எழுத வந்தது எப்படி..!

நான் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று விருப்பப்பட்டு எழுதத் துவங்கிய காலத்தில் ‘இலக்கிய வீதி’ எனக்கு அறிமுகமானது. எழுத்தாளர் இனியவன், எழுபதுகளில் தினத்தந்தி, ராணி, குமுதம், விகடன் என்று சிறுகதை மற்றும் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தவர். என்னுடைய பள்ளி ஆசிரியர் எம்.ஏ. லட்சுமி நரசிம்மன். அவர் ஆசிரியர் என்பதையும் தாண்டி மாணவர்களிடம் தோழமையாக இருப்பார். அவர் மாலை முரசு பகுதிநேர நிருபராகவும் இருந்தார். அவரது நிருபர் பணி என்னை ஈர்த்ததால், பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவருடன் அதிக நேரம் செலவிட்டேன். எனக்கும் நிருபர் வேலை வாங்கித் தாருங்கள் என்று கெஞ்சிய காலம் எல்லாம் உண்டு.
எழுத்தாளர் இனியவன் எனது ஆசிரியருக்கும் பழக்கம். ஆசிரியர் மூலம் அவர் எனக்கு பரிச்சயமானார். ‘இலக்கிய வீதி’ என்ற இலக்கிய அமைப்பை எழுத்தாளர் இனியவன் துவங்கியபோது, நானும் அதில் அங்கம் ஆனேன். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இலக்கிய வீதி, மதுராந்தகம் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் கூடும். இலக்கிய ஆர்வலர்கள், எழுத ஆசைப்படுபவர்கள், படிப்பவர்கள் என்று ஒரு நிறைவான கூட்டம், இலக்கிய வீதிக்கு வருவது உண்டு. இலக்கிய வீதி புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக மாதம்தோறும் கதை போட்டி நடத்துவார்கள். மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் கதை எழுதும் ஆர்வலர்கள், இலக்கிய விதிக்கு கதை அனுப்புவார்கள். அவ்வாறு அனுப்பப்படும் கதைகளில், சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அந்த எழுத்தாளரை அந்தக் கூட்டத்திலேயே கதையை படிக்கச் சொல்வார்கள். இதுதவிர பிரபலமான ஒரு நாவலை ஒருவர் திறனாய்வு செய்து, திறனாய்வு அந்த சம்பந்தப்பட்ட படைப்பாளி முன்பே நடக்கும். பலசமயம் விமர்சனங்கள் கடுமையாக இருக்கும். பாலகுமாரன் அந்த விமர்சனங்களை பொறுமையாக கேட்டு, அவற்றுக்கு பதில் சொலவார். சிலவற்றிற்கு விளக்கம் சொல்லாமல் சமாளித்தார். ஒரு முறை கோவி மணிசேகரன் எழுதிய ‘ஒரு தீபம் ஐந்து திரிகள்’ நாவலை திறனாய்வு செய்தவர், அச்சுப்பிழை உள்பட எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி அவரது கட்டுரையை வாசிக்க... கோபத்தின் உச்சத்திற்கே கோவி மணிசேகரன் போய்விட்டார். அந்த திறனாய்வாளரை கடுமையாக விமர்சித்து பேசினார். திறனாய்வாளர் சிரித்தபடியே எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்திருந்தார்.
துணுக்கு எழுத்தாளர்கள் இலக்கிய வீதியில் பேசியது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடும் அளவுக்கு இலக்கிய வீதி பிரபலமாக இருந்தது. இலக்கிய வீதியில் பாலகுமாரன், மாலன், ஜே எம் சாலி, விக்கிரமன், புஷ்பா தங்கதுரை, கோவி மணிசேகரன், சாண்டில்யன், ராஜேந்திர குமார், பூம்புகார் பதிப்பாளர் பரதன் என்று பல பிரபல எழுத்தாளர்கள் உலா வந்திருக்கிறார்கள். இலக்கிய வீதி மூலம் எஸ். குமார் மற்றும் மது ராஜேந்திரன் போன்றவர்கள் பிரபல பத்திரிக்கைகளில் கதைகள் எழுதும் அளவுக்கு வளர்ந்தார்கள். இவர்கள் இருவரும் என்னுடைய பள்ளியில் சீனியர்கள். எங்கள் வீட்டு சமையலறையில் குண்டு பல்பு வெளிச்சத்தில், தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல்... கத்தரிக்காய். புடலங்காய், வாழைக்காய் பஜ்ஜியை பாலகுமாரன் சாப்பிட்டார் என்று சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அது நடந்தது. எங்கள் வீட்டில் பாலகுமாரன் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் பஸ்ஸில்தான் வந்தார்கள். அவர்களே விலாசம் விசாரித்து, இந்து உயர்நிலைப் பள்ளிக்கு வருவார்கள். வந்ததும்... வாருங்கள் என்று நாங்கள் அவர்களை வரவேற்போம்.
