தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

‘கீர்த்தி சுரேஷும்’ கிசுகிசுவும்...

20210428205743568.jpeg

ஒரு நடிகை ரொம்ப பிரபலம் என்பதற்கு அளவுகோல் அவரைப் பற்றி தாறுமாறாக வரும் கிசுகிசுத்தான். அவருக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட எதிரிகள் எண்ணிக்கை கூடினால், அவரைப் பற்றிய திருமண கிசு கிசு செய்திகள். கொரோனாவாக தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நிறைய திருமண கிசுகிசு வரத் தொடங்கியிருக்கிறது. நடிகை என்றால் தொழிலதிபரிடம் சேர்த்து கிசுகிசுப்பது எழுதப்படாத சட்டம். தற்போது ஒரு பிரபல தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும் ஒரு செய்தி வெளியானது. அதற்கு முன் அனிருத் - கீர்த்தி சுரேஷ் காதல் என்ற ஒரு செய்தி பரவியது. இது தவிர.. அரசியல் பிரபலம் ஒருவரின் மகன் தான் கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் என்ற கிசுகிசுவும் சுற்றி வந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் எல்லாவற்றையும் மறுத்து விட்டார். செய்திகளை எல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது என்று சிரிக்கிறார். பார்ப்போம்... இப்படி கிசுகிசுவை காட்டமாக மறுத்தவர்கள், அது உண்மையானதும் கேட்டால்... அது போன மாதம் என்று நக்கல் அடிப்பார்கள். கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.



சிம்பு இப்போது குட் பாய்

20210428205407510.jpeg

சிலம்பரசன் என்ற சிம்புவைப் பற்றி தமிழ் திரை உலகம் கூட்டாக சொல்லும் புகார், சூட்டிங்கிற்கு ஒழுங்காக வர மாட்டார், திடீர் திடீரென்று காணாமல் போவார், இயக்குனரின் சுதந்திரத்தில் தலையிடுவார். இப்படி நிறைய நிறைய சொல்வார்கள்... ஆனால், அதெல்லாம் இப்போது ஓல்டு நியூஸ் என்கிறது கோலிவுட் வட்டாரம். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈஸ்வரன்’ படத்துக்கு ஓசைப்படாமல் வந்து நடித்துக் கொடுத்து, படமும் ரிலீசானது. தற்போது சிம்பு நடிப்பில், ‘மாநாடு’ படம் கிட்டத்தட்ட முடிவடைந்து, வெளியாக இருக்கிறது. கமர்சியல் படம் தவிர... எதார்த்த படங்களுக்கும், நான் தயார் என்று சில இயக்குனர்களிடம் சொல்லியிருக்கிறார் சிம்பு. விரைவில் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நீங்கள் சிம்புவைப் பார்க்கலாம். உண்மைதான் நம்புங்கள்.


துக்ளக் தர்பார் படும்பாடு...

20210428205428482.jpeg

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளர் லலித் குமார், ஒரு நியாயமான தயாரிப்பாளர் என்று பெயர் வாங்கியவர். இப்போதுகூட இவரது தயாரிப்பில், நாலைந்து படங்களுக்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடித்த ‘துக்ளக் தர்பார்’ கூட லலித்குமாரின் தயாரிப்புதான். திரையரங்கம் எப்போது திறப்பார்கள் என்று தெரியாத நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்து ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் பேசினார். வியாபாரமும் நல்லபடியாக முடியும் போது, அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. சிக்கலுக்கு காரணம் சன் தொலைக்காட்சிதான். ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய காலத்தில், திரையரங்குகளில் தானே திரையிடப் போகிறோம் என்று எண்ணி தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு வழங்கி ஒப்பந்தம் போட்டார் லலித்குமார். இப்போது இணையதளத்தில் வெளியிட இருப்பதால் அதற்கு சன் டிவியின்…


தெலுங்கு அருங்காட்சியகம்...

