தொடர்கள்
கவர் ஸ்டோரி
கொரோனா இறப்பு... தனியார் மருத்துவமனைகள் காரணமா?! - ஆர்.ராஜேஷ் கன்னா, தில்லையர்கரசி சம்பத்

20210427083327301.jpg

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதன் தாக்கம் அதிகரித்து, தற்போது அதன் வேகம் சற்று தணிந்துள்ளது.

தமிழகத்திலுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 578 தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்திரவிட்டது.

தற்போது அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 578 தனியார் மருத்துவமனைகளின் மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டுகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அத்துடன் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா நோயாளிகளின் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழக அரசு உத்திரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் பல தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சையை சிறப்பாக செய்தாலும்... சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் பணம் பிடுங்கும் அரக்கர்களாக மாறி விட்டது என்று பாதிக்கப்பட்டவர்களின் புலம்பலாக உள்ளது.

2021042708340342.jpg

அரசு ஆஸ்பத்திரிகளில் இடமில்லை என்று தகவல் கொரோனா நோயாளிகளுக்கு பரப்பப்பட்டு, பின் தனியார் ஆஸ்பத்திரியில் எப்படியாவது ஒரு பெட் பிடித்து சிகிச்சைக்கு சேர்வதற்குள் குதிரை கொம்பாக மாறிவிடுகிறது. சில தனியார் மருத்துவமனை நிர்வாகம் கேட்கும் அட்வான்ஸ் தொகையினை உடனே செலுத்தினால் தான், மருத்துவமனையில் அட்மிஷன் கிடைத்து சிகிச்சை தொடங்கும் துர்பாக்கிய நிலை தற்போது உள்ளது.

சமீபத்தில் தின்னனூரை சேர்ந்த ஒருவர் கொரோனா நோய் தொற்று தாக்கி, 8 நாட்கள் வீட்டு தனிமையில் தனியார் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் அவர் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார், 3 நாட்கள் கழித்து ஆக்சிஜன் லெவல் இரவில் குறைந்து விட்டது என்று மருத்துவர்கள் ஊசி ஒன்றை செலுத்தினார்கள். விடியற்காலை கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட நபர் இறந்து விட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து, மருத்துவமனை பில்லை கறாராக இறந்த நபரின் உறவினர்களிடம் கறந்துவிட்டார்கள். கொரோனா நோய் தொற்றுள்ளதால், உடல் அந்தப் பகுதி பேரூராட்சி சுடுகாட்டிற்கு அனுப்பபட்டது.

மீனம்பாக்கம் பகுதியிலிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்ட தனது மகனை, அவருடைய தந்தை சேர்த்தார். தனியார் மருத்துவமனை 3 நாட்கள் சிகிச்சை அளித்துவிட்டு, உங்கள் மகனின் உடல் நிலை மோசமாகி வருகிறது, எனவே வேறு மருத்துவமனையில் சேருங்கள் என்று 3 நாட்களுக்கான கட்டணமாக ரூபாய் 6 லட்சத்தை வாங்கிக் கொண்டு, ஆம்புலன்ஸில் வேறு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். தன் மகன் மீண்டும் வேறு தனியார் ஆஸ்பத்திரியில் சேர ரூ. 1 லட்சமும், சிகிச்சை கட்டணமாக ரூபாய்1.5 லட்சமும் அவரது தந்தை செலுத்தினார். தனது மற்றொரு மகன் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு வேறொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து விட்டார். தன் மகனை சேர்த்திருந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், தன்னை மிகவும் மோசமாக திட்டி அங்கு பணியாற்றும் நபரைவிட்டு, தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியே பிடித்து தள்ளியதாக கொரோனா பாதித்த நபரின் தந்தை (அனில் குப்தா) வேதனையுடன் அங்கிருந்த நிருபர்களிடம் தெரிவித்தார்.

சென்னை புரசைவாக்கத்தினை சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், வீட்டின் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்ந்தனர். கொரோனா சிகிச்சைக்கு தங்களின் மருத்துவ காப்பீடு முலம் பணம் பெற்றுக்கொள்ளுங்கள் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொரோனா பாதித்த நபர்கள் சொல்லிவிட்டனர்.

