தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 41 - மதன்

ஷாஜஹான்…

20210428160428570.jpeg

எதிர்ப்பு முட்கள்!

ரத்தக் கோலங்கள் போடப்பட்ட படிக்கட்டுகளில் ஏறிச்சென்று அரியணையில் அமர்ந்த ஷாஜஹானால், சில மாதங்களே நிம்மதியாக அமர முடிந்தது. உறையில் போட்ட வாளின் ஈரம் உலர்வதற்குள், புதிய சக்ரவர்தியை எதிர்த்து வெவ்வேறு இடங்களிலிருந்து வெடித்தது இரு புரட்சிகள் - இம்முறை வெளியிலிருந்து. எதிர்த்தவர்களில் ஒருவர் இந்து, மற்றொருவர் முஸ்லிம்..!

ஜஹாங்கீர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அக்பரின் அருமைத் தோழர் அப்துல் ஃபஸலை வஞ்சகமாக வழிமறித்துக் கொன்ற ராஜபுத்திரத் தலைவர் வீர்தேவ்சிங்கை நினைவிருக்கிறதா? ஜஹாங்கீர் இறப்பதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே வீர்தேவ்சிங் காலமானார். சற்றே அபரிமிதமான ஆசைகள் கொண்ட அவருடைய மகன் ஜஜ்ஹார்சிங்தேவ், இப்போது குறிவைத்தது - ஜஹாங்கீரின் மகனுக்கு!

ஆக்ராவுக்கு சுமார் நூறு மைல் தொலைவில் உள்ள ஓர்ச்சா ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த ஜஜ்ஹார் (ஆண்டு 1628-ல்) படை திரட்டிக்கொண்டு புரட்சியில் இறங்கினார். அவரை வழிக்குக் கொண்டுவர, படையுடன் கிளம்பினார் ஷாஜஹானின் பதினாறு வயது நிரம்டபிய மகன் ஔரங்கசீப். அவர் தலைமையில் 20,000 வீரர்களுடன் அலையென முன்னேறி வந்த மொகலாயப் படையைக் கண்டு கலங்கிப்போனார் ஜஜ்ஹார். காட்டுக்குள் அவர் தப்பி ஓட, மாட்டிக் கொண்ட அவருடைய மகன்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள்.

ஜஜ்ஹாரின் ஒரு மகன் - சிறுவன் துர்காபன் மொகலாயர்களால் மதமாற்றம் செய்யப்பட்டார். அரண்மனைப் பெண்கள், ஷாஜஹானின் அந்தப்புரத்துக்குப் பணிப்பெண்களாக அனுப்பப்பட்டனர். ஜஜ்ஹாரின் மற்ற இரு மகன்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, ‘‘அந்த இளைஞர்கள் மதம் மாறப் போகிறார்களா, மரணத்தைத் தழுவப் போகிறார்களா?’’ என்று கேட்டனுப்பினார் ஷாஜஹான். இரு இளம் கைதிகளும் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இப்படியாக, அக்பர் மெனக்கெட்டுக் கட்டி வைத்த மத ஒற்றுமைக் கோட்டையில் ஷாஜஹான் ஆட்சியில் விரிசல்கள் கிளம்பியது சற்றே விபரீதமான நிகழ்ச்சிதான். (பிற்பாடு ஔரங்கசீப் காலத்தில் கோட்டையே சரிந்தது வேறு விஷயம்!).

மத்தியப் பிரதேசக் காட்டுப்பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த ஜஜ்ஹார், அங்கே வசித்த காட்டுவாசிகளுடன் ஏதோ தகராறில் ஈடுபட… கொடூரமாக அவர்களால் கொல்லப்பட்டார் அவர். காட்டுக்குள் கிடந்த ஜஜ்ஹாரின் உடலைக் கண்டெடுத்த ஒரு மொகலாயத் தளபதி, இறந்தவரின் தலையை ஏக மகிழ்ச்சியுடன் வெட்டியெடுத்து ஷாஜஹானுக்கு அனுப்பினார். மக்கள் பார்வைக்காகச் சில நாட்கள் கோட்டை வாசலில் கூர்மைப்படுத்தப்பட்ட ஒரு மூங்கில் கம்பத்தில் செருகி வைக்கப்பட்டது, அந்த இந்து மன்னரின் தலை!

இஸ்லாமிய வீரர் கான்ஜஹான் லோடி - ஷாஜஹானுக்கு ஏற்படுத்தியது, சற்றே தீவிரமான தலைவலி!