இனியவனுக்கு எல்லா எழுத்தாளர்களையும் தெரியும். அவர் சொன்னால் இலக்கிய வீதி நிகழ்ச்சிக்கு மறுக்காமல் வருவார்கள். அவர்கள் எல்லோரிடமும், என்னை அவர் அறிமுகம் செய்து வைப்பார். என் எழுத்தார்வத்தை தூண்டியதில், இலக்கிய வீதிக்கும், இனியவனுக்கும் முக்கிய பங்கு உண்டு. நானும் அந்த சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்வேன். அப்போதெல்லாம் என் எழுத்துநடையை, அதை அவர் ஆங்கிலத்தில் நேரேஷன் என்று குறிப்பிட்டு, நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய எழுத வேண்டும். நிச்சயம், நீ நன்றாக எழுதி பிரபலம் ஆவாய் என்றார். நான் நிறைய கதைகளை எழுதி... விகடன், குமுதம், வாரமலர் இவற்றிக்கு அனுப்புவேன். சில வாரத்தில் பிரசுரிக்க முடியாததற்கு வருந்துகிறோம் என்று அச்சிட்ட துண்டு சீட்டுடன் என் கதை திரும்பி வரும். அப்போது என் பெரிய அண்ணன், திரும்பி வந்த கதைகளைப் படித்து விட்டு, இப்ப வர கதைகளை விட நீ நல்லா தானே எழுதி இருக்க என்பான். அதற்குப் பிறகு, ஏதாவது தபால் வந்ததா என்று கேட்டால்... மூன்று வருந்துகிறோம் வந்திருக்கிறது என்று மூன்று கவரை தருவான். உண்மையில் என் நிலைமை ஆரம்பத்தில் இதுதான்.
தூர்தர்ஷனில் நான் பணிபுரிந்த போது... நான் ‘பூவிதழ்’ என்று ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தி வந்தேன். அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அந்த இதழுக்கு வடிவமைப்பு செய்து, படங்கள் வரைந்தது தூர்தர்ஷன் கிராபிக்ஸ் இலாகா தலைவர் கே.எஸ். நடராஜன் என்பவர். அந்தக் கால தடங்கலுக்கு வருந்துகிறோம் கார்ட்டூன் எல்லாம் அவரின் கற்பனை தான். அவரும் பிரபல ஓவியர் மணியம் செல்வனும் ஓவியக் கல்லூரியில் தோழர்கள். ஒரு நாள் மணியம் செல்வன் தூர்தர்ஷனுக்கு வந்தபோது, எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார் நடராஜன். ‘பூவிதழ்’ பார்த்து பரவசப்பட்டு என்னை வாழ்த்தினார். ஒரு இதழில் மணியம் செல்வன், ஜெயராஜ், ராமு, செல்லம், ஜீகே மூர்த்தி, மாருதி ஆகியோர் சிறுகதைகளுக்கு படங்கள் வரைந்து தந்தார்கள். எல்லா கதைகளும் நான்தான் எழுதினேன். ஒருவரே எத்தனை கதைகள் இப்படி எழுத முடியும் என்று லேனா தமிழ்வாணன் ஆச்சரியப்பட்டு, அதை பாராட்டாகவே எனக்கு எழுதி அனுப்பினார். மணியம் செல்வம் வீட்டுக்கு போகும் அளவுக்கு, நானும் அவரும் நெருக்கம் ஆனோம்.
எனது திறமையை பத்திரிகை உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முனைப்போடு, என்னை பத்திரிக்கை ஆசிரியர் சாவி அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார் மணியம் செல்வம். அவர் என்னை பாராட்டினார். அதன் பிறகு ராவ் சார், மணியம் செல்வம் வீட்டுக்கு வந்தபோது... இவர்தான் ஆனந்த விகடனில் முக்கியமானவர் என்று எனக்கு அவரை அறிமுகப் படுத்தி விட்டு, அவரிடமும் என்னைப் பற்றி சொன்னார்.
ராவ் சார், மறுநாள் விகடன் ஆபீஸ் வர சொன்னார். வரும்போது பூவிதழ் பத்திரிக்கைகளையும் எடுத்து வாருங்கள் என்றார். அவர் சுந்தரம் சாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். சுந்தரம் சாரிடம் நான் பூவிதழ் பற்றி சொல்ல... எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். அடுத்த வாரம் என் படத்துடன், பூவிதழ் கையெழுத்துப் பத்திரிக்கை பற்றி கால் பக்கத்துக்கு கட்டுரை வெளியாகியிருந்தது. அது பூவிதழுக்கு மிகப்பெரிய விளம்பரத்தை தந்தது. எங்கெங்கோ எங்கெங்கோ இருந்து என் பெயருக்கு தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு கடிதங்கள் வர ஆரம்பித்தது. இப்படித்தான் எனக்கு விகடன் வாசல் கதவு சற்று அகலமாக திறக்கப்பட்டது.