அடுத்த 7 நாட்களுக்குள் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்துவிட்டாலும், அந்தத் தனியார் மருத்துவமனை, 2 நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்யாமல், மருத்துவ காப்பீடு முழுவதையும் கறைத்துவிட்டு தான் அனுப்பியது. இதில் கொடுமை என்னவென்றால், ஒரே அறையில் கொரோனா சிகிச்சை பெற்ற இவர்களை, தனி தனி அறைகளில் சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறி சார்ஜ் பெற்றுக்கொண்டனர். அத்துடன் கொரோனாவிற்கு அணியும் பிபீஇ கிட்டும், மருத்துவர்களின் ஃபீஸ் என ரூபாய் 1 லட்சம் இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொண்டு தான், தங்களை தனியார் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தது. அந்த நேரத்தில் பலர் கொரோனா நோய் தீவிரமடைந்து, பெட் கிடைக்காமல் தவித்து வந்த நேரம் என கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற இருவரும் பரிதாபமாக தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சாமியார் மடத்தை சேர்ந்த ஜாஸ்மின் சுபதா என்பவரின் தாய், தந்தைக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டதும், அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். தாய் குணமாகி வீடு திரும்பிய நிலையில், தந்தை மருத்துவமனையில் கூடுதலாக சில நாட்கள் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். தனது தந்தை சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ 1.5 லட்சம் கட்டிய நிலையில், மேற்கொண்டு சிகிச்சை கட்டணமாக ரூ. 3 லட்சம் கட்டினால் மட்டுமே, இறந்த உடலை தர முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கறாராக சொல்லி விட்டது. தனியார் மருத்துவமனை பில்லை வாங்கி பார்த்த ஜாஸ்மின்... தனது தாயும், தந்தையும் ஒரே அறையில் சிகிச்சை பெற்ற நிலையில், இருவருக்கும் தனித் தனியாக அறை வாடகை போடப்படிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மருத்துவ சிகிச்சை பில்லில், தேவையில்லாமல் பல செலவுகள் சேர்க்கப்பட்டிருந்ததை கண்டு இறந்து விட்ட தனது தந்தையின் உடலை நீங்களே வைத்து கொள்ளுங்கள், என்னிடம் இவ்வளவு பணமில்லை என்று சொல்லி விட்டு வெளியேறிய செய்தி தமிழக மீடியாக்களில் பிரேக்கிங் நியூசாக ஒடியது.

சென்னை ஆதம்பாக்கம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொண்ட கொரனா நோயாளி, தனது சிகிச்சைக்கான மருத்துவ பில்லில் இதர சார்ஜ்கள் என்று தனியாக ருபாய்1.5 லட்சம் மருத்துவமனை வசூலித்துகொண்டது. இத்தனைக்கும் பாதிக்கபட்ட நபர் ஆக்சிஜன் பெட்டில் கூட சிகிச்சை பெறவில்லை. பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தனக்கு தெரிந்த சமுக ஆர்வலர் ஒருவரை அழைத்து சென்று அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பிக் கேட்க... மருத்துவமனை எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தது.

20210427083507856.jpg

கடந்த வாரம் வரை… கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தும் ரெமிடெசிவிர் மருந்தை வைத்து சில தனியார் மருத்துவமனைகள் அடித்த கூத்தை பார்த்து, தமிழக மக்களின் நெஞ்சம் பதறியது. கொரோனா நோயாளிகளின் சொந்தங்களிடம் ரெமிடெசிவிர் மருந்தை உடனே வாங்கி வந்தால் தான், உங்கள் உறவினர்கள் உயிர் பிழைப்பார்கள் என சில தனியார் மருத்துவமனைகள் கூறி... பலரை இரவு - பகலாக, கால் கடுக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்டார்கள் .

மருந்து கிடைக்காமல் அல்லாடியவர்களுக்கு, மருந்து கள்ளச் சந்தையில் எங்கே கிடைக்கும் என்பதையும் அதற்கான வழியினையையும் சில மருத்துவமனைகள் சொல்லியதாகவும் பல செய்திகள் உலா வந்தது. ரெமிடெசிவிர் விற்ற கள்ளசந்தைக்காரர்களுக்கும், சில தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பதை தமிழக இண்டலிஜென்ஸ் காவல்துறையினர், அரசிற்கு அவசர நோட் போட்டு அனுப்பினார்கள்.

கீழ்பாக்கத்தில் விற்று வந்த ரெமிடெசிவர் மருந்து விற்பனையை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தமிழக அரசு மாற்றியது. இரண்டு நாட்கள் ரெமிடெசிவர் மருந்தினை வாங்க கட்டுகடங்காத கூட்டத்தினை பார்த்த தமிழக அரசு, விற்பனையை நிறுத்தி நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளில் ரெமிடெசிவர் மருந்து வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்பின் ரெமிடெசிவர் மருந்து கொரோனா நோய் சிகிச்சை பட்டியலில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. சில தனியார் மருத்துவமனைகள் ரெமிடெசிவர் மருந்தினை கள்ள சந்தையில் விற்று நல்ல கல்லா கட்டியதாக காவல்துறையினரிடம் பரவலான பேச்சாக உள்ளது.

