தொடர்கள்
கவர் ஸ்டோரி
கொரோனா இறப்பு... தனியார் மருத்துவமனைகள் காரணமா..?! - 2 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20210428221408589.jpeg

பொழச்சு கிடந்தா பாத்துக்கலாம்... இது ஊர் பக்கங்களில் அதிகம் சொல்லப்படும் பேச்சு வழக்கு. முக்கியமாக... பெரியவர்கள், ஏதாவது ஒரு வேலையோ அல்லது ஆசையோ இருந்தால் நாம் உயிரோடு இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று குறிக்கும் பொருள். இப்போது நம் அனைவரின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. பொழுவிடிந்தால் யார் உயிரோடு இருப்பார்,,, யார் இருக்கமாட்டார் என்றே தெரியவில்லை. நம்மை சுற்றி உள்ள சிலருக்கு பொழுது விடியாமலே போகிறது.

சென்ற ஆண்டு, பெரும் பணக்காரர் ரத்தன் டாடா அவர்கள் முத்தான சில வார்த்தைகளை சொன்னார். நான், நமது கனவு, லட்சியம், ஆசைகள் என அனைத்தையும் மூட்டை கட்டி வையுங்கள். தற்போது உயிரோடு இருப்பது மட்டுமே முக்கியம். உயிரை காப்பாற்றிக் கொள்வோம். இந்த நிமிடத்திலும் அது தான் உண்மை. கொரோனா முதல் அலை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இறப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், இரண்டாம் அலை அப்படியல்ல... நம் கூட இருப்பவர்கள், நமது நெருங்கின நண்பர்கள், உறவினர்களை சில நாட்களில் சாய்த்து விடுகிறது.

சென்ற வருடம் சிலருக்குத்தான் ஆக்சிஜென் தேவைப்பட்டது. ஆனால். இன்று பாதிக்கப்பட்ட பெரும்புபாலோனோர்க்கு ஆகிசிஜன் தேவைப்படுகிறது. சில அரியவகை மருந்துகளும் தேவைப்படுகிறது. ஏதோ ஒரு அவசிய தேவைக்காக வெளியே வந்து, தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், தங்கள் சொந்தங்களை இழந்தவர்கள் அதிகம். தேர்தல் பிரச்சாரங்கள், ஆட்சி மாற்றம் போன்றவைகளுக்கு நடுவே... மக்கள் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புது ஆட்சி அமைந்து, இப்போது தான் மக்கள் மீது கவனம் திரும்பியிருக்கிறது. அரசாங்கத்தின் லகானை இவர்கள் பிடிப்பதற்குள் கொரோனா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.

கோடை காலத்தில் விடுமுறையில் சுற்றுலாத்தலங்களும், கடற்கரைகளும், திரையரங்கங்களும், பொருட்காட்சிகளிலும் குதூகலமாக குழுமியிருக்க வேண்டிய கூட்டம்.... இப்போது மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பிணவறைகளிலும் குவிந்து கிடக்கின்றனர். முதன் முறையாக... மயாணங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. தங்கள் உறவினர் முகத்தை ஒருமுறை கூட பார்க்காமல், தகனம் செய்யப் படுகின்றனர். மகன் வைக்கவேண்டிய கொல்லியை, யாரோ ஒருவர் வைக்கிறார். எந்தச் சடங்குகளும் இல்லாமல் ஈமக்கிரியைகள் நடகின்றது.

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க... முழு ஊரடங்கிலும், 24 மணிநேரம் தங்கள் வியாபாரத்தை செய்கின்றனர் சில தனியார் மருத்துவமனைகள். தன் மனித இனம் இப்படி நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களிடமிருந்து பிடுங்கும் வரை லாபம் என்று தங்களால் முடிந்தவரைக்கும் பிடுங்குகின்றனர். உண்மையிலேயே இப்போது தான் நமக்கு அரசாங்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் கருணை உள்ளம் புரிகிறது.

