தமிழ் சினிமாவில் காவல்துறை அதிகாரிகளை வில்லனாக சித்தரித்தாலும், இப்போதைக்கு உண்மையில் அவர்கள் தான் ஹீரோக்கள். இந்தக் கொரோனா காலத்தில், அவர்கள் சேவை விவரிக்க முடியாத அளவுக்கு அபாரமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு போலீஸின் நிலைமை பாவம், பரிதாபம் தான். அதுவும் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பதவியில் இருக்கின்றவர்களின் நிலைமை ரொம்ப மோசம். எல்லா அரசு ஊழியர்களைப் போல், அவர்கள் நினைத்தவுடன் விடுமுறை விண்ணப்பம் கொடுத்துவிட்டு விடுமுறையில் செல்ல முடியாது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக அவர்களது அலைச்சல் சொல்லிமாளாது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த காவலர்களுக்கு எந்தச் சலுகையும் விடுமுறையும் கிடையாது. கொரானா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காவல்துறையினர் பணியில் இருக்கும்போது இறந்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். ஆனால் இப்போது எல்லா அரசு ஊழியர்களுக்கும் வழங்குவது போல் இறந்துபோன காவல்துறையினர் குடும்பத்தினருக்கும் 25 லட்சம் ரூபாய் தான் வழங்குகிறார்கள். தற்போது முதல்வர் ஸ்டாலின் ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறார்.
அர்ப்பணிப்போடு தங்கள் கடமையை செய்யும் காவலர்களுக்கு அரசு உரிய அங்கீகாரம் தரவில்லை என்று காவல்துறை குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். இதுபற்றி காவல்துறை குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்து வருகிறார்கள்.
தற்போது ஆசிரியர்கள் ஆன்லைனில்தான் பாடம் எடுக்கிறார்கள். இதில் அரசு பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு என்ன என்பது பலரது கேள்வியாகத்தான் இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே செயல்படும் அவர்களுக்கு முழு ஊதியம் இந்த அரசு வழங்குகிறது. அரசு ஊழியர்களுக்கு காட்டும் கரிசனத்தை, காக்கி சட்டையிடம் இந்த அரசு ஏன் காட்ட மறுக்கிறது என்ற ஆதங்கம் அவர்களுடைய குடும்பங்களில் வெளிப்படுகிறது. போலீஸ் துறையில் இருப்பவர்களும் அரசு ஊழியர்கள் தான் என்றாலும், மற்ற அரசு ஊழியர்களை போல் அவர்கள் சங்கம் எல்லாம் வைத்துக்கொள்ள முடியாது. மற்ற அரசு ஊழியர்களை போல் வீதியில் போராட்டம், தர்ணா, வேலை நிறுத்தமெல்லாம் செய்ய முடியாது. அவர்கள் கோரிக்கையை செவிசாய்க்க எந்த மூத்த அதிகாரிகளும் இதுவரை முன்வருவதில்லை. ஆளும் கட்சியுடன் நெருங்கிப் பழகும் ஐபிஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்கள். தவிர காக்கி சட்டைகளுக்கென்று அவர்கள் எதுவும் கேட்டதில்லை என்பதுதான் உண்மை.
உண்மையில் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களின் மரணத்தைவிட, காவல்துறையினரின் மரணம் அதிகம். இதெல்லாம் காவல்துறை உயர் அதிகாரிக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இதுபற்றி எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. தற்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தி வரும் நிலையில், காவல்துறையில் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் கூடுமோ என்ற பயம் காவல்துறையில் தற்சமயம் வரத் தொடங்கிவிட்டது.
முன்பெல்லாம் முதல்வருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் வழி நெடுக வெயிலில் கால் கடுக்க ஆண் - பெண் காவலர்கள் நிற்கும் பழக்கமெல்லாம் கிடையாது. எம்ஜிஆர் காலம் வரை அப்படித்தான் இருந்தது. ஜெயலலிதாதான் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அவர்தான் வழிநெடுக, அவர் போகும்போது ஆண்-பெண் காவலர்களை பாதுகாப்புக்கு வெயிலில் கால் கடுக்க நிற்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். அது இன்று வரை தொடர்கிறது.
தற்போதுகூட டிஜிபி சுழற்சி முறையில் ஐந்து நாட்கள் வேலை பார்த்தால் காவலர்களுக்கு ஒரு நாள் விடுமுறை என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். இதேபோல் பல அரசு ஆணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதுபோல்தான் இந்த அரசு ஆணையும். இந்த விடுமுறை என்பது அப்போதைய சூழலைப் பொறுத்து தான். முக்கியமான பணி என்றால் அந்த விடுமுறை ரத்தாகிவிடும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு காவலர் நம்மிடம் சொல்லி அலுத்துக் கொண்டார். இது டிஜிபிக்கு நன்றாகவே தெரியும். இது ஒரு கண்துடைப்பு அரசு ஆணை என்பது என்றும் சொல்லி சிரித்தார் அவர்.
மதுரையில் காவலர்கள் தினந்தோறும் சாலையோரத்தில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்கள். இதேபோல் பல இடங்களில் காக்கி சட்டைகள் கருணையுடன் பொதுமக்களுக்கு சேவை செய்கிறார்கள். ஆனால் தமிழக அரசுதான் காவல்துறையை கண்டுகொள்வதில்லை.
Leave a comment
Upload