மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மே 28 அன்று காணொளி வாயிலாக ஜி.எஸ்.டி. மன்றத்தின் 43-வது கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 31 மாநில நிதியமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 16 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மேலும் 31 மாநிலங்களில் 17-ல் பா.ஜ.க.வும், 14-ல் பா.ஜ.க. அல்லாத ஆட்சியும் நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளுக்கும் நியாயம் வழங்குகிற வகையில் மத்திய அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி. வரியிலிருந்து தான் 50 சதவீத வருமானத்தைப் பெறுகிறது. இதில் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் 14 மாநிலங்களில் தான் இந்தியாவின் மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் வசித்து வருகிறார்கள். மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் 60 சதவீதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதமும் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலிருந்து தான் வருகிறது. இந்த அடிப்படை உண்மையை உணராமல்... மேற்கு வங்காளம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆட்சி செய்கிற கட்சிகள் முன்வைக்கிற கோரிக்கைகளைப் பாரபட்சமின்றி பார்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு பார்ப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒரு வாக்கு என்பது ஏற்கக்கூடியது அல்ல. வரி வருவாய் அதிகமாக உள்ள மாநிலமும், வரி வருவாய் மிக மிகக் குறைவாக உள்ள மாநிலமும் ஒன்றாகக் கருதப்படுவது மிகப்பெரிய அநீதியாகும். கடந்த 2017-ல் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தும்போது, கூட்டுறவு, கூட்டாட்சி என்ற கவர்ச்சிகரமான வார்த்தையைப் பிரதமர் மோடி பயன்படுத்தினார். அது மட்டுமல்லாமல்... “குறைந்தபட்ச ஆட்சி, அதிகபட்ச நிர்வாகம், மேக் இன் இந்தியா” போன்ற வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்தினார். பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில்தான், தொடர்ந்து மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு ரூ. 12,000 கோடி வரை நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. மாநிலங்களின் வரி வருவாய் ஆண்டுதோறும் 14 சதவீதம் வளர்ச்சிக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இந்த உத்தரவாதம் வருகிற 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தோடு முடியப் போகிறது. இதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்பதற்குத் தயாராக இல்லை. இத்தகையப் போக்கு காரணமாக ஜி.எஸ்.டி.யின் கட்டமைப்பே சிதைந்து சின்னாபின்னமாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களின் கோரிக்கையைப் பரிவுடன் கவனிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் தயாராக இல்லை. இதனால் தான் 7 பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்கிற நிதியமைச்சர்கள் தனியாகக் கூடி வருவாய் இழப்பீட்டுக் காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கவேண்டும், கொரோனா தொற்று நிவாரணப் பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், இவற்றை மத்திய நிதியமைச்சர் கவனிக்கத் தயாராக இல்லை. கொடிய கொரோனா தொற்றுக் காலத்தில் கூட வரிவருவாயை விட்டுக்கொடுக்க மத்திய அரசு முன்வரவில்லை.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு, மாநிலங்களின் நிதி சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதில் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்து, கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் அவற்றை எதிர்கொள்வதில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் கூட்டாட்சி கொள்கையே கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
அ. கோபண்ணா,
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்.
Leave a comment
Upload