தொடர்கள்
Daily Articles
நேசித்த புத்தகங்கள் - 16 - வேங்கடகிருஷ்ணன்

20210430171825388.jpg

அருணாச்சல மகிமை

பயணக் கட்டுரை எழுதுவது என்பது சுலபமான வேலை இல்லை. நீங்கள் எங்கே போகிறீர்கள், அதை அடையும் வழி, பிரயாணம் செய்யும் முறை, மேலும் அங்கு ஏற்படும் அனுபவங்கள், நீங்கள் சந்திக்கும் மனிதர்கள் உங்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் தங்குமிடம் பற்றிய விவரங்கள் என எல்லாவற்றையும் படிக்கும் வாசகருக்கு சுவாரஸ்யமான முறையில் சொல்ல வேண்டும். சிறிது போரடித்தாலும் வாசகர் அதைத்தாண்டி போய்விடுவார். புகழ் பெற்ற பயணக் கட்டுரைகளை தமிழில் மிகவும் ரசிக்கும்படியான நடையில் சிலரே இதுவரை எழுதி இருக்கிறார்கள் ஏகே செட்டியார், பரணிதரன், இதயம் பேசுகிறது மணியன் ஆகிய மூவரும் அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

எழுத்தாளர் சிட்டியும், ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணத் தொடரில் இதை முயற்சி செய்து, வெற்றியும் பெற்றிருக்கிறார். இதில் வெளிநாடுகளுக்கு சென்று அந்த அனுபவத்தை பயணக்கட்டுரைகள் ஆக எழுதியவர்கள் ஏ.கே. செட்டியாரும், இதயம் பேசுகிறது மணியனும்.

உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கும்போது மணியன் எழுதிய பயணக் கட்டுரைகளும் அவருடைய உலகளாவிய தொடர்பும் எம்ஜிஆருக்கு மிகவும் உதவியாய் இருந்தன என்று சொல்வார்கள். பரணிதரன் எழுதிய பயணக் கட்டுரைகள், இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஆன்மிக பயணங்களைப்பற்றி சொல்வதாகவே அமைந்தது. அதில் மிக முக்கியமானது ‘அருணாசல மகிமை’. திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள இதுவரை வெளியுலகிற்கு தெரியாத கோவில்கள், ஆன்மீக விஷயங்கள், மகான்கள் பற்றி அவர் விளக்கி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, எல்லோராலும் விரும்பிப் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. இதை எழுத அவரைத் தூண்டியது காஞ்சி பெரியவர் என்றும் அவர் சொன்னதுண்டு. ஏற்கனவே வெளிநாட்டு மனிதர்களால் பிரபலமடைந்த ரமணாசிரமத்தை இவர் இன்னும் விளக்கமாக எழுதி மேலும் பலரை ரமணரின் பக்தர்கள் ஆக்கிவிட்டார். அதிகம் அறியப்படாத சேஷாத்ரி சுவாமிகளை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் பரணிதரன் தான்.

நான் திருவண்ணாமலையிலேயே என்னுடைய சிறுவயதில் ஐந்து வருடங்கள் இருந்ததால், அவர் அதனை விவரிக்கும் போது என்னால் அதோடு ஒன்ற முடிகிறது. நானும் எனது தம்பியும் மன உளைச்சளாயிருக்கும் போது உடனே எடுத்து படிக்கும் புத்தகமாக இதுதான் இன்று வரை இருக்கிறது. இதை கலைஞன் பதிப்பகம் முதலில் இரண்டு பாகங்களாக வெளியிட்டு, பின்னர் ஒரே புத்தகமாக இதனை வெளியிட்டார்கள். 1987ஆம் ஆண்டு முதலில் பதிப்பிக்கப் பெற்றது. இந்த புத்தகத்தில் எனக்கு இருக்கும் ஒரே குறை புகைப்படங்கள் இல்லாதது மட்டும்தான். என்னிடம் விகடனில் வெளிவந்த போது அப்படியே வாரவாரம் சேகரித்து வைத்து, பைண்ட் செய்த ஒரு காப்பியும் உண்டு. அதில் எல்லா புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கும்.

பூண்டி சாமியாரை அந்தப் பகுதி மக்கள் தவிர வேறு எவரும் அறிந்திருக்க மாட்டார்கள், மிக ஆச்சரியமான மகான் அவர். அதேபோல ரத்தனகிரி மௌன சுவாமிகள் பாலமுருகன் அடிமை அவருடைய வரலாறு மிக ஆச்சரியமானது. மின்சாரத் துறையில் வேலை செய்து கொண்டிருந்த அவர், ஒரு நாள் மாலை திடீரென அலுவலகத்திலிருந்து வந்து மலை ஏறி முருகன் சன்னிதானத்தில் அமர்ந்து, அப்படியே சன்யாசம் பெற்றவர். அங்கேயே தன் உடைகளை கலைந்து, ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு பேச்சை நிறுத்திக் கொண்டவர். அதன்பிறகு இன்றுவரை அவர் பேசுவதே இல்லை. ஏதாவது தேவை என்றால் அவசரம் என்றால் எழுதி காண்பிப்பார். பரணிதரன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இன்னொரு மகான் இவர்.

அதேபோல தபோவனம் ஞானானந்தகிரி ஸ்வாமிகள், விட்டோபா சுவாமிகள், வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஏறத்தாழ 700 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் ஆன்மீக நாட்டம் கொண்ட எவரையும் தன்வயப்படுத்தி விடும். புத்தகம் படித்து முடித்த மறுநாள், ஊரடங்கு இருந்தாலும் உடனே கிளம்பி திருவண்ணாமலைக்கு போக வேண்டும் என்ற மன எண்ணம் உங்களுக்கு ஏற்படும். பரணிதரன் காஞ்சி பெரியவரின் பரிபூரண அருளைப் பெற்றவர். அவரைப் பற்றியும் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதேபோல ஷீரடி சாய்பாபாவை குறித்தும் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தனது வாழ்நாளை அதிக அளவு ஆன்மீகத்திற்காகவே செலவு செய்தவர் பரணிதரன்.

இன்னொரு பக்கம் நாடகம், அரசியல், கார்ட்டூன், தலையங்கம், கட்டுரைகள் என்று தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டவர். ஆனந்த விகடனின் தனிப் பெரும் பொக்கிஷம். அருணாசல மகிமை இப்போதும் ஒரே பாகமாக கிடைக்கிறது. வாங்கி படித்து ஆன்மீகத்தில் நம்மை உயர்த்திக் கொள்வோம். அருணாசல மகிமை - அற்புதம், அனந்தம், அமைதி.