தொடர்கள்
அரசியல்
பாண்டி பால் (டிரிங்க்ஸ்)டிக்ஸ்... - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

புதுச்சேரி - தமிழக எல்லை என்பது ஒரு நூலிழை என்றாலும்... அங்குள்ள அரசியல் சூழலே தனி. அங்கு யார் ஆளுங்கட்சியானாலும் அவர்களுக்கு பார் நடத்த அனுமதி கிடைக்கும். இதனால் ஆளுங்கட்சிக்கு எக்கச்சக்க வருமானம் என்பதால், எல்லா கட்சியுமே ஆளுங்கட்சியாக வேண்டும் என்று ஆசைப்படும்.

20210407192653416.jpeg

இந்த முறை புதுச்சேரியில் தனியாக போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டது திமுக. இதற்காக ஜெகத்ரட்சகனை திமுக பொறுப்பாளராக நியமித்து, நீங்கள்தான் புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளர் என்று உசுப்பேற்றியது. ஆனால், காங்கிரஸ் தந்த நெருக்கடியை சமாளிக்க முடியாமல்... திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது. காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும், விடுதலை சிறுத்தை கட்சி ஒரு இடத்திலும் போட்டி போட்டது. இதில் திமுக 6 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தோல்வி அடைந்தனர்.

ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாரதிய ஜனதா ஒன்பது இடங்களிலும், அதிமுக 5 இடங்களில் போட்டியிட்டது. இதில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாரதிய ஜனதா 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு அதிமுக தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் ஐந்து பேர் என்னார் காங்கிரஸிலிருந்து விலகி போட்டியிட்டார்கள். இருந்தாலும்... இவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆசிபெற்ற வேட்பாளர் என்று பிரச்சாரம் செய்ததும், இவர்களின் வெற்றிக்கு ஒரு காரணம்.

20210407192746894.jpeg

ஓட்டு எண்ணிக்கையின் போது, சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை என்ற செய்தி வந்ததுமே... பாரதிய ஜனதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கிவிட்டது. இது தவிர என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, பாரதிய ஜனதா தான் செலவு செய்தது. இதனால் என்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருந்தார்கள். எப்படியும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்ற சூழல் கிட்டத்தட்ட ஏற்பட்டு விட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்ட என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, இந்த வம்பே வேண்டாம் என்று அமித்ஷாவை தொடர்புகொண்டு, நான் 15 மாதம் முதல்வராக தொடர்கிறேன், அதன் பிறகு என்னை நீங்கள் ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யுங்கள் அல்லது ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட பாரதிய ஜனதா தலைமை, பாரதிய ஜனதாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும். இது தவிர இரண்டு அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்து விட்டார் ரங்கசாமி. ரங்கசாமியின் செல்வாக்கு தற்போது புதுச்சேரியில் இறங்குமுகம். காரணம்... அவரது நிலையற்ற கொள்கை, நம்பகத்தன்மை இல்லாதது போன்றவைதான். 2 தொகுதியில் போட்டியிட்டவர், ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தார். இதுவே அவருக்குப் பெரிய அதிர்ச்சி. இதையெல்லாம் சாதகமாக பயன்படுத்தி தான், பாரதிய ஜனதா அவரை பணிய வைத்தது. ரங்கசாமியின் குலதெய்வமான அம்மா பைத்தியம் சாமி கோயிலில் போய் எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை தாற்காலிகமாக பலித்துவிட்டது.

15 மாதங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா தலைவர் நமச்சிவாயம் முதல்வர் ஆவார். விரைவில் தென்னிந்தியாவில் தாமரை மலரும் போல் தான் தெரிகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். இனி இது பற்றி எல்லாம் திராவிட கட்சிகள் யோசிக்க ஆரம்பிக்கும்.