தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 18 - கலைமாமணி பாரதி திருமகன்

பல வருடங்களாக கவியரசர் கண்ணதாசனும், பார்வதி கண்ணதாசனும் சொந்த அண்ணன் - அண்ணி போல் என் தந்தையை – கவிஞர் சுப்பு ஆறுமுகத்தை பாசத்துடன் கவனித்துக் கொண்டது – அழகான அன்பின் வரலாற்றுப் பதிவு!

கலைத்துறையில் என் தந்தைக்கு மணமுடிக்க, என்எஸ்கே-மதுரம் தம்பதி எடுத்த முயற்சிக்க... என் தந்தை அன்போடு அதை மறுத்து, ‘எனக்கென்று என் மாமன் மகள் மகாலட்சுமி இருக்கிறாள். அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன்…’ என்று சொல்ல… ‘அப்படியா… சங்கதி..!’ என கலைவாணர் தம்பதி மகிழ்ச்சியுடன் வாய்விட்டு சிரித்தனர்.

பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் கலைவாணர்-மதுரம் தம்பதியரின் ஆசியுடன், கவியரசு கண்ணதாசனின் வாழ்த்துடன் என் தந்தையின் திருமணம், கடந்த 1954-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ம் தேதி நெல்லையில் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது. இன்று அவர்கள் – என் பெற்றோர் சுப்பு ஆறுமுகம்-மகாலட்சுமி, ஆயிரம் பிறை கண்ட ஆதர்ச தம்பதி… ஆச்சார்யாள் அனுக்கிரகம் பெற்றவர்கள்..!

20210431114551952.jpg
இந்த நேரங்களிலேதான் என் தந்தை திரைப்படப் பணிகளில் மட்டுமே முழுமையாக ஈடுபட்டு வந்தார். P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய முதல் பாடல் ‘அன்போடு இன்பமாய் வாழலாம் நண்பனே…’ என்ற பதிவு, கவிஞர்-PBS ஆகியோரின் காம்போ சிறப்பு.

2021043111464391.jpg
கடந்த 1957-ம் ஆண்டில் வெளியான ‘பாக்யவதி’ படத்தில் சிவாஜி பாடிய பாடல் - ‘வெண்ணிலவின் ஒளி தனிலே…’ சிவாஜி-பத்மினி ஜோடி. ஏ.எம்.ராஜா, டி.வி.ரத்னம், எஸ்.சி.கிருஷ்ணன் பாடியது. கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் பாடல்.

அதேபோல், ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் ‘துள்ளி துள்ளி...’ என்ற எஸ்.ஜானகியின் பாடல் – அப்பாவின் எழுத்து..!

பிற்காலத்தில் ஒரு நாள், எங்களுக்கு ஏற்பட்ட ஒரு இனிய சம்பவம்…
ஒருமுறை எனது தந்தையுடன் நாங்கள் வில்லிசை முடித்துவிட்டு, ‘வீடு திரும்ப நேரமாகுமே…’ எனக் கருதி மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்டஸ் ஓட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்றோம். அங்குதான் பாடல் பதிவுகளின்போது அந்த ஓட்டலில்தான் P.B.ஸ்ரீனிவாஸ் அறை எடுத்து தங்குவார் என்பதை பலரும் அறிவர். நாங்கள் உள்ளே சென்றதும், என் தந்தையும் P.B.ஸ்ரீனிவாசஸ் அண்ணாவும் நேருக்கு நேர் சந்தித்துவிட்டனர். அவர்களின் மலரும் நினைவுகளை..! எங்களுக்கு சாப்பாடு மறந்தது… சங்கீதம் சிறந்தது… இங்கிதம் இனித்தது..!

என் தந்தையுடன் அமர்ந்திருந்த எங்களிடம் P.B.ஸ்ரீனிவாஸ் தழுதழுத்த குரலில் சொல்கிறார் – ‘‘உங்கள் தந்தை எழுதிய பாட்டுதான், என் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைக்க உதவிய முதல் பாடல்… குதிரை வண்டிக்காரன் பாடும் பாடல்… ‘அன்போடு இன்பமாக வாழலாம் நண்பனே… என்னாலே நீ, உன்னாலே நான்…’’ என்று எங்களிடம் P.B.ஸ்ரீனிவாஸ் அண்ணா பாடியே காண்பித்தார்..!

மருதமலையில் எங்கள் வில்லிசைக்குத் தலைமை தாங்கி, கலைஞர் P.B.ஸ்ரீனிவாஸ் பேசினார் – ‘‘வள்ளி திருமணம் ‘இதுவரை கேட்டா மாதிரி இருந்தது’னு நீங்க எல்லோரும் சொல்லுவீங்க. ஆனால், நான் சொல்றேன்… கவிஞர் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டுக்கு, வள்ளி திருமணம் எனக்குப் பார்த்தா மாதிரி இருந்தது..! அவர் முழு சினிமாக்காரர், ஒழுக்கமானவர்… கோயில்களில் பாட முழுத் தகுதியான ஆத்மா அவர்..!’’ என்று P.B.ஸ்ரீனிவாஸ் சொல்லி, என் தந்தை அவருக்காக எழுதிய படப் பாடல்களை எல்லாம் சொல்லி, பாடி காண்பித்து, மருதமலை மக்களுக்கு மகிழ்வூட்டினார்!

இருப்பதோ மருதலை… பாடுவதோ, இசை மலை... பாராட்டப்படுவதோ… தமிழ் மலை..! அங்கிருந்த அனைவரும் மலைத்தோம்… வியந்தோம்… ரசித்தோம்..! இதேபோல், இன்னும் பல சுவையான சம்பவங்களுக்கு…

- காத்திருப்போம்