தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 38 - மதன்

ஜஹாங்கீர்…

20210407172823288.jpeg

அந்தப்புரத்தில் ஓர் அரியணை!

நூர்ஜஹான் விதவையானதற்குப் பின்னணியில் மர்மம் ஏதேனும் உண்டா?

‘நூர்ஜஹானை மணம் செய்து கொள்வதற்காக, அவருடைய கணவரான ஷெர் அஃப்கனைத் தீர்த்துக் கட்டியவர் ஜஹாங்கீர்’ என்று சில வரலாற்று ஆசிரியர்களும் ‘விதவையான நூர்ஜஹானைத் திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்துக்காக ஜஹாங்கீர் மீது இப்படி ஒரு பழி சுமத்துவது அபாண்டம்’ என்று சிலரும் ஷெர் அஃப்கன் மரணம் பற்றி வெவ்வேறு கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

வங்காள கவர்னராக நியமிக்கப்பட்ட ஷெர் அஃப்கன், தான்தோன்றித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் செயல்பட்டது ஜஹாங்கீருக்குத் தெரியவர, அதுபற்றி விசாரிக்க குத்ப்-உதீன் என்ற பிரமுகரை டெல்லியிலிருந்து வங்காளத்துக்கு அனுப்பினார் பாதுஷா.

விசாரணையின்போது வாக்குவாதம் வெடித்தது. சக்ரவர்த்தியை ஷெர் அஃப்கன் தரக்குறைவாகப் பேசியதைக் கண்ட குத்ப்-உதீன், அவரைக் கைது செய்ய முனைய… கோபம் கொண்ட ஷெர் அஃப்கன், உறையிலிருந்து வாளை உருவி, அதை குத்ப்-உதீன் வயிற்றில் செலுத்திக் கொன்றுவிட்டார். இதைக் கண்டு குத்ப்-உதீனுடன் வந்த மெய்க்காவலர்கள் திகைக்க, அவர்களில் ஃபிர்கான் என்பவர் வாளைச் சுழற்றிக்கொண்டு ஷெர் அஃப்கன் மீது பாய்ந்தார். வாட்போரில் வல்லவரான ஷெர் அஃப்கன், அவரையும் வெட்டிச் சாய்க்க… வெறியாகிப் போன அத்தனை பேரும் சூழ்ந்துகொண்டு, நூர்ஜஹானின் கணவரை அங்கேயே சின்னாபின்னமாக வெட்டிக் கொன்று போட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துக்குப் பிறகுதான் நூர்ஜஹான், தன் பெண் குழந்தையுடன் அரண்மனைக்குப் போய்த் தங்கியதும், பிற்பாடு ஜஹாங்கீர் அவரை மணந்து கொண்டதும் நடந்தேறியது!

மொத்தத்தில் ஷெர் அஃப்கன் கொலை, ஜஹாங்கீர் பாதுஷாவுக்கு வசதியாகப் போய்விட்டது என்னவோ உண்மை. அதற்காகக் கொலைத் திட்டத்தையே மன்னர்தான் தீட்டினார் என்பதற்குத் திட்டவட்டமான சரித்திர ஆதாரம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

சரி, போனது போகட்டும்! புதுவாழ்வு வந்த பிறகும் பேரழகி நூர்ஜஹானின் பழைய வாழ்க்கை பற்றி நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது சற்றுத் தர்மசங்கடமான விஷயம் என்பதால், மகாராணியின் பெருமைகள் மற்றும் திறமைகள் பக்கம் சற்றுத் திரும்புவோம்..!

முக்காடு போட்டுக் கொண்டாலும், முகத்திரை அணிந்து கொண்டாலும் பெண்கள் மட்டும் மனது வைத்தால், அவர்களுக்கு வானமே எல்லை என்பதற்கு நூர்ஜஹான் பேகம் கச்சிதமான ஓர் உதாரணம். சகல கலைகளும் ராணிக்கு அத்துப்படி. ஏராளமான அழகும் ஏகமான சுறுசுறுப்பும் கொண்ட அவரை ஒரு நிமிடம் சோம்பி அமர்ந்து யாரும் அரண்மனையில் பார்த்ததில்லையாம். மன்னருக்கும் முக்கிய ராணிகளுக்கும் புதுப்புது வகையான உடைகளை டிஸைசன் செய்தவர் நூர்ஜஹான்தான். ஆபரணங்களானாலும் சரி, ராணி வரைந்து காட்ட… பொற்கொல்லர்கள் அவற்றை நேர்த்தியாக உருவாக்குவார்கள். மன்னரின் பிரத்யேக அறையில் இருந்த பிரதான கம்பள விரிப்புகளும் நூர்ஜஹானின் தயாரிப்பே. கவிதை புனைவதிலும் ராணிக்கு ஏகத் திறமை உண்டு. ஜஹாங்கீர் காதல் உணர்வோடு தலைப்புக் கொடுக்க, குறும்போடு கூடிய கவிதை வரிகள் மின்னலாக மனைவியிடமிருந்து வந்து விழும். வேட்டையிலும் மிகுந்த தேர்ச்சி நூர்ஜஹானுக்கு உண்டு. ஒரு முறை ‘இன்று நான் நாலு புலிகளை வீழ்த்தாமல் திரும்ப மாட்டேன் - அதற்கு நான் உபயோகப்படுத்தப் போவது நாலு துப்பாக்கி ரவைகளைத்தான்!’ என்று யானைமீது ஏறிக் காட்டுக்குக் கிளம்பிய பேகம், நாலு புலிகளை வீழ்த்திவிட்டுத் திரும்பினார். ஒரு புலிக்கு மட்டும் அதிகப்படியாக ஒரே ஒரு ரவை தேவைப்பட்டுவிட்டது குறித்து பிற்பாடு கணவரிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார். அந்த அளவுக்கு ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட் நூர்ஜஹான்!

