இது ஜனநாயக களங்கம்...

லட்சத்தீவு... பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் இந்த தீவு, சட்டமன்றம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லாமல்... மத்திய அரசால் ஆளப்படும் தீவுக்கூட்டம் இது. இதன் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா 2020 டிசம்பரில் காலமானார். இதையடுத்து யூனியன் பிரதேசமான டாமன் டையூ நிர்வாகியான பிரபுல் கோடாபட்டேல் லட்சத்தீவுகளின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பட்டேல், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். இவர் ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தார். இவர் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டதும், பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போது அதுவே சர்ச்சையாகி, எல்லா எதிர்க்கட்சிகளும் அவரை திரும்பப் பெற வேண்டுமென்று, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு அந்த சிறிய தீவில் பிரச்சனைகளின் நாயகனாக மாறிவிட்டார் பிரபுல் கோடா படேல்.
நில உரிமை சட்டத்தின்படி, லட்சத்தீவுகளின் பூர்வீகமாக கொண்ட தாய் - தந்தையருக்கு பிறப்பவர்கள் மட்டுமே, அங்கு நிலம் வாங்க முடியும் என்ற உத்தரவை தளர்த்தி, யார் வேண்டுமானாலும் இங்கு இடம் வாங்க வழிவகை செய்து, அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். பெரும்பாலோர் முஸ்லீம்கள் என்பதால், லட்சத்தீவுகளின் உணவு பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றிருந்தது. இது நீண்ட நாட்களாக இருக்கும் நடைமுறை, இதை மாற்ற விரும்பினார் பட்டேல். இதற்காக புதிதாக மாட்டுக்கறி தடை சட்டம் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறார். அந்தச் சட்டப்படி, இனி உணவுக்காக மக்கள் விலங்குகளை கொல்வது குற்றமாகக் கருதப்படும். கொல்லப்படும் மிருகம் உணவுக்கு தகுந்தது என்று சான்றிதழ் பெற வேண்டும். இது தவிர... தடுப்புக்காவல் சட்டத்தையும் லட்சத்தீவுகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இப்படி துக்ளக் தர்பார் நடத்திவரும் இந்த அரசியல் தலைவர் பொறுப்பு ஏற்பதற்கு முன்... லட்சத்தீவில் கொரோனா நோய் இல்லா தீவாக இருந்தது. காரணம்... அப்போதிருந்த நிர்வாகம், லட்சத்தீவுகளில் நுழைவதற்கு முன் கேரளாவில் ஒரு வாரம் தனிமைப் படுத்திக் கொண்டு, அதற்கான சான்றிதழை பெற்று வரவேண்டும் என்பது தான், அந்த தீவின் நடைமுறையாக இருந்தது. இவர் பொறுப்பேற்றவுடன், அந்த நடைமுறையை நீக்கினார். விளைவு... தற்போது லட்சத்தீவில் 6000 பேர் கோவிட் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள், 20 பேர் இறந்துவிட்டார்கள். இதே போல்... மது விலக்கு. இப்படி எல்லாவற்றிலும்.. ஏற்கனவே இருந்த நடைமுறையை மாற்றுகிறேன் என்ற பெயரில் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு விளையாடுகிறார் இந்த சர்வாதிகாரி. இதற்கு அந்த தீவிலேயே எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், இவரது நடவடிக்கைகளுக்கெல்லாம் இவர் சொல்லும் ஒரே காரணம்... என்னுடைய ஒரே அஜன்டா... லட்சத்தீவு வளர்ச்சிதான். அதற்கு இந்த தீவு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறார். ஒரே நாளில் உலகத்தை மாற்றி விட முடியாது என்பது உண்மையான நியதி. அது தெரியாத இந்த நிர்வாக அதிகாரி, ஆண்டாண்டு காலமாக இருக்கும் நடைமுறைகளை ஒரே நாளில் நான் மாற்றி காட்டுகிறேன் என்று எல்லோருடைய எதிர்ப்பையும், தற்போது சம்பாதித்திருக்கிறார். அதுதான் உண்மை.
இவரை திரும்பப் பெறவேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்தும், இத்தனை எதிர்ப்புகள் பற்றியும் கவலைப்படாமல் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது. பட்டேல் மீது புகார் சொல்லி, அவரை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். அதற்கும் பதில் இல்லை. இந்த மௌனம் ஜனநாயகத்திற்கு களங்கம் கற்பிப்பது போலிருக்கிறது. இது எவ்வளவு ஆபத்து என்பதை குடியரசுத் தலைவர் உணர வேண்டும்.

Leave a comment
Upload