மொகலாய சக்ரவர்த்தியின்கீழ் பல ஆப்கானிய வீரர்கள் அடக்க ஒடுக்கமாகப் பணியாற்றி வந்தாலும், ‘ஒரு காலத்தில் டெல்லியில் அமர்ந்து ஆட்சி புரிந்தவர்கள் அல்லவா நாம்!’ என்ற எண்ணம் பல ஆப்கானிய வீரர்களின் மனதில் புரட்சிக் கனலாகக் கதகதத்துக் கொண்டிருக்கத்தான் செய்தது. கான்ஜஹான் லோடியும் மொகலாய அரசின்கீழ் குஜராத் பிரதேசத்திலும் பிறகு தட்சிணப் பகுதியிலும் கவர்னராக இருந்தவர்தான். மனதுக்குள் ‘மொகலாய ஆக்கிரமிப்பை’ வெறுத்தார் அவர். ஜஹாங்கீர் இறந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த குறுகிய காலக் குழப்பத்தைக் கண்ட அவர், இதுவே தருணம் என்று முடிவுகட்டி புரட்சிக் கொடியைக் கையில் தூக்கினார். ‘குறைந்தபட்சம் தென்னிந்தியாவையாவது கைப்பற்றிப் புதிய சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும்’ என்பது அவர் கனவு!

பிரச்னை பண்ணிய கான்ஜஹான் லோடி மீது ஏற்பட்ட கோபத்தை அடக்கிக்கொண்ட ஷாஜஹான், லோடியை ஆக்ராவுக்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தினார். ஆனால், தலைநகரில் லோடி அவ்வளவு மரியாதையாக நடத்தப்படவில்லை. ஷாஜஹானை அவர் நம்பவும் இல்லை. தவிர, கவர்னராக இருந்தபோது அரசுப் பணத்தில் புகுந்து விளையாடியதாகக் குற்றச்சாட்டுகளும் அவர்மீது இருந்தன. நடக்கவிருந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் டெல்லி மேலிடம் ‘பிடியை இறுக்கி’ ஊழல் பட்டியல் படிக்குமோ, ஒருவேளை தான் சிறைப்படுத்தப்படுவோமா என்று ஏதேதோ கற்பனை செய்துகொண்டு கலக்கமுற்ற கான்ஜஹான், ஒரு நாள் இரவு ஆக்ரா அரண்மனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்!

உடனே மொகலாயப் படை அவரைத் துரத்த, ஓர்ச்சா மன்னர் ஜஜ்ஹார்சிங் ராஜ்யத்துக்குள் தஞ்சமடைந்தார் லோடி. ஜஜ்ஹாரின் மூத்த மகன் விக்ரம்ஜித், யாராலும் சுலபத்தில் தொடர முடியாத மலைப்பாதைகள் வழியாக லோடியை அனுப்பித் தப்பிக்க வைத்தும் பலனில்லாமல் போனது. காட்டிலும் மேட்டிலும் அந்த ஆப்கானிய வீரர் அலைய, மொகலாயப் படை சற்றும் தளராமல் துரத்தியது. வேறு வழியாகத் தப்பப் பார்த்த லோடியின் மகன்களும் நெருங்கிய நண்பர்களும் அடங்கிய ஒரு குழு மொகலாயப் படையிடம் சிக்கிக்கொண்டு, எல்லோருடைய தலையும் சீவப்பட்டது என்ற தகவல் வந்து சேர்ந்ததும் கான்ஜஹான் நம்பிக்கையிழந்து துவண்டு போனார்.
தன் கூடவே வந்த தன் வீரர்களைப் பார்த்து, ‘‘எங்கேயாவது சென்று தப்பித்துக் கொள்ளுங்கள். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நடப்பது நடக்கட்டும்…’’ என்று அவர் விரக்தியுடன் சொல்ல, பலர் பிரிந்து சென்றார்கள். சிலர், அந்தச் சோதனையான நேரத்திலும் தங்கள் தலைவனுக்கு அரணாக நின்றார்கள். கடைசியில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட மொகலாய வீரர்கள் செலுத்திய ஈட்டிகள், அந்த ஆப்கானிய வீரரின் உடலைக் குத்திக் கிழித்தன. கடைசிவரை போரிட்டு, வீர மரணம் அடைந்தார்கள் கான்ஜஹானின் வீரர்கள். துண்டிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தலைகளோடு ஆக்ரா திரும்பியது ஷாஜஹானின் படை. கோட்டை வாசலில் தலைகளைத் தாங்கத் தயாரானது, நூற்றுக்கும் மேற்பட்ட மூங்கில்கள்!

