தொடர்கள்
கொடுரம்
ராங் லைன் ராஜகோபால்... - ஸ்ரீநிவாஸ் பார்த்த்சாரதி

2021042822301091.jpeg

ராஜகோபால் என்ற பெயருக்கும், பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம் போலிருக்கிறது. ஏற்கனவே நம் கண் முன்னே ஒரு ராஜகோபால் பல வருடங்கள் நற்செயல்களால் சேகரித்த நற்பெயரை, தான் உருவாக்கிய வணிக சாம்ராஜ்யத்தை, பெண் ஆசையால் சுக்கு நூறாக்கினார். இதோ மற்றுமொரு காமுகன் ராஜகோபால் மூலம், 60 வருட பாரம்பரிய நற் பெயரை இழந்திருக்கிறது பத்மா சேஷாத்திரி பள்ளி. அந்தப் பள்ளியில் படித்தவர்களும், வேலை செய்யும் ஆசிரியர்களும், அதனை சார்ந்தவர்களும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

இந்தப் பள்ளியின் பெயரை சொன்னாலே... அதிகாலை 4 மணி முதல் விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்றதுதான் பலருக்கும் ஞாபம் வரும். அந்தப் பள்ளியில் சேருவது அவ்வளவு எளிது அல்ல. காரணம் அந்தப் பள்ளியின் தரம். அதுவே அதன் வளர்ச்சிக்குக் காரணம்.

ஒரு ஆசிரியர் செய்த கேவல செயலுக்கு, எப்படி நிர்வாகம் பொறுப்பாக முடியும் என்று நிர்வாகத்தினர் கேட்கிறார்கள். கண்டிப்பாக நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

வரும் தகவல்களை பார்க்கும்போது... இது ஒரு நாள், ஒரு மாதம் நடந்தவை அல்ல... பல வருடங்களாக, தொடர்ந்து நடந்த ஒரு கேடு கெட்ட செயல். எழுத்துப்பூர்வமாக எந்த மாணவியும் புகார் அளிக்கவில்லை என்றாலும்... அரசல் புரசலாக இந்த விஷயம் கண்டிப்பாக நிர்வாகத்துக்கு தெரியவந்திருக்கும். கண்டும் காணாமல் போக, இது ஒன்றும் சில்லறை திருட்டு விஷயம் இல்லையே. எத்தனை எத்தனை மாணவிகள், மனதுக்குள் புழுங்கி, நொந்து வெம்பியிருப்பார்கள். தங்கள் பள்ளி மாணவிகள் மீது, ஒரு ஆசிரியருக்கும் அக்கறை இல்லாதது வருத்தமளிக்கிறது. ஒருவர் கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த செய்திகள் போய் சேரவில்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. பள்ளி நிர்வாகத்திற்கு இருக்கும் அதே பொறுப்பு, சகா ஆசிரியர்களுக்கும் இருக்கிறது என்பதினை அவர்கள் ஏன் உணரவில்லை.

400-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆசிரியர்களாக இருக்கும் ஒரு மாபெரும் பள்ளியில்... 20-க்கும் குறைவான் ஆண்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அவர்களை கண்காணிப்பது மிக எளிதானது. அதனைக் கூட பள்ளி நிர்வாகம் கவனிக்க தவறிவிட்டதா. இந்த ராஜகோபாலுக்கு உறுதுணையாக ஏதாவது பெண் ஆசிரியர்களும் இருப்பார்களோ என்று என்ன தோன்றுகிறது. இந்தப் பள்ளியில் தொடங்கி, தற்போது வேறு சில பள்ளியினை சேர்ந்த மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த கொடூர அனுபங்களை பகிர தொடங்கியுள்ளனர். கயவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு தொடக்கமாகவே, இந்த ராஜகோபாலன் கைது பார்க்கப்படுகிறது. மேலும் பல பள்ளியில், பல ஆசிரியர்கள் கைதாகும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

2021042822304210.jpeg

நன்றி: தினமணி

புதிய அரசாங்கம், இந்த விஷயத்தில் பெரும் முனைப்பை காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. அது பெண்கள் மீது காட்டும் அக்கறையாக மட்டுமே இருக்கும் என்று நம்புவோம். அதில் அரசியலும், ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் ஜனநாயகமாக, தவறு செய்தவனை தண்டனைக்குள்ளாக்குவதில் மட்டுமே நாட்டம் காட்டப்படட்டும்.

