ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, எனவே அவர் முதல்வராக முடியாது என்று ஒரு செய்தி றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. தமிழ்நாட்டில் இதுவரை எந்த முதல்வரின் வாரிசும் முதல்வர் ஆந்து இல்லை, இப்படி ஒரு கதை. ஸ்டாலின் எல்லாம் முதல்வராக முடியாது... இது, அவரது சொந்த அண்ணன் அழகிரியின் வாழ்த்து.
ஜெயலலிதா இறந்ததும், எடப்பாடி முதல்வரானார். அதைத் தொடர்ந்து, சசிகலா சிறை, தினகரன் கட்சியை விட்டு நீக்கம். அவருடன் சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம். இப்படி எல்லாவற்றையும் எடப்பாடி சமாளித்தார். ஆனாலும், அவரது ஆட்சிக்கு அரசியல் நெருக்கடி தொடர்ந்து இருந்து வந்தது. அப்போதெல்லாம் இந்த ஆட்சி விரைவில் போகும் என்றார் ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணி 108 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கொஞ்சம் இழுத்து, ஸ்டாலின் ஆட்சி அமைத்து இருக்கலாம். இந்த யோசனையை சொல்லிய போதெல்லாம், வேண்டாம்... நாம் ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைப்போம் என்று மறுத்துவிட்டார் ஸ்டாலின்.
2020இல் அவர் தேர்தல் வியூகம் அமைத்து விட்டார். திமுக தொண்டர்களை நம்பிய கட்சி, ஒரு கப் டீயும், பன்னும் சாப்பிட்டு திமுக தொண்டர்கள் உழைப்பார்கள் என்று அண்ணா பெருமையாக சொல்வார். ஆனால், பிரசாந்த் கிஷோரை வைத்து தேர்தல் பிரச்சார விதிகளை வகுத்தார் ஸ்டாலின். கட்சியில் முதலில் சலசலப்பு இருந்தது உண்மை. பிரசாந்த் கிஷோர் சொல்பவர் தான் வேட்பாளரா என்றெல்லாம் ஸ்டாலினை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் பொறுமையாக சமாளித்தார் ஸ்டாலின். ஆனாலும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படிதான் எல்லாம் நடந்தது. அதுதான் உண்மை. வேட்பாளர் தேர்வில் கூட அப்படித்தான்.
கூட்டணிக் கட்சிகளிடம், தொகுதி பங்கீட்டின் போது அவர் பட்ட பாடு சொல்லி சொல்லிமாளாது. ஒரு கட்டத்தில், காங்கிரஸ் - கமலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. திமுகவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்ததும், காங்கிரஸ் இந்தச் செய்தியை மறுத்தது. ஆனால், கமல் அவர்கள் பேசியது உண்மைதான் என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார். காங்கிரஸ்தான் தொகுதிப் பங்கீட்டில் கடைசியாக கையெழுத்து போட்ட கட்சி.
விடுதலை சிறுத்தை கட்சிகள், திமுக சின்னத்தில் போட்டியிட சொன்னபோது எதுவும் பேசாமல் எழுந்து வந்து விட்டார் திருமாவளவன். இந்தத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிகள், தேர்தலில் போட்டியிடாமல் கூட இருக்கும் என்று சொன்னார். 12 தொகுதிகள் கேட்டார் திருமா. ஆனால், திமுக ஆறு தொகுதி தான் என்பதில் உறுதியாக இருந்தது. ஒரு கட்டத்தில் நீங்கள் இப்படி பிடிவாதம் பிடிப்பது, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற நீங்களே வழிவகை செய்வது போல் ஆகப்போகிறது என்று எச்சரித்தார் ஸ்டாலின். அதன் பிறகு, ஆறு தொகுதிக்கு சம்மதித்த திருமாவளவன், திமுக சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றார். உங்கள் விருப்பம் என்று விட்டு விட்டார் ஸ்டாலின். இதேபோல், மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பாரதிய ஜனதாவின் பெயரைச் சொல்லித்தான் சம்மதிக்க வைத்தார்.
தேர்தல் பிரச்சாரம் தேர்தல் அறிக்கை என்று எல்லாவற்றிலும் முனைப்புடன் இருந்தார் ஸ்டாலின். இதில் அவருக்கு பக்கபலமாக அவரது மருமகன் சபரீசன் இருந்தார்.
பாரதிய ஜனதா, தேர்தல் முடிவுகள் இழுபறி நிலையாக இருந்தால், திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம்பேசும் என்ற ஒரு செய்தி ஸ்டாலின் காதுக்கு எட்டியது. அதற்கும் திட்டம் வகுத்து வேட்பாளர்களை கண்காணித்தார் ஸ்டாலின்.
ஓட்டு எண்ணிக்கைக்கு முன்தினம் மாவட்ட செயலாளர்களிடமும், வேட்பாளர்களிடமும் காணொளி மூலம் பேசினார் ஸ்டாலின். அப்போது, திமுகவின் தலைமை சட்ட ஆலோசகர் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ, மே இரண்டாம் தேதி... வாக்கு எண்ணிக்கை முதல், வாக்கு எண்ணிக்கை முடியும்வரை வேட்பாளர்களும், முகவர்களும் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வகுப்பு எடுத்தார்.
ஏற்கனவே திமுக கையேடு13 என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் திமுக தலைமை வழங்கியிருந்தது. அந்தப் புத்தகத்தில் எளிய முறையில் புரியும் படி, மின்னணு இயந்திரம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், வி.வி.பி யூனிட் என்று மூன்று அலகுகள் இருக்கும். பேலட் யூனிட் வாக்குப்பதிவு தொடர்பானது, கன்ட்ரோல் யூனிட் என்பது வாக்குப் பதிவுக்கு பிறகான முறை. வாக்கு எண்ணிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டியது விவிபி யூனிட்டில் தான். வாக்குப்பதிவு நடந்த எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும், பிங் பேப்பர் ஸ்லிப் சுற்றப்பட்டிருக்கும். அதில் அந்த பூத்தில் இருக்கும் முகவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு இருப்பார்கள். அந்த வாக்குச்சாவடியில் பதிவான மொத்த வாக்குகள், அதில் குறிப்பிட்டிருக்கும். ஓட்டு எண்ணிக்கையின் போது, அதில் குறிப்பிட்டுள்ள வாக்கு எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல், தபால் வாக்குகளிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். தபால் ஓட்டுகளை முதல் 30 நிமிடத்தில் எண்ணி முடிக்க வேண்டும். ஆரம்பித்தால் அதை நிறுத்தக்கூடாது. இப்படி எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படி.. வேட்பாளர்களையும், முகவர்களையும் உஷார் படுத்தி அலர்ட் செய்தார் ஸ்டாலின். அது மட்டுமல்ல.... திமுக தொடர்ந்து முன்னிலை என்று இருக்கும் போது கூட,,, வேட்பாளர்களையும் ,முகவர்களையும் எந்த காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது, கடைசி வாக்கு எண்ணும் வரை அங்கேயே இருக்க வேண்டும். வெற்றி சான்றிதழ் தருவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், உடனே தலைமையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து வைத்து இருந்தார்.
bதிட்டமிட்டு நினைத்தபடி ஸ்டாலின் சாதித்து விட்டார். இது முழுக்க.. முழுக்க ஸ்டாலின் என்ற ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடத்தை, ஸ்டாலின் நிரப்பி விட்டாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள்தான் பதிலாக இருக்கும்.
Leave a comment
Upload