தொடர்கள்
விகடகவியார்
விகடகவி யார் ஸ்பெஷல் ரிப்போர்ட்...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்......

20210407202818229.jpeg

ஒரு பக்கம் கருத்துக் கணிப்புகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் திமுக தான் ஆட்சி பிடிக்கும் என்று உறுதிபட சொன்னாலும்.... திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் முடிவு முழுவதும் வெளியான பிறகு தான் நாம் தான் முதல்வர் என்று நம்பத் தொடங்கினார்.

அதிகாரிகள் அவரை சந்தித்து பூங்கொத்து தந்து வாழ்த்து சொன்ன போது கூட, இதெல்லாம் இருக்கட்டும்... கொரோனா பரவலை தடுக்க என்ன செய்யப்போகிறோம் என்று கேட்டார். அப்போது கையோடு புள்ளி விவரங்களை எடுத்து வைத்திருந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், நிலைமையை எடுத்துரைத்தார். ஆக்சிஜன் இருப்பு பற்றி ஸ்டாலின் கேட்டபோது... நம்மிடம் போதுமான கையிருப்பு இல்லை. ஆனால், கொரானா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பயன்பாடு அதிகமாகி போய்க்கொண்டே இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதற்கு மறுதினம், ஸ்டாலின் எல்லா அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இது தவிர, சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியத்தை அழைத்து, எல்லா விவரங்களையும் சேகரித்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் என்று அவரையும் விசாரிக்கச் சொன்னார்.

20210407203834990.jpeg

இது ஒருபுறமிருக்க... 34 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை, இலாகாக்கள் உட்பட முன்தினமே ஆளுநருக்கு அனுப்பி அசத்தினார் ஸ்டாலின். இதில் எட்டு பேர் முன்னாள் அதிமுகவினர், முக்கிய இலாக்காக்கள் எல்லாம் அவர்கள் வசம் தான்.

உதயநிதி ஸ்டாலினை இரண்டு தினங்களுக்கு முன்பே ஸ்டாலின் அழைத்து, இப்போது அமைச்சர் பதவி வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை சம்மதிக்க வைத்து விட்டார். அதே சமயம் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் சிபாரிசு சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சராக்க சம்மதித்தார். உள்ளாட்சி துறையை இரண்டாக பிரித்து... நகராட்சி நிர்வாகம், நகரப்பகுதி குடிநீர் வழங்கல் ஆகியவை கேஎன் நேருவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஊரக வளர்ச்சி துறையை பிரித்து, அதை கேஆர் பெரியகருப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாமே சபரீசன் தீர்மானம் செய்தது தான்.

ஏகாதேசி, ராகு காலம் - பத்தரை மணி என்பதால், ஒன்பது மணிக்கு பதவியேற்பு வைபவம் தொடங்கி, பத்து மணிக்குள் முடிந்தது.

ஒரு மணி நேரம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நின்று கொண்டே இருந்தார். 81 வயதான ஆளுநர் சுத்த சைவ பிரியர் என்பதாலும் யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்துவருகிறார் என்பதாலும், அவரால் களைப்பின்றி ஒரு மணி நேரம் நிற்க முடிந்தது.

முதலில் 400 பேருக்கு தான் அனுமதி என்றார்கள், பிறகு அது 500 ஆக உயர்ந்தது. ஸ்டாலின் கூட திமுக தொண்டர்களை, தயவுசெய்து பதவியேற்பு விழாவுக்கு யாரும் வரவேண்டாம், தொலைக்காட்சியில் பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பதவி ஏற்பு விழாவில், ராஜ்பவனில் கலந்துகொண்டது இரண்டாயிரம் பேர். அதனால்தான் அடிக்கடி, முகக் கவசம் சரியாக அணியுங்கள், சமூக இடைவெளி பின்பற்றுங்கள் என்ற வேண்டுகோள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.

20210407202904764.jpeg

அமைச்சர்கள் முதல் வரிசையிலும், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் போன்ற முக்கிய பிரமுகர்கள் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்து இருந்தார்கள்.

ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று சொல்லி, ஸ்டாலின் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது... ஒரு நொடி கண்கலங்கிய துர்கா ஸ்டாலின், பிறகு லேசாக கை தட்டினார்.

20210407203420401.jpeg

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதலோடு, அவர் எல்லா கோயில்களுக்கும் போனார். இன்று அவர் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றியிருக்கிறார் என்ற சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

ஸ்டாலின் குடும்பத்தினர் எல்லோரும் வந்திருந்தனர். கனிமொழி, தனது மகன் ஆதித்யா உடன் வந்திருந்தார்.

கேஎன் நேரு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்போது, முக கவசத்தை கழற்ற முயற்சி செய்தபோது, அது முடியவில்லை. எனவே முக கவசத்துடன், சற்று சிரமமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஐ பெரியசாமி, பொன்முடி போன்ற சிலர் முகக் கவசத்தோடுதான் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்கள்.

முக்கியத் துறைகளின் பல செயலாளர்கள் இந்த பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை. அவர்களுக்கு அழைப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. தலைமைச் செயலாளராக பொறுப்பேற்பதாக பேசப்பட்ட இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் இவர்கள்தான் என்று சொல்லப்பட்டு பிறகு, உறுதியான உதயச்சந்திரன், உமாநாத், எம்எஸ் சண்முகம் ஆகியோர் வந்திருந்தார்கள்.

பிரசாந்த் கிஷோர் தனது முக்கியக் குழு உறுப்பினர்களுடன் வந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறகு, அதிக கைதட்டல் பெற்றது பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தான். ஆளுநருக்கு இது ஆச்சரியம். அவரை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தார்.

ஓபிஎஸ், அடிக்கடி ஸ்டாலினை சட்டசபையை விட்டு வெளியேற்றிய முன்னாள் சபாநாயகர் தனபால், ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் இவர்கள் அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்து, தேனீர் அருந்தியது உண்மையில் கண்கொள்ளா காட்சி.

முதல்வராக முடியாது என்று சொன்ன ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரி, நேற்று ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார். எனது தம்பியான முக ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துக்கள், அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று சொன்னது இன்னொரு அதிசயம். அதை முரசொலியில், அழகிரி படத்துடன் பிரசுரம் செய்தது, அதிசய கணக்கில் தான் வரும். இதுதவிர அழகிரிக்கு, போலீஸ் பாதுகாப்பு தரச்சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அழகிரி குடும்பம் சார்பாக, அழகிரி மகன் தயாநிதி அழகிரி கலந்து கொண்டார். அவரைப் பார்த்ததும், உதயநிதி ஸ்டாலின் கட்டித் தழுவயதும், இது சினிமா அல்ல... நிஜம் என்று சொல்லத் தோன்றியது.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில், முக ஸ்டாலின் எனும் நான் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதேபோல் அவரது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் திமுக தலைவர், திராவிட இனத்தை சார்ந்தவன் என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முகப்பில்... இது தமிழகம் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 1962ல் அண்ணா ராஜ்யசபாவில் பேசும்போது, நான் திராவிட இனத்தை சார்ந்தவன் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். அதை தற்போது ஸ்டாலின் பயன்படுத்தியிருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதியில் அதிமுக்கியமான, குடும்ப அட்டைக்கு 4000 என்பதில் முதல் தவணையாக 2000 வழங்கவும், பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தும், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கும் கட்டணத்தை அரசே ஏற்கும், மனுக்கள் மீதான 100 நாட்கள் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை செயல்படுத்த என்று ஆணை பிறப்பித்தார்.

அதே சமயம் புதிய நிதி அமைச்சர், முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்கிறார். கடன்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி இதுவரை வழங்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறார். 1989-இல் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்றதும், களஞ்சியமும் காலி, கஜானாவும் காலி என்று சொன்னது, இப்போது நினைவுக்கு வருகிறது.

முதல்வர் பதவி ஸ்டாலின் ஆசைப்பட்டது, அதை அவர் அடைந்து விட்டார். இனி அவர் திறமைக்கான சவால்கள், வரிசையாக காத்திருக்கிறது. அதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று பார்ப்போம்.