இந்த விவகாரத்தில்... ஜாதி, மதம் மற்றும் அரசியல் பார்க்காமல், ராஜகோபாலனையும், அவரை போன்ற மற்ற ஆசிரியர்களையும் உடனே கைது செய்து, போக்ஸோ சட்டத்தில் தண்டனை அளிக்க வேண்டும்.

இந்த அயோக்கிய ராஜகோபாலுக்கு கொடுக்கும் தண்டனை, இனி ஒரு ஆசிரியரும் அப்படி நடக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

மேலும் அணைத்து பள்ளிகளிலும், மாணவிகள் மனம் திறந்து தங்கள் பிரச்சனைகளை கூற அவர்களுக்கு ஆலோசனை குழு ஒன்று அமைக்க வேண்டும். தங்கள் ஆசிரியர்கள் செய்யும் ஒழுக்கக்கேடான செயல்களால், பள்ளியின் பெயர் கெட்டுப்போகிறதே என்று என்னும் அணைத்து நிர்வாகத்தினரும், இதுபோல் ஒரு செயல் இனி நடக்காதவாறு கண்காணிக்க வேண்டும்.

மாணவிகளும், தாங்கள் பள்ளியை விட்டு சென்று 5 வருடம் கழித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் புகார்களை தெரிவிக்காமல், பள்ளி நிர்வாகத்திடமோ, அல்லது காவல் துறையிடமோ பெற்றோர் மூலம் உடனே தெரிவிக்கவேண்டும். இதனால் பல அடுத்த தலைமுறையினர் காப்பாற்றப்படுவார்கள்.

இது தனிமனித ஒழுக்கக்கேடான செயலக இருந்தாலும், அனைவரும் பொறுப்பேற்கவேண்டும். இவைகள் உடனே கலையெடுக்கப்பட வேண்டிய செயல்களாகும். இனிமேலும் காலம் தாழ்த்தாமல், மேலும் பல ராஜகோபாலன்கள் உருவாகாமல் தடுக்க முயல்வோம்.

ராஜகோபால் பெயர் ராசி போல, அவரின் இடம் ராசியும் அவருக்கு சரியில்லை போல். அவர் சமீபத்தில் குடியேறிய வீடு அப்படி பட்டதாக கேள்விப்பட்டோம். அந்த வீட்டில் இவருக்கு முன் குடி இருந்தவர், பலரிடம் பல லட்சங்களை சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அக்கம் பக்கத்தினருக்கு ஏற்கனவே முகம் சுளிக்க வைத்த அந்த வீடு, இப்போது மீண்டும் கடுப்பை ஏற்றியுள்ளது.

கொசுறு செய்தி:

இந்தப் பிரச்சனைகள் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட புகார்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு வந்துள்ளன. சென்னை நகரில் மட்டும் குறைந்தது 10 புகார்கள் பெறப்பட்டுள்ளன. புகார்களை மாவட்ட எஸ்.பி-க்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் காவலில் இருந்தபோது, பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டாலோ, பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலோ... பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அதற்காக துணை கமிஷனரின் செல்போன் மற்றும் லேண்ட் லைன் நம்பர்கள் மூலமாகவோ, வாட்ஸ்-ஆப் மூலமாக பாலியல் தொல்லை கொடுப்பவரின் விவரங்களைத் தெரிவித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…’’ என உறுதியுடன் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி சென்னை - அயனாவரம், மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு, ஆசிரியர் ஆனந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிய வந்ததும், ஆசிரியர் ஆனந்தனை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல் சேத்துப்பட்டில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது மூன்று மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். இப்புகார்களையும் போலீசார் விசாரிக்கத் துவங்கியுள்ளனர். இப்புகார் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி விசாரணையைத் துவக்கியுள்ளார். இதனால், மேலும் பல பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.