வேட்டையாடிவிட்டு அரண்மனைக்குத் திரும்பியவுடனே, புதுப்புது வாசனைத் திரவியங்கள் தயாரிக்க அமர்ந்துவிடுவார் மகாராணி. இன்றளவும் புகழ்பெற்ற ‘அத்தர்’ எனும் வாசனைத் திரவியத்தை முதன்முதலில் கண்டுபிடித்து உருவாக்கியவர் நூர்ஜஹான்தான். அதை முகர்ந்துவிட்டுப் பிரமித்துப் போன பாதுஷா, மனைவிக்குப் பரிசாக அளித்தது - ஓர் அற்புதமான முத்துமாலை..!

இத்தனை ஜோலிகளுக்கும் நடுவே சுமார் ஐந்நூறு அநாதைப் பெண்களுக்குத் திருமணமும் நிதியுதவியும் இரக்க உணர்வோடு செய்து, மறுவாழ்வு தந்தவர் ஜஹாங்கீரின் மகாராணி!

பேச்சுக்கலை, காதல் கலை, ராஜதந்திரம் - இப்படி அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த நூர்ஜஹானிடம் மன்னர் மதிமயங்கிப் போய், அடியோடு தன்னை இழந்ததை யார்தான் ஆட்சேபிக்க முடியும்..?! ஆகவே, சாம்ராஜ்யத்தில் நூர்ஜஹானின் செல்வாக்குப் பொங்கிப் பரவியதில் வியப்படைய ஒன்றுமில்லை. போகப் போக. ராணியின் தலையசைப்பு இல்லாமல் எதுவுமே அசையாத நிலை ஏற்பட்டுவிட்டது. ‘‘பேகம் ஒன்று சொன்னால், அதுதான் சட்டம். எல்லாமே இனி அவள்தான். தினமும் எனக்கு அருந்த ஒயினும் உண்ண உணவும் அவள் தன் கையால் தந்தால், அது ஒன்றே எனக்குப் போதும்!’’ என்று வெளிப்படையாகவே அறிவித்த ஜஹாங்கீர் சக்ரவர்த்தி, தங்க நாணயங்களிலும் ராணியின் பெயரைப் பதிக்கச் செய்தார் - ‘ஜஹாங்கீர் பாதுஷாவின் ஆணைப்படி, மகாராணி நூர்ஜஹான் பேகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட இந்தத் தங்க நாணயம் நூறு மடங்கு மேலும் ஒளிபெறுகிறது…’ என்ற வார்த்தைகளுடன்!

பிறகு என்ன? தனியாகவே பால்கனியில் ஒரு சிம்மாசனம் போட்டுக்கொண்டு ராணி அமர்வதும்… கீழே மந்திரிப் பிரதானிகள் மனுக்களோடு க்யூவில் நிற்பதும் அன்றாடக் காட்சியானது.

அதே சமயம் நூர்ஜஹானும் கணவரின் தேவைகளை ஒரு தாய்க்குரிய நேசத்துடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூர்ஜஹானின் தந்தை இதி மத்-உத்-தௌலாவும் சகோதரர் அஸஃப்கானும்கூட சாம்ராஜ்யத்தில் அசாதாரண செல்வாக்குடன் விளங்கினார்கள் (அஸஃப்கானின் மகள்தான் பிற்பாடு ஷாஜஹானை மணம் செய்து கொண்ட மும்தாஜ்!). மொத்தத்தில், இவர்கள் அடங்கிய ஓர் உச்சக்கட்ட ‘கிச்சன் காபினெட்’டே அரண்மனையில் உருவானது.

மூத்த மகன் குஸ்ரூவை எந்த அளவுக்கு ஜஹாங்கீர் பாதுஷா வெறுத்தாரோ, அந்த அளவுக்கு இளைய மகன் குர்ரத்தை நேசித்தார் மன்னர். இளவரசருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு நிறையவே இருந்தது. நூர்ஜஹானிடமும் புத்திசாலியான இளவரசர் நல்ல பெயர் எடுத்திருந்தார். பெரும் வீரராகத் திகழ்ந்த இளவரசருக்கு, தந்தை பெருமிதப்படும் அளவுக்குத் தன் போர்த்திறமையைக் காட்டும் சந்தர்ப்பமும் கிடைத்தது…

