தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

சந்தேக நிழல் விழக்கூடாது...

கொரோனா தொற்று, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவற்றில் மாநில நிர்வாகம் செயல்படும் விதம் குறித்து நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் எல்லாம் தற்போது தவறான முன்னுதாரணம் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, நீங்கள் எங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்று சொல்வதுபோல், நீதிபதிகளின் உத்தரவுகள் தற்போது இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையமே காரணம். விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியது. இது நீதிபதிகள் வாய் வார்த்தையாக சொன்னதுதான், இது பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இது பரபரப்பாக எல்லா ஊடகங்களிலும் பேசப்பட்டது.

இப்போது தேர்தல் ஆணையம், நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை களங்கப் படுத்தி விட்டது. இப்படி வாய் வார்த்தையாக கூறியதை, வாபஸ் பெற வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். அந்த மனுவில், கொரோனவின் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்பதை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை, கொலை குற்றவாளிகள் என்று கூற முடியாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

டெல்லி, உயர்நீதிமன்ற நீதிபதி பிச்சை எடுத்தாவது மக்களுக்கு ஆக்சிஜன் தாருங்கள் என்கிறார்.

நீதிபதிகளுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் தற்போது வந்துவிட்டது. ஒரே நாளில் ஆணை பிறப்பிக்க வேண்டும், என்று உத்தரவு போடுகிறார்கள், இன்றே செய்ய வேண்டும் என்கிறார்கள்.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை, துரிதமாக எடுத்து முடிக்க நீதிபதிகள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால்... அவர்கள் பதில் என்னவாக இருக்கும்.

மேற்கு திரிபுராவில், அந்த மாவட்டத்தின் நீதிபதி, சட்டத்தை காப்பாற்றுகிறேன் என்று அவர் நடந்து கொண்ட விதம். எல்லாமே அதிகார மீறல், அத்துமீறல் தான். அனுமதி கடிதத்தை, கிழித்து முகத்தில் எறிகிறார். மணமகனை தாக்குகிறார், புரோகிதருக்கு தர்மஅடி. தெரியாமல் செய்து விட்டோம், விட்டுவிடுங்கள் என்ற பெண்மணிகளை, இவர்களையெல்லாம் கைது செய்கிறேன் என்கிறார் அந்த மாவட்ட நீதிபதி. போலீஸ்காரர்களையும் சகட்டுமேனிக்கு, அவர்களின் உயர் அதிகாரிகளிடம் செல்பேசியில் திட்டுகிறார். இவரெல்லாம் லஞ்சம் வாங்கிட்டு செயல்படுகிறார்கள் வந்து பாருங்கள் என்று மொத்த காவல் துறையையே வசைப்பாடுகிறார் அந்த மாவட்ட நீதிபதி.

20210330225814894.jpeg

இந்த மாவட்ட நீதிபதியின் அராஜக வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி பார்க்காமல் இருந்திருப்பார்களா..? அவர்கள் ஏன், இதைத் தானே விசாரிக்கும் வழக்காக ஏற்று, அவரை அழைத்து ஏன் தண்டிக்கவில்லை என்று கேட்டால்... நீதிபதிகள் என்ன பதில் சொல்வார்கள். நீதிமன்றம் தான் கடைசி நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் சந்தேக நிழல் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மைலார்ட்.