தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!.- ஜாசன்

மரணம் - உண்மைதான்...

20210412132333849.jpeg

செல்போன் மணி ஒலித்தாலே, இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பில் எனக்குத் தெரிந்த, எனக்குப் பரிச்சயமான, எனது நட்பான, எனது உறவுகள் என்று ஆறு பேர் இறந்து விட்டார்கள். மனைவி இறந்ததுகூட, கணவனுக்கு தெரியாத கொடுமை... அப்பாவுக்கு எந்த ஈம கிரியையும் செய்ய முடியாமல் மகனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்.

இந்த உலகிற்கு... மரணம் என்பது மிகவும் கொடுமையானது என்பதை இந்த நோய்த் தொற்று சொல்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாக கடை திறப்பார்களா என்ற சந்தேகம் காரணமாக ஊரடங்குக்கு முன்தினம் கடைக்குப் போனபோது... வழி நெடுக ஒரு 20 கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள். சிரித்தபடியே இருக்கும் அவர்களின் மரணம், எப்படி சம்பவத்திற்கும் என்று யோசித்துப் பார்க்கும்போது எனக்கு அச்சமாக இருந்தது. மரணம் என்பது நாம் பிறக்கும்போதே விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வதில்லை. காரணம்... நம்மில் பெரும்பாலோர் சாமானியனாக இருக்கவே விரும்புகிறோம். நாமே பெருமையாக, அவ்வளவு பெரிய ஞானி எல்லாம் நான் இல்லை என்று சொல்லிக் கொள்வோம். அல்லது... தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறோமோ என்னவோ... அதுவும் எனக்குத் தெரியவில்லை.

மரணம் என்பது நொடிப்பொழுதில் நிகழும் ஒரு நிகழ்வு. இரண்டு மரணங்களை நான் நேரில் பார்த்தேன். இப்படித்தான் அது நடந்தது. ராஜீவ் காந்தி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எல்லோரிடமும் சிரித்தபடியே பேசிக்கொண்டு வந்தவர், ஸ்ரீபெரும்புதூரில் என் கண்ணெதிரில் சிதறிக் கிடந்தார். இதேபோல் என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு ஆக்சிஜன் செலுத்த வசதி இல்லை என்று தாம்பரம் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுங்கள் என்று ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள். நானும் என் சித்தி கணவரும் என் அம்மாவுடன் ஆம்புலன்ஸில் பயணித்தோம். சரியாக சனிட்டோரியம் ராம ஆஞ்சநேயர் கோயில் அருகே ஆம்புலன்ஸ் வரும்போது... என் அம்மா கண்ணைத் திறந்து, என்னையும் என் சித்தியின் கணவரையும் பார்த்தார். எல்லாமே ஒரு நொடிதான், அவ்வளவுதான்... அவரை மரணம் தழுவியது. எங்கள் சித்தியின் கணவர், தொட்டுப் பார்த்து “போயிட்டா” என்றார். இருந்தாலும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது... ஆம்புலன்சில் இருந்த என் அம்மாவை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து 10 நிமிடம் ஆகிறது என்றார்.

ஒரு காலத்தில்... கல்யாணத்திற்கு போகாவிட்டால் கூட சாவுக்கு போகவேண்டும் என்று சொல்வார்கள். நெடுங்கால பகையாக இருந்த உறவுகள், ஒரு மரணத்தில் பகையை மறந்து பாசமான உறவுகளாக மாறியதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது அதற்கும் வாய்ப்பு இல்லை போல் தோன்றுகிறது. கொரோனாவால் இறந்தவர்களை பார்க்கக்கூட அனுமதி இல்லை. இறந்த செய்தியை சொல்லும்போது, கூடவே தயவு செய்து வர வேண்டாம், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்கிறார்கள். என் சித்தியின் நாத்தனார் இறந்து போன போது, என் சித்தி பையன் அவரது உடலுடன் சுடுகாடு... சுடுகாடாக அலைந்து, கடைசியில் எப்படியோ ஒரு சுடுகாட்டில் அவரை தகணம் செய்வதை எட்டி நின்று பார்த்துவிட்டு, அவரின் சாம்பலை கடலில் கரைத்து விட்டு வந்தார். இப்போது இதுதான் வாழ்க்கை, இதுதான் நிஜம் என்று ஆகிவிட்டது.

விகடகவி க்காக தொடர்ந்து அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்தவர் பிரபு. இவர் பிரபல ஓவியர் மணியம் செல்வன் உறவினர், அவரது தயாரிப்பும் கூட. அவரை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். நேற்று அவரை கொரோனா தொற்று அபகரித்துக் கொண்டு விட்டது. இந்தக் கொடுமையை யாரிடம் சொல்வது.

இப்போது கொரோனா அலை -2, நிறைய உயிர்களை கபளீகரம் செய்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. இதில் யார் சொல்வது சரி, தப்பு என்றெல்லாம் யோசிக்காமல்... நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ, அவ்வளவு பாதுகாப்பாக இருப்பது தான் உத்தமம்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது... எடப்பாடி செய்ததை விமர்சித்த ஸ்டாலின், இப்போது ஆளுங்கட்சியானதும் அதே ஊரடங்கு, அதே நிவாரணம்... அதே கபசுரக் குடிநீர், வழக்கப்படி பிரதமருக்கு கடிதம் என்பதுதான் தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் அதே நடைமுறைதான் என்றாகிவிட்டது.

இறந்துபோன சிலரைப் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு ஒரு குறையும் அல்ல... அவர் நிறைவான சந்தோஷத்தோடு தான் இறந்து போனார் என்று சொல்வார்கள். ஆனால், அவர் மனதிலும் ஏதாவது ஒரு ஏமாற்றம் இருக்கும். அவர் வேண்டுமானால் அதை வெளிக்காட்டாமல் இருந்து இருக்கக்கூடும். வாழ்க்கையின் எதார்த்தத்தை அவர் தெரிந்து வைத்திருந்திருப்பார்.

குறிப்பாக இளைஞர்கள், தங்கள் பெற்றோரிடம் அன்பாக இருங்கள். உங்கள் உலகம் தனி. உண்மையில் நீங்கள் பிசி தான். இருந்தாலும் உங்கள் பெற்றோரிடம், சில மணி நேரம் செலவிடுங்கள். அவர்களிடம் பேசுங்கள். உங்களுக்காக அவர் என்னென்ன செய்தார் என்பதை அவருக்கு நினைவு படுத்துங்கள். அதெல்லாம் அவருக்கு சந்தோஷத்தைத் தரும் தருணங்களாக இருக்கும். அவர்களை சாப்பிட்டீர்களா என்று நாம் கேட்பதில், நமது கௌரவம் என்றும் குறைந்து போகாது. அவர்களுக்குப் பிடித்ததை வாங்கித் தாருங்கள். அவர்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள், அவர்களை அரவாணையுங்கள். அது கடமையும் கூட... நீங்களும் ஒரு நாள் வயதானவர் ஆகக்கூடும். அப்போது... இந்த அரவணைப்பு உங்களுக்கும் தேவை என்றால்.. அதை உங்கள் பெற்றோர்களுக்கு செய்துகாட்டி உங்கள் வாரிசுகளுக்கு கற்றுத் தாருங்கள்.

மரணம் என்பது நிஜம், உண்மை, அது கனவல்ல... எனவே வாழும் காலத்தில், முடிந்தவரை யாருக்கும் தீங்கு நினைக்காத வாழ்க்கையை வாழ முயற்சிப்போம்.