தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

விகடகவி யார் எழுதிய டைரி குறிப்பு....

(யாரும் வெளியே வரகூடாது என்று முதல்வர் சொன்னதை, சீரியஸாக ஏற்றுக்கொண்டு விகடகவியார் செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டார்)

மீண்டும் வசூல் ராஜாக்கள்...

20210428204815816.jpeg

முதல் நான்கைந்து நாட்கள் சிவனே என்று கொரோனா வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், தற்போது அதிகாரிகள் மாற்றல் கோப்பை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். தினந்தோறும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றல் என்று செய்திக் குறிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சில அமைச்சர்கள், தங்கள் துறைக்கு இவர் செயலாளராக இருந்தால் தங்களுக்கு தோதாக இருப்பார்கள் என்று முதல்வரிடம் சில அதிகாரிகள் பெயரை சிபாரிசு செய்தார்கள். ஆனால், அமைச்சர்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்றதாக தெரியவில்லை. அதே சமயம்... அதிகாரிகள் மாற்றம் இப்போது கோட்டையில் சர்ச்சைக்குரிய விஷயம் ஆகிவிட்டது. தமிழக அரசின் முக்கிய துறை செயலாளர்கள், மே 25ஆம் தேதி இரவு மாற்றப்பட்டனர். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கார்த்திகேயன் ஐஏஎஸ் பணிமாற்றம். இவர் வீட்டுவசதி துறை செயலாளராக இருந்தார், அவரை நெடுஞ்சாலை துறை செயலாளராக மாற்றினார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு, அவர் உயர்கல்வித் துறை செயலாளராக பணிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். காரணம்... சமூக வலைத்தளங்களில் அதிகாரி கார்த்திகேயன் பற்றி வந்த தகவல்கள்தான் ஸ்டாலின் மனதை மாற்றி இருக்கிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் ஆணையராக கார்த்திகேயன் இருந்திருக்கிறார். அப்போது அவர் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமாகி டெண்டர் போன்றவற்றில், அமைச்சருக்கு, தனக்கு என்று சாதகமாக சில பல விஷயங்களை செய்துக்கொண்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினே, வேலுமணி பெயரை குறிப்பிடும் போது கார்த்திகேயன் பெயரையும் குறிப்பிட்டு குற்றம் சுமத்தி அறிக்கை எல்லாம் வெளியிட்டிருக்கிறார். அப்படிப்பட்டவரிடம் டெண்டர், கமிஷன் என்று பணம் கொழிக்கும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பதவி எப்படி அவருக்குக் கிடைத்தது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் பறந்தது. அதன் விளைவுதான் இந்த மாற்றல். ஆனால், இப்போதும் அவர் பணம் கொழிக்கும் உயர்கல்வித் துறை செயலாளராக தான் மாற்றியிருக்கிறார்கள். கோட்டை வட்டாரம்... எங்கேயோ தப்பு நடக்கிறது என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

வேற ரூட்ல போகிறோம்...

சென்ற ஆட்சியில் டெண்டர் கமிஷன் என்று உலாவந்த ஒப்பந்தக்காரர்கள், ஆட்சி மாறியதும் தற்போதைய முக்கிய அமைச்சர்களிடம் டீல் பேச... அதற்கு அமைச்சர்கள், முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல்வரிடம் அமைச்சர்கள் பேசியபோது... அதெல்லாம் வேண்டாம் என்று முதல்வர் சொல்லிவிட்டார். இந்தத் தகவலை அமைச்சர்கள், ஒப்பந்தக்காரர்களிடம் சொல்லிவிட்டார்கள். அதற்கு அமைச்சர்களிடம் ஒப்பந்தக்காரர்கள் சொன்ன பதில் தான் சூப்பர். சரிண்ணே.. நாங்க வேற ரூட்ல போகிறோம்.

வருங்கால அமைச்சர் உதயநிதி...

20210428204836256.jpeg

இப்போது சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை வைத்துதான், சென்னை மாநகர சட்டமன்ற உறுப்பினர்கள், எல்லா திட்டங்களையும் தொடங்க வேண்டும் என்று உத்தரவாகி இருக்காம். இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, அமைச்சர் உதயநிதி என்று அழைக்கப்படுவாராம். அதற்குத்தான் இந்த வெள்ளோட்டம் என்கிறார்கள்.

சர்ச்சை பாபு...

