தொண்டரடிப்பொடி ஆழ்வார்...
சோழ வளநாட்டில், திருமண்டங்குடி என்று அழைக்கப்படும் ஊரில், மார்கழித் திங்கள் - கேட்டை நக்ஷத்திரத்தில் வைஜெயந்தி என்னும் திருமாலின் வனமாலையின் அம்சமாக, ஒரு முன்குடுமிச் சோழியப் பிராமணரது திருக்குமாரராய் இவ்வாழ்வார் அவதரித்தார். விப்ரநாராயணர் என்று தந்தையால் பெயரிடப்பட்டு, அந்தணர் குலத்துக்கேற்ற நான்கு வேதங்களையும், அதன் ஆறு அங்கங்களையும் உரிய காலத்தில் கற்று, வைணவ குலத்துக்கே உரிய திருவிலச்சினைகளையும் (திருமாலின் சங்கம் மற்றும் சக்கரப் பொறிகளைத் தோள்களில் பொறித்துக்கொள்வது) தாங்கினார்.
திருமண்டங்குடியிலிருந்து, திருவரங்கம் ரங்கநாதரின் மீது அளப்பரிய பக்தி கொண்டு திருவரங்கம் சென்றார்.
விப்ரநாராயணர் திருவரங்கம் பெரிய கோவிலை அடைந்து, நம்பெருமாளது திருநந்தவனப் பணியில் ஈடுபட்டு, அப்பெருமானுக்குத் திருமாலைகள் கட்டி அணிவித்து மகிழ்ந்தார். தன் உணவிற்காக, உஞ்சவிருத்தி செய்து, காலம் கழித்தார். உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னவனின் அவையில் கூத்தாடிப் பரிசுபெற்ற தேவதேவி என்ற விலைமாது ஒருத்தி, வீடு திரும்பும்போது, இவர் நந்தவனத்தைக் கண்டு அங்குள்ள பூம்பொழிலின் எழிலைக் கண்டு, அதில் மயங்கி, அந்த நந்தவனத்தையே தனதாக்கிக்கொள்ள விரும்பினாள்.
அந்த நந்தவனத்தின் சொந்தக்காரரான விப்ரநாராயணரைத் தன் அழகால் மயக்கி, தன் வசப்படுத்த நினைத்து, இவர் நந்தவனத்திற்கு நீர் பாய்ச்சும்போது, அவர் அருகில் புன்னைகை செய்து நின்றாள். விப்ரநாராயணர் திருமால் பணியைத் தவிர வேறு ஒன்றையும் சிந்தையில் கொள்ளாதவர். ஆகையால், இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
தன்னுடனிருந்த தன் அக்காளுக்கு எவ்வாறேனும் அவரை வசப்படுத்துவதாக சபதம் செய்து, மெல்லிய சிவந்த காவி உடைமட்டும் அணிந்து, விப்ரநாராயணரிடம், தான் அவர் செய்யும் கைங்கர்யப் பணியில் உதவுவதாகக் கூற, அவள் நல்லெண்ணத்தை எண்ணி, அவரும் அதற்கு இசைந்தார்.
ஒருநாள், மிகுந்த மழை பெய்தபோது... அவள் நனைவது கண்டு, விப்ரநாராயணர் அவளைத் தன் குடிலில் வந்து அமர வேண்டினார். அவளும் இந்தத் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவள்... ஆதாலால், அவர் குடிலின் உள்ளே நுழைந்து, அவரைத் தன வலையில் சிக்க வைத்தாள். சிறிது காலம் அவருடன் மகிழ்ந்து இருந்து, பிறகு அவரைத் துறந்து தன் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றாள். இதன்பின், விப்ரநாராயணர் அவள்மீது மோகம் கொண்டு, அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது, அவளது ஊழியர்கள் அவரை உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் மிகவும் வருத்தமடைந்த விப்ரநாராயணர், அவள் வீட்டு வாசலிலேயே கிடந்தார்.