மேவாரைச் சேர்ந்த ராஜபுத்திர புரட்சி வீரர் ராணா பிரதாப் இறந்த பிறகு, அவர் மகன் அமர்சிங் மொகலாய ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து கொரில்லாப் போரில் ஈடுபட்டு வந்தது குறித்து முன்னொரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். மேவார் முழுமையாக டெல்லி ஆதிக்கத்தில் வர மறுத்து கண்ணாமூச்சி ஆடியதால், நிர்வாக ரீதியில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. ராஜபுத்திரர்களை வழிக்குக் கொண்டுவர ஜஹாங்கீர் மூன்று முறை படைகளை அனுப்பினார். தொடர்ந்து பல யுத்தங்கள் நடந்தும் (கி.பி.1606-லிருந்து 1614 வரை) திட்டவட்டமான முடிவு ஏற்படவில்லை. எல்லாமே ‘டிரா’வில் முடிந்தது! கடைசியில், தெற்கே - தட்சிணப் பிரதேசத்தில் இருந்த இளவரசர் குர்ரம் வரவழைக்கப்பட்டு, அவர் தலைமையில் பெரும்படை ஒன்று மேவார் நோக்கிப் பாய்ந்து சென்றது. குர்ரத்தின் வேகமான, திறமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சரணடைந்த அமர்சிங், மொகலாய இளவரசருடன் சமாதானம் பேசினார். தோற்றுப்போன தன்னைப் பெருந்தன்மையோடு குர்ரம் நடத்தவே… நிம்மதியடைந்த அமர்சிங், தன் மகன் கரன்சிங்கை மொகலாய இளவரசரோடு ஆக்ரா அனுப்பினார். வயதாகிவிட்டதால் நேரில் தான் வரமுடியவில்லை என்ற மன்னிப்புக் கடிதத்தோடு. அங்கு அரண்மனையில் கரன்சிங் மிகுந்த மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடந்துகொண்டது கண்டு முகம் மலர்ந்த ஜஹாங்கீர், மேவார் இளவரசரைத் தன்னருகில் அன்புடன் அமர்த்திக்கொள்ள - நட்பு மலர்ந்தது. ‘‘எமக்குத் தலைவணங்கித் தனிப்பட்ட மரியாதையெல்லாம்கூட ராணா தரவேண்டியதில்லை. நம் குடையின்கீழ் இணக்கமாக நடந்துகொண்டால், அதுவே போதும்!’’ என்று எடுத்துச் சொன்ன ஜஹாங்கீர், கரன்சிங் ஊர் திரும்பியபோது யானை, குதிரை, முத்துமாலைகள், சரிகை உடைகள், வைரங்கள் பதிக்கப்பட்ட குறுவாள், தங்கக்கோப்பைகள் என்று சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பரிசுகள் கொடுத்தனுப்பினார். அதற்குப் பிறகு மேவார் ராஜபுத்திரரர்கள், மொகலாய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கவில்லை – பிற்பாடு ஔரங்கசீப் ஆட்சியில், அவர்கள் மீண்டும் சீண்டப்படும் வரை!

இதைத் தொடர்ந்து தட்சிணப் பிரதேசத்தில் அக்பர் காலத்திலிருந்தே வழிக்கு வராமல் இருந்த நிஜாம் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த வீரர் மாலிக் ஆம்பர், மராட்டியர்களோடு சேர்ந்துகொண்டு கூட்டணி அமைக்க… இளவரசர் குர்ரம் தலைமையில் ஒரு பெரும்படை 1617-ல் தெற்கு நோக்கிச் சென்றது. இளவரசரின் வீரத்தைச் சமாளிக்க முடியாத மாலிக் ஆம்பர், டெல்லிக்குக் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார். இப்படி மேவாரைத் தொடர்ந்து இங்கேயும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு, ஏராளமான நகைகளோடும் வைர - வைடூரியங்களோடும், பரிசுப் பொருட்களோடும் ஆக்ராவுக்குத் திரும்பிய இளவரசரைத் தன் அரியணையிலிருந்து இறங்கி வந்து ஜஹாங்கீர் ஆரத்தழுவிக் கொண்டார். கூடவே, மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே மகனின் தலைமீது தங்க நாணயங்களையும் வைர நகைகளையும் அருவியாகக் கவிழ்த்து அபிஷேகமும் செய்து பரவசப்பட்டார் பாதுஷா. ‘ஷாஜஹான்’ (உலகத்தை ஆள்பவர்!’) என்ற பட்டப் பெயரை இளவரசருக்கு ஜஹாங்கீர் சூட்டியது அப்போதுதான்!

மொகலாய சாம்ராஜ்யத்துக்குப் பெருமை சேர்த்த இளவரசருக்காக அந்தப்புரத்தில் வரலாறு காணாத வகையில் ஒரு கோலாகலமான விருந்துக்கு ஏற்பாடு செய்தார், மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த நூர்ஜஹான் பேகம்.

ஆனால், நூர்ஜஹான் - ஷாஜஹான் நட்பு வெகுநாட்கள் நீடிக்கவில்லை.
பின்னே..?

ஒரே உறையில் எப்படி இரு கத்திகள் இருக்க முடியும்..?!