2021042820485515.jpeg

சேகர்பாபு... மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது, தானுண்டு தன் வேலை உண்டு என்று நிகழ்ச்சியில் போட்டோவுக்கு போஸ் தருவதுடன் நிறுத்திக் கொள்வார். தற்போது அமைச்சரானதும், ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் அவர் பேசிய பேச்சு, இப்போது அவருக்கே வில்லங்கமாகிவிட்டது. மே 26 ஆம் தேதி, வட இந்தியர்கள் நீண்ட ஆண்டுகளாக நடத்தும் மகாவீர் இன்டர்நேஷனல், சென்னை மெட்ரோ இயக்கம் சார்பாக ஏழை மக்களுக்கு முக கவசம், உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுடன் சேர்ந்து கலந்துகொண்டார் அமைச்சர் சேகர் பாபு. அதில் அவர் பேசும்போது... நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூட என்னை கேட்டார்... வட இந்தியர்கள் நமக்கு வாக்களிப்பதில்லை, அவர்களுக்கு ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார். இத்தேர்தலில் எனக்கு நீங்கள் போட்ட வாக்கு 50 தான், மீதி எல்லா வாக்குகளையும் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு தான் போட்டிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் வாழ்க்கைத் தரத்தை தமிழ்நாட்டில் உயர்த்தியது பாரதிய ஜனதா இல்லை, திராவிட கட்சிகள் தான். நீங்கள் எங்களை புறக்கணித்தாலும், நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம் என்று திருக்குறள் எல்லாம் சொல்லி அவர்களை குத்தி காட்டியிருக்கிறார். பேசி முடித்து இறங்கிவந்த அமைச்சரிடம், தயாநிதி மாறன் என்னை எதுக்கு தேவையில்லாமல் போட்டு கொடுத்தீங்க என்று எரிச்சல் பட்டிருக்கிறார்.

அதிமுக கோஷ்டி சண்டை...

20210428204912962.jpeg

அதிமுகவை பொறுத்தவரை தற்போது இரட்டை தலைமையை கைவிட்டு, ஒரே தலைமை என்ற நோக்கில்தான் போக விரும்புகிறார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே தற்சமயம் சட்டமன்ற உறுப்பினர்கள். மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது. அதிமுகவின் சமூக வலைத்தளங்கள் கூட எடப்பாடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. ஓபிஎஸ் அறிக்கைகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இதற்குக் காரணம்... அதிமுகவின் ஐடி விங் ஆட்கள் அனைவரும் எடப்பாடி ஆதரவாளர்கள். அவர்களை எடப்பாடி, பராமரித்து வருவதும் ஒரு காரணம். சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், ஓபிஎஸ்ஸை அவரது சகோதரர் இறந்து போனது பற்றி துக்கம் விசாரிக்க தேனி போனார். அப்போது ஓபிஎஸ், தன் உள்ளக் குமுறல்களை சண்முகத்திடம் கொட்டித் தீர்த்தார். சண்முகமும், பாட்டாளி மக்கள் கட்சி சேலத்தில் மட்டும்தான் ஒத்துழைப்பு தந்தது. மற்ற மாவட்டங்களில் அவர்கள் நமக்கு வேலை செய்யவில்லை. இது எடப்பாடிக்கும் தெரியும். நான் தோல்வி அடைந்ததற்கு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் நம் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரே காரணம் என்று அவர் தன் பங்குக்கு தன் குமுறல்களை கொட்டி தீர்த்தார். இப்போதைக்கு சண்முகம், ஓபிஎஸ் பக்கம். இப்படி எடப்பாடியால் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி, தன் பக்கம் இழுக்கும் வேலையில் ஓபிஎஸ் இறங்கிவிட்டார். எதிர்க்கட்சி என்றாலும் அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

காங்கிரஸ் கட்சியில் செல்வப்பெருந்தகை செல்வாக்கு...

20210428204930627.jpeg

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி... பிரின்ஸ், ராஜேஷ், விஜயதாரணி, செல்வப்பெருந்தகை ஆகிய நால்வரும் இந்த நாற்காலிக்கு ஆசைப்பட்டார்கள். இதில் முதல் மூவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதற்காக இரண்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. ஆனால், முடிவு எட்டவில்லை. கடைசியில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு விவரங்களை டில்லிக்கு அனுப்பி, நீங்களே பார்த்து சொல்லுங்கள். எனக்கு எதற்கு வம்பு என்று உட்கார்ந்துவிட்டார் கே.எஸ். அழகிரி.

செல்வப்பெருந்தகை பெயரை டெல்லி திடீரென அறிவித்தது. செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு காரணம்... அவர் வாங்கிய ஓட்டுக்கள் இல்லை. அந்த நால்வரில், அவர்தான் குறைவான வாக்குகள் வாங்கியிருந்தார். மொத்தம் அவர் வாங்கிய வாக்குகள் 3, அவர் வாக்கையும் சேர்த்தே. செல்வப்பெருந்தகை, இதை வேறு மாதிரி மாற்றினார். அவர் பா. சிதம்பரத்தின் ஆதரவாளர். தற்போது தமிழக பாரதிய ஜனதா தலைவராக, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக, அதே இனத்தைச் சேர்ந்தவரை நியமிப்பது தான் சரி என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பாளரான மல்லிகார்ஜுன கார்கேயிடம் யோசனை சொன்னார் பா. சிதம்பரம். பட்டியல் இனத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும், உடனே சம்மதம் தெரிவித்து விட்டார். இதுதான் நடந்தது என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.