தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 13 - வேங்கடகிருஷ்ணன்

20210409185444347.jpg

எம்.எஸ். வாழ்வே சங்கீதம்

“இசை இரண்டு விதங்களில் இசைவிக்க வேண்டும். இசையுடன் இரண்டறக்கலந்து, இசை வேறு, பாடகர் வேறு என்ற நிலைக்கு அப்பாற்பட்டு இசை மயமாகவே ஒரு பாடகர் முதலில் மாற வேண்டும். அப்படிப்பட்ட இசை கேட்பவரையும் எளிதாக இசைவித்து விடும். இந்த அறிய ஆற்றலை இயல்பாகவே பெற்றிருந்தவர் எம்.எஸ்!”

மும்பையில் பாரதரத்னா எம்.எஸ். ஆடிட்டோரியம் திறப்பு விழாவில் பேசினார் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்.

இதைவிட பொருத்தமாய் எம்.எஸ். அம்மாவைப் பற்றி யாரும் சொல்லிவிட முடியாது. நான் அடிக்கடி படிக்கும் புத்தகம் இது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, சங்கீத விமர்சகர் வீயெஸ்வி அவர்கள் எழுதிய அற்புதமான வாழ்க்கை வரலாறு என்றே சொல்லலாம். மிகப்பொருத்தமான தலைப்பு “வாழ்வே சங்கீதம்”. எம்.எஸ். அப்படித்தான் வாழ்ந்தார். அவருக்கு தெரிந்ததெல்லாம் இரண்டு விஷயங்கள் தான். இசையும், மாமாவும். கணவர் சதாசிவத்தை அவர் அப்படிதான் அழைப்பார். இது இரண்டு தவிர... அவர் வணங்கிய இருவர் காஞ்சி பெரியவரும், புட்டபர்த்தி சத்யா சாய் பாபாவும்.

ஸ்ருதியும் லயமுமாய் எம்.எஸ்-ஸும், சதாசிவமும் வாழ்ந்த வாழ்க்கை ஒரு காவியம். மாமா தான் அவர் உலகம், அது அவருடனே துவங்கி, அவரிடமே வந்தடைந்துவிடும். மதுரை சண்முகவடிவின் மகள் என்ற வைரக்கல்லை, எப்படி பட்டை தீட்டி கோபுரத்தின் உச்சியில் வைக்கவேண்டுமென்று தெரிந்து செயல்பட்டவர் சதாசிவம்.

20210409185605591.jpg

இப்போது நடிகைகள் பேரில் உடைகள், நகைகள் வருவதெல்லாம் எம்.எஸ். அம்மா துவங்கி வைத்து தான். எம்.எஸ். ப்ளூ கலர் இன்றளவும் பெண்களிடையே புகழ்பெற்றது. இந்தப் புகைப்படத்தை பாருங்கள் எவ்வளவு கோபமாய், கவலையாய் இருந்தாலும் மனது அமைதி பெற்றுவிடும்.

20210409185710832.jpg

சங்கீத கச்சேரியை பணத்துக்காக பலரும் ஆடம்பர கண்காட்சியாக நடத்திக் கொண்டிருந்த வேளையில், அதனை நாதோபாஸனையாக செய்து, அதிலேயே தோய்ந்து வாழ்ந்தவர் எம்.எஸ். அம்மா. மியூசிக் அகாதெமி முதலில் பாட அனுமதித்த பெண் கலைஞர் அவர் தான். சங்கீத கலாநிதி விருது கொடுத்து கௌரவித்த முதல் பெண் கலைஞரும் அவரே. அந்த விழாவில் அவர் பேசிய தலைமை உரை, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

சதாசிவத்தின் கடைசி நிமிடத்தையும், எம்.எஸ். அம்மாவின் கடைசி நிமிடத்தையும் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர். இது எனக்கு ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நிகழும்.

இசை ரசிகராய் மட்டுமில்லாமல், ஒரு பாரத ரத்தினத்தின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்கவேண்டும்.

பெரிய மாளிகை போன்ற கல்கி கார்டனில் இருந்தபோதும், இரண்டு ரூம் லேக் ஏரியா வீட்டிலிருந்தபோதும்... அவரின் விருந்தோம்பலும், மனிதரை மதிக்கும் பங்கும் மாறாத ஒன்று என்று அவரோடு ஐம்பது வருடங்களுக்கு மேல் மகனாகவே வாழ்ந்து, உதவியாளராய் இருந்த ஆத்மநாதன் சொல்வார்.

வீயெஸ்வியின் அற்புதமான எழுத்தும், ப்ரவாகமாய் அதில் ஓடும் சங்கீதமும், எம்.எஸ். அம்மா மேல் அவருக்கிருக்கும் பக்தியும் இந்த புத்தகத்தை அற்புதமாய் மிளிரச் செய்கின்றன. அருமையான பால் கோவாவின் மேலே தூவப்பட்ட முந்திரி, பாதாம் துறுவல்களைப் போல கருப்பு வெள்ளை புகைப்படங்கள். காலத்தோடு உறைந்துவிட்டவை. இப் புத்தகத்தை கையில் எடுத்தால், ஒரு கால யந்திர பயணத்திற்கு நான் கேரண்டீ! பயணத்தில் உடன் எம்.எஸ். அம்மாவின் சங்கீதமும் வந்தால்...... வேறென்ன வேண்டும்....