தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 15 - கலைமாமணி பாரதி திருமகன்

20210410214521149.jpg

என் தந்தையாரின் எழுத்துப் பணி கலைவாணருக்குக் கிடைத்தது போல், பலப்பல திரையுலகப் பிரபலங்களுக்கும் வாய்த்தது. குறிப்பாக - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், குணச்சித்திர நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பிரபல நகைச்சுவை நடிகர்கள் ‘டணால்’ தங்கவேலு ஐயா தம்பதியர், நாகேஷ் அண்ணா, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது…

நடிகர் திலகம், மக்கள் திலகம் நடித்த பல்வேறு படங்களில் கதை, வசனம், பாடல்… பெண் நட்சத்திரங்களில் நகைச்சுவை ஜாம்பவானாகத் திகழ்ந்த ‘ஆச்சி’ மனோரமாவுக்கு என் தந்தை வசனங்கள் எழுதியது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 1980-ம் ஆண்டுகளில் எங்களின் மீனாட்சி கல்யாண வில்லிசையைக் கேட்டவர்களுக்கு, ஒரு விஷயம் புரிந்திருக்கும்… ‘மஞ்சக்கயிறு’ என்று ஆச்சி மனோரமா ‘உனக்கும் வாழ்வு வரும்’ என்ற படத்தில் பாடிய பாடல், 80-களில் நான் வில்லுப்பாட்டில் பாடிய முதல் பாடல்… அது - என் தந்தையின் கலைவாழ்க்கையில் மிகப் பிரபலம்..!
தாலிக்கயிற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள்கூட, இந்தப் பாடலைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

20210410214613226.jpg

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நடித்த ஜி.சீனிவாசன் ஐயா (நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர்). அவருக்கும் நாங்கள் வசிக்கும் அசோக்நகரில்தான் வீடு. இதனால் அவர் அடிக்கடி என் தந்தையைச் சந்திக்க வருவார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென என் தந்தையிடம் வில்லிசையில் கேட்ட பாட்டுதான் - ‘மஞ்சக்கயிறு… தாலி மஞ்சக்கயிறுதான்..!’

20210410214638284.jpg

இதுகுறித்து ஜி.சீனிவாசன் பேசுகையில், ‘‘அண்ணே… ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் இந்தப் பாட்டை வைக்கணும்… நல்ல கருத்துள்ள பாட்டு..! நீங்கதான் தரணும்…’’ என வலியுறுத்தினார். அதற்கு என் தந்தையும் சம்மதித்தார்..!

‘‘சரி… இந்தப் பாடலை யார் பாட வேணும்..?’’ - இதுதான் அன்று இருவரிடையே முக்கிய விவாதமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, ‘‘அண்ணே… இப்பாடலை நன்கு தமிழ் தெரிந்த ஒரு பெண் பாடினாத்தான் நல்லா எடுபடும்..!’’ - என் தந்தை கூறியுள்ளார். பின்னர், இப்பாடலை பாடுவது ‘ஆச்சி’ மனோரமா’ என முடிவாயிற்று..!
‘மஞ்சக்கயிறு’ பாடலை மனோரமா பாடியபோது, என் தந்தையிடம் சொன்ன வார்த்தை - ‘‘அண்ணே… பிரமாதமான பாட்டு..! தாலிக்கயிறு தத்துவங்களை தமிழ்ல அவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்கண்ணே… இதை பாடுவது என் பாக்கியம்..!’’

பின்னர் அப்பாடலை பாடி பதிவு செய்தபின், என் தந்தையிடம் ‘‘சுப்பண்ணே… ‘ஜாம்பஜார் ஜக்கு’ பாடினதெல்லாம் மறந்து, இந்தப் பாடல் என்னை எங்கே உசரத்துல தூக்கி வெச்சிடும்ணே..!’’ என ‘ஆச்சி’ மனோரமா பெருமிதமாகக் கூறினாராம்.

நாங்கள் மேலைநாடுகளில் வில்லிசை கச்சேரிக்குச் செல்லும்போது, அங்கு நட்சத்திர கலைவிழா நடந்திருப்பதை சொல்வார்கள். முக்கியமாக ‘ஆச்சி’ மனோரமா வந்திருந்ததையும், அவர் என் தந்தையின் பெயரை பெருமையாகக் கூறி, அவரது ‘மஞ்சக்கயிறு’ பாடலைப் பாடியதையும் எங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பார்கள்.

ஒருமுறை நானும் ‘ஆச்சி’ மனோரமாவும் ஒரு வில்லிசை விழாவில் சந்தித்தோம். அப்போது அவரிடம், ‘‘அம்மா… நீங்கள் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பாடிய பாடலை, நான் மேடையில் பாடியது எனக்கு பெருமை..!’’ என்று நான் கூறினேன்.

அதை மறுத்து, ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லே… நீங்க மேடையில பாடிப் பாடி, மக்கள் மனசுல ஏத்திவெச்ச உன் தந்தையின் பாட்டை, எனக்கு சினிமாவில் பாடக் கிடைச்சது, நான் செய்த பாக்கியம்..! உன்னை நான் வாழ்த்துகிறேன்..!’’ என ‘ஆச்சி’ மனோரமா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இன்றும் நான் வில்லிசை மேடைகளில் ‘தாலிக்கயிறு’ பாட்டை பாடிக்கொண்டுதான் இருக்கிறேன் - ‘ஆச்சி’ மனோரமா ஆசியுடன்..! இன்னும் பல சுவையான சம்பவங்கள்…

- காத்திருப்போம்