சில தனியார் மருத்துவமனைகளில் சேரும் போதே, அட்வான்ஸ் தொகையாக ருபாய் ஒரு லட்சம் கட்டி விட வேண்டும். சாதா ஆக்சிஜன் வைப்பதற்கு நாளொன்றுக்கு ரூ 40,000 வரையும், வெண்ட்டிலேட்டர் வைக்க ரூ. 60,000-லிருந்து ரூ. 1 லட்சம் வரை அரசு நிர்ணியித்த கட்டணத்தைவிட, அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் கசிகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் இனி உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிந்தும், மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணமாக ஒரு பெரிய தொகையை பெற்றுகொண்டு, அதன்பின் குற்றுயிராக இருக்கும் கொரோனா நோயாளியை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் வைத்து, நடு இரவில்... சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்படுகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் இருந்த வந்த நோயாளிகள் சிலர் அடுத்த 30 நிமிடங்களில் இறந்துவிடுகின்ற கொடுமையும் நடக்கிறது. இதனை அரசு மருத்துவமனை நிர்வாகம், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்.... சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக பணம் பெற்றுக்கொண்டு, நோயாளி இறக்கும் தருவாயில் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டித்த அறிக்கை வெளி வந்தது. இந்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த இரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் பெயர்கள் அடிபடுகின்றன். விரைவில் இந்த இரு தனியார் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை பாயும் என அரசின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் வரிசையாக காத்திருக்கும் ஆம்புலன்ஸில் இருக்கும் பல கொரோனா நோயாளிகள், ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி இறுதி கட்டத்தை அடையும் முன் அவர்களிடம் பணத்தினை வசூல் செய்து கொண்டு அனுப்பிய நோயாளிகள் என்று அரசு மருத்துவமனை ஊழியர் நம்மிடம் தெரிவித்தார்.

இதே போன்று கொரோனா பாதித்த ஒரு கர்ப்பிணி பெண்ணை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தனது ஆம்புலன்சிலேயே கொண்டு வந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அரசு மருத்துவர், வேதனையாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்பின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளை, நடு ராத்திரியில் அரசு மருத்துவமனைகளில் கொண்டு வந்து சேர்க்கக் கூடாது என்றும் பகலில் தான் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு தகவல் அனுப்பட்டது.

2021042708354677.jpg

இது இப்படி என்றால்... சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு தரும் உணவுக்கான விலை, அதிகமாக இருப்பதாக அங்கு தங்கி வந்த நோயாளிகள் விரக்தியோடு தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு, 4 டீஸ்பூன் அளவே இருக்கும் ஒரு சிறிய கப் டீயின் விலை ரூ. 18 என்றால் எவ்வளவு அநியாயம் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

தர்மபுரியில் இருக்கும் ஆளுங்கட்சியின் எம்பிக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரில், கொரோனாவிற்கு எடுக்கும் ஸ்கேனுக்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. சுற்று வட்டார அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் கூட, இந்த ஸ்கேன் சென்டருக்கு தான் வந்தாக வேண்டிய நிலை உள்ளது என பாப்பி ரெட்டி பட்டி அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமி குற்றம் சாட்டுகிறார்.

திருத்தணி அருகே டிடி கல்லூரி வளாகத்தில் அரசு அமைத்து இருந்த 200 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, திருவள்ளுரில் இருக்கும் ஆளுங்கட்சி அதிகாரவர்க்கத்திற்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இந்தப் பகுதியில் ஒரே பேச்சாக உள்ளது.

20210427083711996.jpg

தற்போது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் கொரோனா நோயாளிகள், முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் எவ்வளவு அதிகபட்ச பணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு செய்தி தாள் விளம்பரம் செய்தது. இதனால் தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுடன் வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் காப்பீட்டு நிறுவனம், தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்தும் கட்டணம் கொஞ்சம் அதிகமாக உள்ளது என மக்கள் பேசிகொள்கிறார்கள்.

சிகிச்சைக்கு வந்த கொரோனா நோயாளிகளிடம் வசூலித்த அதிகப்படியான மருத்துவ பில் தொகையை வைத்து, சில தனியார் மருத்துவமனைகள் தங்களின் நீண்ட நாள் கடனை அடைத்து விட்டதாக மருத்துவர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட கட்டண விகிதத்தை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

கொரோனா நோய் பாதிப்பு தீரும் வரை, தமிழக அரசு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை முறைபடுத்தி கண்காணிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குரலாக உள்ளது.

கொரோனோ தாக்கம் முடியும் வரை, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுபாட்டில் எடுத்து, இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், பூமிராஜ் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 1.58 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ காப்பீடு மூலம் இலவச சிகிச்சை அளிக்க முடியும். காப்பீடு இல்லாதவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்கள் எப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். இது சம்பந்தமான விவரங்கள் மே 31 தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்திரவிட்டது.

கொரோனா நோய் தாக்கத்தை விட, சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கையிருப்பு மொத்ததையும் கரைத்து அனுப்புவதைத்தான் தாங்க முடியவில்லை என்பதே பல நோயாளிகளின் புலம்பலாக உள்ளது.

20210427083752518.jpg

எது எப்படியோ, இந்தக் கொரோனா காலத்தில், சில தனியார் மருத்துவமனைகள் மக்களின் உயிர் பயத்தை மூலதனமாக வைத்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்து வருவதால், பல கொரோனோ நோயாளிகளின் உயிரிழப்புகளுக்கும் இந்த மாதிரி தனியார் மருத்துவமனைகள் காரணமாகி விட்டது என்பது தமிழகம் முழுவதும் பேச்சாக உள்ளது!