தன் அடியவராகிய விப்ரநாராயணர் இவ்வாறு இருப்பதைக்கண்டு வருத்தமுற்ற மகாலக்ஷ்மித் தாயார், அவரைத் திருத்திப் பணிகொள்ளும்படி எம்பெருமானை வேண்ட, அதாவது அவர் இந்த மோகத்தைவிட்டு, மீண்டும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் புரிபவராய் ஆக்க விரும்ப... எம்பெருமானும் அவள் விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணம் கொண்டான். எம்பெருமான் ஒருநாள் இரவு, ஒரு அந்தணச் சிறுவன் உருவம் கொண்டு நம்பெருமாளது சந்நிதியில் இருந்த பொன் வட்டில் ஒன்றை, தேவதேவியிடம் விப்ரநாராயணர் கொடுத்துவரச் சொன்னதாகக் கூறி மறைந்தான். அந்தப் பரிசைக் கண்டு மகிழ்ந்து, தேவதேவி, அச்சிறுவன் (எம்பெருமான்) மூலமே விப்ரநாராயணரை உள்ளே அழைத்தாள். அவரும் அவளுடன் கூடி மகிழ்ந்தார். மறுநாள் காலை, கோயிலில் வட்டில் காணாமல் போனது அரசருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அமுதம் பருகுவோம்......
காவேரியும் - கொள்ளிடமும் சூழ்ந்து அமைந்திருக்கும் திவ்ய தேசமான புள்ள பூதங்குடி அருகில் அமைந்திருக்கும், அமைதியான சிறு ஊர் திருமண்டங்குடி. இது தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதாரம் செய்த திருத்தலம், என்று பெரியோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடம். ஆழ்வார்களில் பதிவிரதை என்று போற்றப்படும் இவர், திருவரங்கம், அரங்கநாதனைத் தவிர, வேறு எவரையும் சேவிக்கவில்லை, பாடவும் இல்லை. மண்டங்குடியிலிருந்து எப்போது திருவரங்கம் வந்து வாழத்துவங்கி, நந்தவனம் அமைத்து பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தார் என்பது காணக்கிடைக்கவில்லை.
திருமண்டங்குடி கோயிலில் ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் பெயர் ஸ்ரீ ரங்கநாதன். இங்கு இவர் நின்ற கோலத்தில் காட்சிதருவது மிக அபூர்வமான ஒன்று. ஆழ்வாருக்கு சயன காலத்திலிருந்து எழுந்து நின்று, அவர் விரும்பும் வகையில் காட்சி தந்ததாக வரலாறு உண்டு. பெருமாளுக்கு மற்றொரு பெயராக வரம் தரும் பெருமான் எனவும் அழைக்கப்படுகிறார்.
ஆழ்வார் சந்நிதி பாரம்பரிய அமைப்பினில் கட்டப்பட்டிருக்கிறது. அதன் அமைப்பு சோழர் காலத்தை சேர்ந்தது. சன்னதியில் உள்ளே, ஆழ்வார், மூலவர் அமைய பெற்றிருக்கிறார். அவருக்கு முன்னே திருமலை ஸ்ரீனிவாச பெருமாளும் மற்றும் திருமாலிரும்சோலை சுந்தர ராஜ பெருமாளும், இருபுறமும் காட்சி தருகிறார்கள். இதற்கு ஒருசிறு பழங்கதை உண்டு. அவர்கள் இருவரும் ரங்கநாதரை குறித்து ஆழ்வார் பாடும் திருப்பள்ளி எழுச்சியினை கேட்க விரும்பி அவர்களாகவே இங்கு வந்ததாக ஐதீகம்.
ஆழ்வாரின் மூலத்திருமேனி உட்கார்ந்த நிலையில் கூப்பிய கரங்களுடன் இருப்பது சோழர் காலத்தின் அடையாளமாகும். மூலவர் திருமேனியில் குறிப்பிட தகுந்த மற்றொரு அம்சம், அவருடைய தலையின் முன்பக்க சிகையும், இடது தோளில் தொங்கும் பூக்குடலையும் ஆகும். உற்சவ மூர்த்தி நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களுடன், அமையப் பெற்றிருக்கிறது. இதற்கு அருகில் அவருடைய ஆராதனை மூர்த்தியான லட்சுமி நாராயணர் இருக்கிறார். ஆழ்வாரின் இருபுறமும், ராமானுஜரும், மணவாள மாமுனிகளும், உட்கார்ந்த நிலையில், கூப்பிய கரங்களோடு, உற்சவ மூர்த்திகளாய் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு அடுக்குகள் கொண்ட திருமண் பொறிக்கப்பட்ட பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
Leave a comment
Upload