தற்போதைய தேர்தல் அரசியலில்... கூட்டணி, கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், இவற்றோடு கருத்துக்கணிப்பு, அரசியல் கட்சிகளுக்கு அவசியமாகிறது. வெற்றி வாய்ப்புள்ள கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க, இந்தக் கருத்துகணிப்பு அவர்களுக்கு உதவுகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்... அப்போதுதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற தடுமாற்றத்தில் உள்ள வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்கின்றனர். இப்போது கருத்துக்கணிப்பு என்பதுகூட, ஒரு தேர்தல் உத்தி என்று ஆகிவிட்டது.
பெரும்பாலும் இந்தக் கருத்துக் கணிப்புகள், தவறாகவே கணிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 2011, 2016 சட்டமன்றத் தேர்தலே இதற்கு சாட்சி.
2011-இல் ஒன்பது கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் இரண்டு நிறுவனம், திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றது. 7 நிறுவனங்கள் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றது. ஆனால், திமுக 80 முதல் 90 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு சொன்னது. ஆனால் 2011இல், அதிமுக 203 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக 37 இடங்களில் தான் வெற்றி பெற்றது.
2016 கருத்துக் கணிப்பில் இரண்டு நிறுவனங்கள் தவிர, 7 நிறுவனங்கள் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டது. ஆனால், ஆதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. திமுக 98 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. இப்போதும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளும் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி, திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் 46 ஆயிரத்து 800 பேரிடம் கருத்து கேட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மொத்த தொகுதி 234. போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 3998. மொத்த வாக்காளர்கள் 6,29,43,512. ஆண் வாக்காளர்கள் 3,09,95,440, பெண் வாக்காளர்கள் 3,19,40,880. மொத்த வாக்குச் சாவடிகள் 90,775.
தனியார் தொலைக்காட்சி 46 ஆயிரத்து எண்ணூறு பேரிடம் கருத்து கேட்டதாக சொல்கிறது. வாக்குச்சாவடிக்கு ஒருவர் என்றால் கூட 90,775 பேரிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும். இது என்ன கணக்கு என்பதை அந்த தனியார் தொலைக்காட்சி தான் விளக்க வேண்டும்.
1980-இல் திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டி போட்டன. எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுக 113 இடங்களிலும், காங்கிரஸ் 113 இடங்கள் என்று சரிசமமாக போட்டியிட்டன. அப்போது, திமுக - காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு ஆருடம் சொல்லப்பட்டது. திமுகவும் இதை நம்பி.. நன்றி சுவரொட்டி, வெற்றி விழா சுவரொட்டி எல்லாம் அடித்து தயார் நிலையில் வைத்திருந்தது. கருணாநிதி வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்பு விழா நடத்த இருந்தார். அமைச்சரவை பட்டியல் கூட கருணாநிதி தயாரித்து வைத்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவு வந்த போது, அதிமுக 129 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்பது இடங்களிலும், குமரி அனந்தனின் காகாதேக கட்சி 6 இடங்களிலும், பார்வர்ட் பிளாக் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தார்கள்.
திமுக கூட்டணியில்... திமுக 38 இடங்கள், இந்திரா காங்கிரஸ் 31 இடங்கள், முஸ்லீம் லீக்குக்கு ஒரு இடம். அந்தத் தேர்தலில், கருணாநிதி 699 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தார். கருணாநிதிக்கு இது அதிர்ச்சி.
ஆறு கோடிக்கு மேல் இருக்கும் வாக்காளர்கள் மனதை, வெறும் 50000 ஒரு லட்சம் பேரிடம் கருத்து கேட்டு, கணிப்பது என்பது உண்மையான மக்கள் கருத்துக் கணிப்பாக இருக்காது என்பதுதான் உண்மை.
சில சமயம் காக்கை உட்கார, பனம்பழம் விழுந்த கதையாக இந்த கருத்துக் கணிப்பு உண்மையாக மாறலாம். ஆனாலும், கருத்துக் கணிப்பு என்பது.. கருத்து திணிப்பு என்பது தான் உண்மை.
Leave a comment
Upload