நாளை மே மாதம் 11ம் நாள், ஆதவனால் முனிவர்களின் செல்லப் பிள்ளையை - அவர் துயில் உணர்ந்து காலை வணக்கம், தியானம், உயிரோட்டமான வேத மந்திரங்களை உச்சாடணம் செய்வது – காண முடியாது. படைப்பின் ஆதி குருவான தக்ஷிணாமூர்த்தியின் மிக விரிவான பூஜை: குருகுலத்தில் இருந்து கற்கும் சீடர்கள், ஆசிரமத்தில் உள்ளவர்கள் வந்தவர்கள் என்று எல்லாருடனும் அன்போடு எளிமையாகக் கலந்துரையாடி அவர்களுக்கு இறைவனின் ப்ரஸாதம் மட்டுமல்லாமல் பழமைவாய்ந்த வேத ஞானத்தையும் இனிய புன்முறுவலோடு கொடுப்பது: அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் காளிதாஸனின் வார்த்தைகளில் அந்த சிவனது பெரும் சிரிப்பு – இப்படி எதையுமே காண முடியாது.
அந்தச் செல்லப்பிள்ளைதான் நமது அன்புக்குரிய ஸ்வாமி ஓங்காரானந்தா ! நடந்த நிலத்தில், மூழ்கி எழுந்த நதிகளில், சுவாசித்த காற்றில், நின்ற இடத்தில், நட்ட மரங்களில், கட்டிய கட்டிடங்களில் – ஏன் – அவர் கண்டு பயிற்றுவித்த மனங்களில் நம் ஸ்வாமிஜி அன்றும், இன்றும் என்றும் பரிமளிப்பார், தனக்கே உரிய இனிய புன்முறுவலுடன்.
அவரை நான் முதன்முதலாகக் காணும்போது அவர் அறிவார்ந்த திறமையான குரு ஸ்வாமி பரமார்த்தானந்தாஜீயிடமிருந்து அவரது சீடராக வேதாந்த சாஸ்திரத்தை முறையாகக் கற்றுக் கொண்டிருந்தார். என்றும் அவர் தம் குருவை ஒரு மிக உயர்ந்த நிலையில் வைத்து மதித்திருந்தார். ஒரு ஆறு கடலைச் சந்தித்துக் கலப்பது போல ஒருமித்த மனமும் அறிவும் ஆவலும் கொண்ட அவ்விருவரும் மிக எளிமையாக ஒருமித்துப் போனார்கள். ஏற்கனவே வேதத்தைக் கற்று அதனை ஓதுவதையும் வேதமுறை வழிபாட்டையும் முறையாகக் கற்றிருந்ததால் ஸ்வாமி ஓங்காரானந்தாவிற்கு வேதாந்த ஞான வழி – அதுவும் பூஜ்ய ஸ்வாமி தயானந்தரின் பட்டறையில் தீட்டப்பட்ட ஒரு குருவிடம் கற்பது – மிக எளிதாக இருந்தது. உலகில் எல்லாருக்கும் பரப்பப்பட வேண்டிய ஆத்ம வித்யை எனும் உயரிய வழி, ஆசார்ய சங்கரரால் பலப்படுத்தப்பட்டது. அந்த வித்யையின் இருப்பிடமாக விளங்கிய பூஜ்ய ஸ்வாமி தயானந்தர் அந்த வழியை மேன்மேலும் வளர வழிசெய்தவராவார். மதிப்பிற்குரிய காஞ்சி மற்றும் சிருங்கேரி சங்கராசார்யர்கள் ஸ்வாமிஜியின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தனர். அவரது பாரம்பரியம் மாறாத கற்பிக்கும் முறையை அங்கீகரிக்கும் விதமாக சிருங்கேரு ஆசார்யர்கள் அவருக்கு முதன்முதலாக சங்கராசார்ய சம்மானம் அளித்து சிறப்பித்தார்கள்.
ஸ்வாமி ஓங்காரானந்தா அவர்கள் இக்காலக் கல்விமுறைகளில் கற்றவர்களோடு கலந்து பழகினாலும், சங்கர மடங்களோடுள்ள தொடர்பை வளர்த்து, பழமை வாய்ந்த நம் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கவே இல்லை. நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தபோது நான் பாரம்பரிய வழக்கங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றை நேசிக்கலானேன். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் நான அவரை உபனிடதங்களைச் சொல்லச் சொல்வேன், அவரும் மகிழ்ச்சியுடன் அவற்றைச் சொல்வார். எனது நினைவில், அவர் 1990 களில் ஒருமுறை திருவண்ணாமலைக்கு வந்திருந்தபோது நாங்கள் கிரிவலம் சென்றோம். நாங்கள் எங்களது ஆசிரமத்திலிருந்து கிரிவலத்தைத் தொடங்கியதும் அவர் ஓதுதலை ஆரம்பித்து, தொடர்ந்து ஓதியபடியே வந்துகொண்டிருந்தார். இடையில் சாலையோர மரத்தடியில் சிறிது நேரம் ஓய்வுக்காக உட்கார்ந்தபோதும் அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அருணாசலைத்தைச் சுற்றிவந்த இன்பகரமான இரவுகள் அவை……..
