தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

அதிருப்தியில் துரைமுருகன்...

20210330193130658.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும், மேசை மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை பார்த்து, “நீர் கூட ஏதாவது யாகம் செய்கிறீர்களா” என்று கேட்டார். நாம் அதற்கு... “இது வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக நீர். தலையில் தெளித்துக் கொண்டால், எந்த நோயும் வராது என்று ஒரு அன்பர் எங்களுக்கு கொடுத்தார்” என்றதும்... விகடகவியாரும் பயபக்தியுடன், அந்தக் கலச நீரை தலையில் தெளித்துக் கொண்டார்.

அதிமுக அமைச்சர் எம்.சி. சம்பத் பதினோரு சிவாச்சாரியார்கள் மற்றும் திருமுறையாளர்கள் தலைமையில் 108 மண் கலசம், 108 பித்தளை கலசம், மூன்று வெள்ளிக்கவசம், இரண்டு தங்க கலசம். இது தவிர, செப்புக் கலசம் என்று 234 தொகுதிகளிலும், அதிமுக மாபெரும் வெற்றியை பெற வேண்டுமென்று கொல்லிமலையில், பிரமாதமான பிரம்மாண்டமான ஒரு யாகத்தை நடத்தினார். அந்த யாகத்தை வீடியோ எடுத்து முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும் அனுப்பியிருக்கிறார்.

சிவாச்சாரியார்களும் அமைச்சரிடம் கருத்துக்கணிப்பு சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதுபற்றி அமைச்சர் யாரிடமும் பேசுவது இல்லை. யாராவது கேட்டாலும் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என்று சிரித்தபடியே மழுப்புகிறாராம் என்றார் விகடகவியார்.

இரண்டாம் தேதி ஊரறிந்த ரகசியம், வெட்டவெளிச்சமாக போகிறது. அதற்குப் பிறகு இவரைப் போய், யார் கேட்கப் போகிறார்கள் என்று நாம் சொன்னதும்... அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுக்கும், இப்போது யாகங்களில் நம்பிக்கை அதிகரித்துவிட்டது. இதெல்லாம் ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் தொடங்கியது. ஸ்டாலின் காலத்தில், துர்கா ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

சரி... கருத்துக்கணிப்பு விஷயத்துக்கு வாருங்கள் என்றோம்.

கருத்துக் கணிப்பு முடிவுகளை ஓபிஎஸ் நம்புகிறார். ஆனால், எடப்பாடியார் இதெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா..? எனக்கு நம்பிக்கை இல்லை என்று தெம்பாக தான் இருக்கிறார்.

அதே சமயம்... அதிமுக வட்டாரத்தில் சில செய்திகள் வலம் வருகிறது என்று விகடகவியார் சொன்னதும்... அந்தச் செய்திகளை சொல்ல வேண்டியது தானே என்றோம் நாம்.

நான் சொல்வதற்குள் நீங்கள் குறிக்கிட்டு விட்டீர்கள் என்ற விகடகவியார், ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் எடப்பாடியுடன் அடிக்கடி பேசி, புள்ளி விவரக் கணக்கு எல்லாம் சொல்லி, நாம்தான் ஆட்சியில் அமர்வோம் என்று சொல்கிறார். இதை நான் உமக்கு ஏற்கனவே சொன்னேன் அல்லவா. அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலைக்கு வந்ததும், இதே புள்ளி விவர கணக்கை எல்லாம் சொல்லி, பாட்டாளி மக்கள் கட்சியால் தான் அதிமுக பெருவாரியான வெற்றி பெற முடிந்தது. எனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு, துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பாராம் மருத்துவர் அய்யா என்று விகடகவியார் சொன்னதும்...

இதை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்று நாம்கேட்டோம்... அதற்கு விகடகவியார்... அதெல்லாம் எனக்கு தெரியாது, அரசியலில் இன்றைக்கு நடப்பது, நாளைக்கு நடக்காது. நாளைக்கு நடப்பது, நாளைக்கு மறுநாள் நடக்காது. எல்லாம் அரசியல் சித்து விளையாட்டு தான் என்று சொல்லி சிரித்தார்.