பிறகு, நானே விகடனுக்கு செய்திகளெல்லாம் எழுத ஆரம்பித்தேன். ஜூனியர் விகடன் தொடங்கிய இரண்டாவது இதழில், ‘இதுதான் கூடுவாஞ்சேரி’ என்ற என் கட்டுரை வெளியானது. அதன் பிறகு ராவ் சார், மதன் சார் இருவரும் உங்களுக்கு ரிப்போர்ட்டிங் நன்றாக வருகிறது... எனவே நீங்கள் பேட்டிகள் எடுக்க முயற்சியுங்கள் என்றார்கள். அதன் பிறகு பிரபலங்களை பேட்டி எடுக்க எல்லாம் நான் அனுப்பப்பட்டேன். ‘மிஸ்டர் கழுகு’ பிரபலமான போது... எனக்கும் கழுகு மேட்டர் எழுத ஆசையாக இருந்தது. ஆனால், அதை ராவ் சாரிடம் சொல்ல தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. நான் பேட்டிக்கு அலைந்ததில், பல அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு நெருக்கமான புள்ளிகள் பலர் எனக்கு பழக்கமானார்கள். நிறைய அரசியல் கிசுகிசுக்கள், என் காதுக்கு வர தொடங்கியது. நான், காலையில் ஆபீஸ் துவங்குவதற்கு முன்பே மேட்டரை ராவ் சார் டேபிளில் வைத்துவிட்டுப் போய் விடுவேன். ஒரு முறை நிறைய அரசியல் கிசுகிசுக்கள் எழுதி, அவர் டேபிளில் வைத்துவிட்டு போய்விட்டேன். திங்கட்கிழமை காலை பேப்பர் கடையில், கழுகார் செய்தி மழை என்ற போஸ்டர் மாட்டியிருந்தார்கள். நான் ‘ஜூனியர் விகடன்’ வாங்கி முதலில் நான் எழுதிய மேட்டர்களையெல்லாம் முதலில் பார்த்தேன். அப்போதெல்லாம் இரண்டு மூன்று மேட்டர்களை நான் எழுதி இருப்பேன். அவற்றையெல்லாம் படித்துவிட்டு கழுகு மேட்டரை புரட்டினேன்... பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன். ராவ் சார், நான் எழுதி வைத்திருந்த எல்லா மேட்டரையும் பயன்படுத்தியுள்ளார். முழு கழுகு மேட்டரும் நான் எழுதியதுதான். அன்று எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை விவரிக்க முடியாது. மாலை நான் விகடன் ஆபீஸ் போனபோது... “எல்லாம் நல்லா இருந்தது... எப்போதும் எழுதும் செய்தியை கிராஸ் செக் பண்ணி எழுதுங்கள்” என்று தட்டிக் கொடுத்தார். அதன் பிறகு நிறைய ‘கழுகு’ பகுதிக்கு நிறைய மேட்டர்கள் நான் எழுதினேன்.
ராவ் சார், மதன் சார்... இருவரும் ஜூனியர் விகடனை பார்த்துப் பார்த்து... ஒரு நல்ல சிற்பத்தை வடிவமைக்கும் சிற்பியை போல், கவனத்துடன் செதுக்கி மெருகேற்றினார்கள். அவர்களது சிந்தனை எப்போதும் ஜூனியர் விகடனை இன்னும் எப்படி முன்னிலைப் படுத்தலாம் என்று தான் இருக்கும். இன்று பல அரசியல் வார இதழ்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது அந்தக் கால ஜூனியர் விகடன் தான்.
ராவ் சார் கட்டுரைகளை எடிட் பண்ணும் ஸ்டைலே அலாதி. அவரைப் பொருத்தவரை எந்தச் செய்தியையும் நாம் கோட்டை விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருப்பார். அவருக்குத் தெரியாத அரசியல் தலைவர்களே இல்லை. நல்ல கட்டுரைகளை வஞ்சனையில்லாமல் பாராட்டுவார். அவருக்கு நேரம் முக்கியம். குறித்த காலத்தில் செய்தி வந்தாக வேண்டும். இல்லை என்றால்... அவ்வளவு தான். அவரிடம் அதிக பாராட்டு வாங்கியவன் நான்தான்.... அதே அளவு அதிக டோஸ் வாங்கியவனும் நான்தான். அந்த ‘டோஸ்’ தான் என்னை பத்திரிகையாளனாக மாற்றியது என்பதுதான் உண்மை.

Leave a comment
Upload