ஒரு விவாதமே நடக்கிறதாம்.
வாயில் வடை சுடும் சில அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை விட, மனமார மக்களுக்கு ஆறுதலான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சுயேட்சை வேட்பாளர் ‘துலாம்’ சரவணன் தொகுதியில் ஹீரோவாக வலம் வந்து வாக்கு சேகரிக்கிறார்!

Leave a comment
Upload