ஒருமுறை அவர் உத்தண்டி ஆசிரமத்திற்கு வந்திருந்தார். யாரோ ஒருவர் எனக்கு ஒரு தங்கமுலாம் பூசிய சிவலிங்கத்தைத் தந்திருந்தார். நான் அதை வழிபடும் முறை அறியாததால் ஒரு காட்சிப் பொருளாக வைத்திருந்தேன். என்னைக் காண்பதற்காக அவர் ஹாங்காங் திரு விஸ்வனாதனுடன் வந்திருந்தபோது அவரே அதற்குத் தகுதியானவர் என்று கருதி நான் அதனை அவருக்கு மகிழ்ச்சியுடன் அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவர் அதற்கு ஸ்வர்ணகாலீஸ்வரர் என்று பெயரிட்டு தேனி ஆசிரமத்தில் பூஜையில் வைத்துவிட்டார். பின்னர் நான் வேதபுரி சென்றபோது அவர் பூஜை செய்து கொண்டிருந்த அந்த சிவலிங்கத்தை எனக்குக் காட்டினார். ஒடிசாவிலிருந்து நான் இரு அபூர்வச் செடிகளை எடுத்துச் சென்று ஆசிரமத்தில் நட்டு வைத்திருந்தேன். நாங்கள் தொலைபேசியில் எப்போது பேசினாலும் அந்த மரங்கள் எப்படி வளர்கின்றன என்பதைக் கண்டிப்பாகச் சொல்வார்.
நான் பல நாடுகளுக்குச் செல்லும்போது எனக்குப் பரிசயமான பலரும் அவருக்கு மாணவர்களாக ஆனதால், எங்களது பழக்கம் மேலும் நெருக்கமானது. அவரது பாரம்பரிய வளர்ப்பை நான் மதித்ததுபோல அவரும் எனது மனம்திறந்த நட்புணர்வை மிகவும் மதித்தார். நான் அவரைவிட பத்து வருடம் மூத்தவன். அன்புக்குரிய பரமார்தானந்தாஜீயும் நானும் சென்னை சின்மயா இயக்க நாளிலிருந்து இன்றுவரை நண்பர்களாக இருப்பதுபோல, ஸ்வாமி ஓங்காரானந்தாவுடனும் அவ்வித நட்பு தொடர்ந்தது.
பாரம்பரிய வழிபாட்டுறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால் அவர் பூஜ்ய ஸ்வாமி தயானந்தரின் 80வது பிறந்த நாளில் கோவையில் பல வேதவிற்பன்னர்களின் மூலம் பல நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல பல பெரும் ஞானிகளின் சமாதிகளிலும் அவர் தன் வந்தனங்களைச் செலுத்தியுள்ளார். நான் இதனை சென்னை ஆசிரமத்தில் மொட்டை மாடியில் இருந்து எழுதும்போது இங்கே தற்காலிகமாக மின்சாரம் இல்லாத்தால் வெளிச்சம் இல்லை. இதே நேரம் தொலை தூரத்தில் தேனியில் அந்த முனிவரின் செல்லப்பிள்ளை தன் சமாதியில் செல்கிறார் – அந்தச் சிறு இடத்தில் முடங்குவதற்கு அல்ல, எல்லையில்லாத அந்த பரம்பொருளின் இடத்தில் ஒன்றிக் கலக்க. அங்கே ஆதவன் ஒளிர்வதில்லை, சந்திரனோ நட்சத்திரங்களோ கூட ஒளிர்வதில்லை. அங்கு சென்று விட்டால் திரும்பி வருவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
நண்பா சென்று வா ! என்றுகூடச் சொல்ல முடியாது. எல்லையில்லாத அந்த உண்மையில் நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம். அன்றும், இன்றும் என்றும் நீ அங்கே இருப்பாய். உனது நண்பர்களும் அன்பர்களும் கூட அன்றும், இன்றும் என்றும் அங்கே இருப்போம். நாம் இல்லாமல் இருப்போம் என்பது என்றுமே இருக்காது !
ஆதலால் நண்பா ! நாளை சூரியன் உதிக்கும்போது நீ உன் வழியில் நடப்பதைக் காண முடியாது. ஆனால் உன்னில், நீயாக அந்த சூரியன் ஒளிரும், காற்று வீசும், தணல் எரியும், தேவர்கள் தலைவனும் புலன்களும் தத்தம் வேலைகள உன்மீதுள்ள மரியாதை காரணமாகச் செய்யும், மரணமும் தொடர்ந்து தன் வேலையைச் செய்யும்……….
இது நீ திரும்பி வரும் தருணமல்ல. கோவிட் ஒரு பயங்கரவாதி – எல்லாவற்றையும் எல்லாரையும் காரணமில்லாமல் தாக்கும். இவ்வுலகில் பலகோடிக் கணக்கானவர்கள் போல இவ்விதம் ஒரு விபத்தாக உன் முடிவு ஏற்றதல்ல. ஆனால் நண்பா ! உன் அமரத்துவத்தை யாரால் தடுக்க முடியும்.
நீ மாற்றங்களிலிருந்து, மரணத்திலிருந்து விடுபட்டுவிட்டாய், அமரத்துவத்திலிருந்தல்ல.
உனது விருப்பங்களும் கனவுகளும் அடுத்த தலைமுறையால் நிறைவேற்றப் படட்டும். எனக்கு நீ ஒரு நல்ல நண்பனாகவும் இளைய சகோதரனாகவும் இருந்தாய். என்றும் நான் அந்த சகோதர அன்பையும் மதிப்பையும் உணர்ந்திருந்தேன். பற்பல ஆண்டுகளில் நாம் இருவரும் பல படிகளை ஒன்றாகக் கடந்திருக்கின்றோம். நீ இல்லை என்பது எனக்கு ஒரு பெரிய இழப்பு. பூஜ்ய ஸ்வாமிஜியின் வாழ்க்கையையும் போதனைகளையும் பின்பற்றும் பல நண்பர்களுக்கும் இது ஒரு பெரிய இழப்பே !!
ஸ்வாமி ஶுத்தானந்தா
சென்னை
1.51 அதிகாலை
11.5.21
Leave a comment
Upload