தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஸ்டெர்லைட்!!! யாருக்கு வெற்றி? - ஜாசன் (மூத்தப் பத்திரிகையளர்)

20210330174007479.jpeg

வேதாந்தா நிறுவனம் எப்படியாவது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் திறந்தே ஆகவேண்டும் என்று எல்லா முயற்சிகளும் செய்தது. ஒரு கட்டத்தில் அமித்ஷா, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு செய்தார். இது சம்பந்தமாக அவர் தமிழக முதல்வர் எடப்பாடியிடம் பேசவும் செய்தார். ஆனால், எடப்பாடி இது தேர்தல் ஆண்டு... இந்த ஒரு விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு போதும். ஊதி.. ஊதி.. பெரிதாக்கி விடுவார்கள் என்று மறுத்துவிட்டார். அப்போது வேதாந்தா சார்பாக அங்கு பேசிய ஒரு முக்கியப் பிரமுகர், தூத்துக்குடி மக்கள் பெரும்பாலும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள், அங்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கூட சொன்னார். அப்போது எடப்பாடியார் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், எதிர்க்கட்சிகள் இதை பெரிய பிரச்சனையாகிவிடும். நீங்கள் திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்று என்னை சொல்லிவிட்டு... இப்போது, நீங்களே திமுகவுக்கு சாதகமான ஒரு விஷயத்தை செய்யச் சொல்கிறீர்கள் என்றார். அதன் பிறகு அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார் அமித்ஷா.

ஸ்டெர்லைட் ஆலை காற்றை மாசுபடுத்துகிறது என்பதைத்தான் திரும்பத் திரும்ப சமூக ஆர்வலர்கள் சொல்லி, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தார்கள். இப்போது அதே வாய்வுக்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கசொல்லி பேச வைத்து விட்டார்கள். இது வேதாந்தாவிற்க்கு கிடைத்த முதல் வெற்றி.

20210330174031690.jpeg

ஆக்சிஜன் தட்டுப்பாடு... மக்கள் அவதி என்ற ஊடகங்களின் பரபரப்பு செய்தி வேதாந்தாவிற்கு சாதகமானது. உச்சநீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் அரசு அனுமதித்தால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அரசுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரித்து தர தயார் என்று அனுமதி கேட்டது.

மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்றது. தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றது. அப்போது, ஸ்டெர்லைட் நிறுவனம் எங்களால் ஒரு நாளைக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இப்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையில், இது நோயாளிகளை காப்பாற்ற பெருமளவில் உதவி செய்யும் என்று வாதாடியது.

20210330174411888.jpeg

ஆனால் தமிழக அரசு, அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கனவே விதிமுறைகளை மீறினார்கள் என்பதால்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டது. அதன் பிறகு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர், மக்கள் கருத்தை கேட்க முடிவு செய்து கூட்டத்தைக் கூட்டினார். தங்கள் வாழ்வாதாரம் ஆலை மூடியதால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அது திறக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் சார்பாக பேசியவர்கள் கருத்து சொன்னார்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால், மதிமுக மாவட்ட செயலாளர் இதை கடுமையாக எதிர்த்தார். இந்த கூட்டத்தைக் கூட்ட சொல்லியது யார்? மத்திய அரசா, மாநில அரசா, முதல்வரா என்று கேட்டார். மாவட்ட ஆட்சியாளர், அந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அதற்கு பதில்... ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்தலாமா என்று கேட்டார். அப்போது, தொழிலாளர்கள் சார்பாக ஆதரவு குரல் எழுந்தது. அப்போதும் மதிமுக செயலாளர், ஆலையே வேண்டாம் என்று சொல்கிறோம். எந்த சூழ்நிலையிலும் இந்த ஆலை திறக்கக் கூடாது என்று ஆணித்தரமாக அவர் கருத்தை சொன்னார். ஆனால் மாவட்ட ஆட்சியாளர், அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது.... நீதிபதிகளும் இந்த ஆலையை மத்திய அரசு அல்லது மாநில அரசு ஏற்று நடத்தலாமே என்று யோசனை சொன்ன போது... இரண்டு அரசு சார்பு வழக்கறிஞர்களும், வாய்தா வாங்கி சென்றுவிட்டனர்.