20210428205445704.jpeg

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, பிலிம் நியூஸ் ஆனந்தன் தான் தமிழ் சினிமா வரலாற்றுக்கு அத்தாரிட்டி. அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்பதுதான் காரணம். அவர் தமிழ் சினிமாவைப் பற்றி நிறைய விவரங்களை சேகரித்து, அதையெல்லாம் முக்கிய ஆவணமாக பத்திரப்படுத்தி பாதுகாத்து வந்தார். இவை எல்லாவற்றையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்ற மிகுந்த அக்கறை காரணமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பிலிம் நியூஸ் ஆனந்தனை அழைத்துப் பேசி... இவையெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்தால் தான் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் பராமரிக்கப்படும் என்று சொல்லி... அதற்காக அவருக்கு 15 லட்சம் ரூபாய் தந்து, அவற்றை வாங்கி, தமிழக செய்தித்துறையினரிடம் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். இப்போது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, தெலுங்கு படங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை சேகரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். சினிமாவுக்கு என்று ஒரு முக்கிய அருங்காட்சியகம் அவசியம் தேவை. அதுதான் நமது சினிமா வரலாற்றை பேசும் என்று சொல்லி, அந்த ஆவணங்களை திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் நடிகர் நாகர்ஜுனா.


மீண்டும் அஜித் ரஜனி போட்டி?!!

20210428205506723.jpeg

அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இயக்குனர் வினோத், இசை யுவன் என்று தவணை முறையில் தான் ‘வலிமை’ படம் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. மே முதல் தேதி ‘வலிமை’ பற்றிய ஒரு டீசர் வர இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அது வரவில்லை. ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த பாழாப்போன கொரோனா பாருங்க... அதுக்கு வில்லனாக வந்து, இடைஞ்சல் பண்றது. மிச்ச மீதி இறுதிகட்ட படப்பிடிப்பு, ஸ்பெயினில் நடக்க வேண்டி இருந்தது. அதில் ஒரு பைக் ஃபைட் சீன் வேறு இருந்தது. ஆனால், கொரோனா.. ஸ்பெயின் பயணத்தை தடுத்து விட்டது. எப்படியாவது படத்தை முடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தவிக்கிறார். போட்ட பணத்தை எடுக்க, அதைவிட படத்துக்கு வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியலையே என்பது ஒரு முக்கிய காரணம். எனவே எடுத்தவரை எடிட்டிங், இசைக்கோர்ப்பு போன்ற இன்ன பிற வேலைகளை முடிக்குமாறு இயக்குனரிடம் சொல்லிவிட்டார். எப்படியாவது படத்தை ஆகஸ்ட்டில் முடித்துவிட வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்துவிட்டார். ‘வலிமை’ படம் தீபாவளி ரிலீஸ் என்று முடிவு கூட செய்துவிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர். சன் பிக்சர்ஸ் முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ள ஒரு நிறுவனம். முதலில் ‘அண்ணாத்தே’ படம் தீபாவளிக்கு வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள், இப்போது தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். ‘வலிமை’ படமும் தீபாவளி ரிலீஸ். எனவே அஜித் இந்த முறை ரஜினியுடன் மோதத் தயாராகி விட்டார். ஏற்கனவே ‘பேட்ட’ மற்றும் ‘விசுவாசம்’... இரண்டும் ஒரே நாளில் வெளியாகி, வசூல் சாதனை செய்தது.


வடிவேலு உருக்கம்...

20210428205858492.jpeg

கொரோனாப் பற்றி வடிவேலு உருக்கமாக பேசிய ஒரு வீடியோ, தற்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் அவர் “இறைவன், கொரோனா என்ற படத்தை ரிலீஸ் செய்திருக்கிறான். எப்போது படத்தை தூக்குவான் என்று தெரியவில்லை. அவன் அந்தப் படத்தை தூக்கினால் தான், நாம் எல்லோரும் வெளியே வரமுடியும். நான் ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்திருப்பேன். இப்போது எல்லோரையும் சும்மா உட்கார வைத்து, அதை உணர்த்தி இருக்கிறான் இறைவன். பயப்பட வேண்டாம்... வீட்டை விட்டு வெளியே வராமல், யாரையும் பற்றி பேசாமல், இந்த நோயை நாம் எதிர்ப்போம்” என்று ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறார் வைகைப் புயல்.