உறவினர் எதிர்ப்பு, உள்நாட்டுப் புரட்சிகள்… அடுத்தபடி வாலாட்டியவர்கள், இந்திய மண்ணில் வியாபாரம் செய்ய வந்த வெளிநாட்டினர்!

வங்காளத்தில் சில ஆண்டுகளாகவே ஏராளமான போர்ச்சுக்கீசியர்கள் தங்கி, உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜஹாங்கீர் காலத்திலிருந்தே வங்காளத்தில் உப்பு வியாபாரம் செய்ய போர்ச்சுக்கீசியர்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டிருந்தது. திறமையான அந்த வியாபாரிகளிடமிருந்து டெல்லி கஜானாவுக்குப் பல ஆயிரக்கணக்கில் வரிப் பணம் வந்ததால், ஷாஜஹான் அரசு அவர்களின் நடவடிக்கையில் தலையிடாமல் இருந்தது. இதனால் குளிர் விட்டுப் போன போர்ச்சுக்கீசியர்கள், ஏதோ கொள்ளைக்காரர்கள் ஸ்டைலில் சுற்றுப்புற ஊர்களில் திடீர்ப் பிரவேசம் செய்வதும், அப்பாவி மக்களை மிரட்டித் தண்டல் வசூலிப்பதிலும் ஈடுபட்டனர். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், நூற்றுக்கணக்கில் ஏழை மக்களை அடிமைகளாக வசப்படுத்தினர். கிறிஸ்துவப் பாதிரிகளை வைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றினார்கள். போகப் போக, கொழுத்துப் போன அவர்களின் அராஜகம் அதிகரித்தது. வங்காள ஊர்களில் துப்பாக்கி ஏந்திய போர்ச்சுக்கீசியர்கள் கும்பல் கும்பலாக நுழைவதும், பெண்களையும் வயதானவர்களையும் பணயக் கைதிகளாகப் பிடிப்பதும், அவர்களுடைய வீட்டு முன்னாலேயே அவர்களைச் சவுக்கால் அடித்துத் துன்புறுத்துவதும் சகஜமான காட்சிகளாக ஆனது. அழுதுகொண்டே பல இளைஞர்கள் பணம் சேகரித்துக் கொடுத்துத் தங்கள் பெற்றோர்களைத் திரும்ப அழைத்துக் கொண்ட பரிதாப நிகழ்ச்சிகளும் நடந்தன. ஒருவழியாக, ஷாஜஹான் காதுகளை இந்தத் தகவல்கள் சென்றடைய… கொதித்துப் போனார் பாதுஷா.

உடனடியாக டெல்லியிலிருந்து கிளம்பியது ஒரு அதிரடிப் படை. மூன்று மாதங்கள் வங்காளத்தில் தங்கி, போர்ச்சுக்கீசியர்களைப் புரட்டியெடுத்தார்கள் மொகலாய வீரர்கள். நிலைமை தலைகீழானது. போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மொகலாயத் தளபதிகளுக்கு லட்சக்கணக்கில் லஞ்சமாகத் தர முயன்று, அதில் தோல்வி அடைந்தனர்.

டெல்லிப் படையின் வாட்கள் சுழன்றன. துப்பாக்கிகள் தொடர்ந்து இயங்கின. மொத்தம் இறந்த போர்ச்சுக்கீசியர்கள் 10,000 பேருக்குமேல். ஆண்-பெண் என்று சுமார் ஐயாயிரம் பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக, அவர்கள் கொண்டு வந்திருந்த நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் பிற்பாடு மொகலாயர்களால் சுக்குநூறாக உடைக்கப்பட்டு, யமுனை நதியில் வீசப்பட்டன.

இந்த ஒட்டுமொத்த அதிரடி தண்டனைக்குப் பிறகு, போர்ச்சுக்கீசியர்கள் கப்சிப் என்று அடங்கிப் போனார்கள்.

இதற்கிடையே டெல்லிக்கு அடங்காமல் சுதந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அகமத்நகர், பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகளை வழிக்குக் கொண்டுவர, பலம்பொருந்திய பெரும்படையுடன் இந்தியாவின் தெற்குப் பகுதிக்குள் பிரவேசித்தார் ஷாஜஹான்.

ஆண்டு 1631…

ஷாஜஹானை நிலைகுலைய வைத்த அந்தக் கொடூரமான சோகம் நிகழ்ந்தது...