20210330174511265.jpeg

சீமான், கமல்ஹாசன் இருவரும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கவே கூடாது என்று தங்கள் கருத்தை அறிக்கை வாயிலாக பதிவு செய்தார்கள். வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று அவரும் கருத்து சொன்னார்.

இதைத்தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்க முடிவு செய்து, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டியது. திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுக்கு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சிகள், மதிமுக இருவரும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பில்லை.

20210330174144579.jpeg

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பாக கனிமொழியும், ஆர்எஸ் பாரதியும் கலந்து கொண்டார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும். திமுக சார்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். அவர் பேசும்போது, நாடு முழுவதும், ஏன்... தமிழ்நாட்டில் கூட ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் பிளான்ட்டை மட்டும் இயக்கி, மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து மனித நேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவு தானே, தவிர.. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அல்ல... என்று சொல்லி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்றார்.

தூத்துக்குடி திமுகவினருக்கு, கனிமொழியின் இந்த ஸ்டெர்லைட் ஆதரவு பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடி - திமுக வேட்பாளர் கீதா ஜீவன், நாம் ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம் என்று சொல்லி தானே ஓட்டு கேட்டோம்... இப்ப நாம்ப நன்றி சொல்ல போனா, மக்கள் நம்பளை விரட்டு வாங்க என்று புலம்ப ஆரம்பித்தார். தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட பதிமூன்று பேர் குடும்பங்களும், சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் சேர்ந்தது. அவர்களுக்கும் இது அதிர்ச்சி.

திமுக ஸ்டெர்லைட் ஆதரவு முடிவு எடுத்து விட்டது என்ற பேச்சு பரவலாக வரத் தொடங்கியதும் இதுவே வேதாந்தா நிறுவனத்துக்கு பெரிய வெற்றி என்ற பேச்சும் வரத்தொடங்கியது

20210330174207930.jpeg

ஆனால் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில்... நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் திறக்கப்படாது என்று ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.

ஆனால், முக்கியக் கட்சிகள் கூட்டம் என்று ஒரு கூட்டத்தை கூட்டி, தொகுதி பாராளுமன்ற திமுக உறுப்பினரை வைத்து ஆலையை திறக்கலாம் என்று சொல்ல வைத்து விட்டார் எடப்பாடி. நாளையே யாராவது கேட்டால் கூட.. அவர், கனிமொழி மீது திருப்பி விடுவார் என்று அதிமுக தரப்பு, நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது.

வைகோ, திருமாவளவன் இருவரும் திமுகவின் இந்த முடிவைப் பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை.

வேதாந்தா நிறுவனம், முதலில் முற்றிலும் இலவசம் என்று சொல்லியது. இப்போது ஆயிரம் டன் மட்டுமே இலவசமாக தர முடியும் என்று தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டது. இதேபோல் உச்சநீதிமன்றத்தில், அரசால் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியாது, எங்களால் தான் முடியும் என்றும் வாதாடி அதற்கும் அனுமதி வாங்கியது. இதேபோல் உள்ளூர் சமூக ஆர்வலர்கள், இந்தக் குழுவில் இருக்கக்கூடாது என்று சொல்லி அதிலும் வெற்றி பெற்று விட்டது வேதாந்தா நிறுவனம். இப்போது அரசு ஆலையை திறக்க, அனுமதி உத்தரவுடன் கண்காணிப்பு குழுவையும் நியமித்து ஆணை வெளியிட்டது. ஒட்டகம் டெண்ட்டுக்குள் மூக்கை நுழைத்து விட்டது, முழு உடம்பு நுழைவது எல்லாம் வேதாந்தா நிறுவனத்துக்கு ஒரு மேட்டரே இல்லை.