பெரிய.. பெரிய ரெசார்ட்டுகளில், கோடை விடுமுறைக்கு 3 நாட்கள், 7 நாட்கள் என்று நாம் சென்று களைத்து வந்தாலும்... இவ்வளவு செலவு ஆகாது. வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் இழக்கும் நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களின் நிலை மிகவும் மோசம். தமிழக அரசாங்கம் கட்டணம் நிர்ணயம் செய்து, தற்போது ஒரு அளவுகோல் கொடுத்துள்ளது. இருந்தாலும் அதனையெல்லாம் யாரும் மதிப்பதாக தெரிவதில்லை.

நாள் ஒன்றுக்கு 5000 ரூபாயில் தொடங்கி, லட்சணக்கில் வசூல் செய்கின்றனர். நாம் விசாரித்த வகையில் பெரும்பாலானோர் சுமார் 8 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை கூட செலவு செய்யவேண்டியுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் தவிர, மற்றவர்கள் அனைவருக்கும் சாதாரணமாக, நாள் ஒன்றுக்கு சில ஆயிரங்களே போதுமானது. ஏனென்றல்... இவர்கள் தனிமை படுத்தியிருப்பது மட்டுமே இவர்களுக்கான வைத்தியம். அதற்கு எதற்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம், ஒரு லட்சம் என்று தெரியவில்லை. இதைவிட மற்றோரு ஆய்வு நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது.

ஆம். அதிக இறப்புகள் தனியார் மருத்துவமனை சிகிச்சைகளில் தான் நடக்கிறது. அல்லது தனியாரிடம் சிகிச்சைபெற்று மிகவும் மோசமானவுடன், அரசாங்க மருத்துவமனைக்கு சென்று இறக்கின்றனர். இதனை விசாரித்தபோது... ஒரு மனசாட்சி உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர், அதனை ஒத்துக்கொண்டார்.

ஊரடங்கினால் பாதகிக்கப்பட்டுள்ள சில நட்சத்திர ஹோட்டல்கள், தற்போது தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனைகள் போன்று ரூ. 5000-ல் ஆரம்பித்து 50,000 வரை நாள் ஒன்றுக்கு வசூல் செய்கின்றனர். அரசாங்கத்தின் 104-க்கு அழைத்து புகார் அளித்தாலும், பிரயோஜனம் இருப்பதாக தெரியவில்லை.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குவியும் நோயாளிகளின் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர் சில தனியார் மருத்துவமனைகள். அரசாங்கம் பாரபட்சம் காட்டாமல், நெறிப்படுத்தி அவர்களின் பொருளாதார சுமையை குறைத்தால் மட்டுமே நிம்மதி.

தொற்று உறுதியானவுடன், தான் பிழைப்போமா மாட்டோமா என்று ஏற்படும் பீதியில் தொடங்கி, தங்கள் குடும்பத்தார்க்கு தொற்று பரவி விடுமோ.. மருத்துவமனையில் இடம் கிடைக்குமோ, ஆகிசிஜன் கிடைக்குமோ, உயிருடன் திரும்புவோமோ... மாட்டோமோ என்று பீதியில் இருக்கும் மக்களுக்கு... தான் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில், ஒரு பில்லை குடுத்து... நெஞ்சுவலி வரவைக்கும் நிலை சில தனியார் மருத்துவமனையில் உள்ளது. ஏற்கனவே பல மனஉளைச்சலில் இருக்கும் நோயாளியை, மீண்டும் நோக செய்வது மனதை ரணமாக்குகிறது.

சில தனியார் மருத்துவமனைகள் சமூக அக்கறையுடன், தாமாக முன்வந்து கட்டணத்தை குறைத்து, சிகிச்சை அளித்தால் மட்டுமே இறப்புகள் குறையும். மக்களாளும் நிம்மதி பெருமூச்சு விடமுடியும். என்னதான் அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வந்து, அவர்களை கண்காணிக்க தனி குழு அமைத்து செயல்பட்டாலும்... அவர்களே தங்கள் நிலையை மாற்றிக்கொண்டால் மட்டுமே... மக்கள் நிம்மதியாக நலம் பெற்று வீடு திரும்புவர். கருணை காட்டுவார்களா...