எடப்பாடியாரின் நம்பிக்கைக்குரியவர் வலதுகரம் வேலுமணி. ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அவர் கோவாவிற்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்க போய்விட்டார். இந்த விஷயமே எடப்பாடிக்கு இரண்டு நாள் கழித்துதான் தெரிந்ததாம். என்ன ஆச்சு..? ஏன் அப்படி என்று எடப்பாடியார் யோசிக்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பின்பு முதல்வரை, துணை முதல்வர் நலம் விசாரித்தார். ஆனால் வேலுமணி, செல்பேசியில் நலம் விசாரித்தார் என்றார் விகடகவியார்.

“இதன் மூலம் நீர் சொல்லவருவது என்ன என்று நாம் கேட்டோம்?”

“இதற்கு விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது. இது எனக்கு கிடைத்த தகவல் அவ்வளவுதான்..” என்று சொல்லிய விகடகவியார், அடுத்த செய்திக்கு தாவினார்.

கருத்துக் கணிப்பில், கொங்கு நாட்டில் திமுக 33 முதல் 35 இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுகவிற்கு 17 முதல் 19 இடங்களில் தான் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது எடப்பாடியை ஆச்சரியப்பட வைக்கிறது. கொங்கு நாட்டை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அமைச்சர்கள், முதல்வர் உட்பட... அப்படியிருக்கும்போது அங்கு எப்படி இந்தச் சரிவு ஏற்படும் என்று அச்சம் பாதி, சந்தேகம் பாதியுடன் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. அதே சமயத்தில், ஓபிஎஸ் மாவட்டங்களான தென் மாவட்டங்களில், அதிமுக கணிசமாக வெற்றி வாய்ப்பை பெரும் என்று கருத்துக்கணிப்பு சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் எடப்பாடிக்கு புளி கரைக்க வைத்திருக்கிறது.

சரி.. “திமுக-வுக்கு இந்த கருத்துக் கணிப்பில் சந்தோஷம்தானே?” என்று நாம் கேட்டோம்.

“அப்படியெல்லாம் இல்லை. கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டு, இது எப்படி.. அது எப்படி.. என்று மூத்த தலைவர்கள், தனது மருமகன் என எல்லோரையும் குடைந்து எடுத்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் முடிவு வந்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வரும் என்று தெளிவுபட அவர் எல்லோரிடமும் சொல்லிவிட்டார். நான் இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திற்கு அரை மணி முன்பு, மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் எல்லோரிடமும் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கையில் வைத்துக்கொண்டு, தொகுதிவாரியாக எல்லோரிடமும் கேள்விகேட்டு துளைத்து எடுத்துவிட்டார் ஸ்டாலின்.”

ஆனால், “நீர் போன வாரம்.. அமைச்சரவை பட்டியல், அதிகாரிகள் பட்டியல் எல்லாம் தயார் என்று சொன்னீரே என்று நாம் அவருக்கு நினைவுபடுத்தியதும்... விகடகவியார், அதுவும் உண்மைதான். அந்த வேலையையும் ஸ்டாலின் பார்த்து வருகிறார். ஆனால் துரைமுருகன் தான் ஸ்டாலின் மீது எக வருத்தத்தில் இருக்கிறார். அமைச்சரவை பட்டியல் பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று ஸ்டாலின் கேட்டபோது... வேட்பாளர்களை எப்படி நீங்களே தேர்வு செய்தீர்களோ, அதேபோல் இதையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சுருக்கமாகச் சொல்லி நகர்ந்து விட்டாராம் துரைமுருகன்.”

“சுப்புலட்சுமி ஜெகதீசன் சபாநாயகர் ஆவார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படியென்றால், அவர் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பதவி கனிமொழிக்கு போய்விடும். அதையே காரணம் காட்டி, உதயநிதியை அமைச்சர் ஆக்குவது என்பது ஸ்டாலின் திட்டமாம்” என்றார் விகடகவியார்.

“பிரதமரை வெளிநாட்டு ஊடகங்கள் ஆகா ஓகோ என்று முன்பு கொண்டாடியது. சென்ற ஆண்டு கூட, நோய்த்தொற்றை இந்தியா கடும் கட்டுப்பாடு காரணமாக, கட்டுக்குள் கொண்டு வந்தது என்றெல்லாம் எழுதியது. இப்போது, அப்படியே உல்டா வாங்கி விட்டது. இதன் பின்புறம் என்ன என்று பாரதிய ஜனதா விசாரித்து வருகிறது. விரைவில் உண்மை வெளிவரும்” என்ற விகடகவியார், மீண்டும் கலச ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு, மறக்காமல் முகக் கவசம் அணிந்து ஜூட் விட்டார்.