தள்ளாடும் புதுச்சேரி...
5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு... தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் அமைச்சரவை பதவி ஏற்று ஆட்சி நடக்கிறது. ஆனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம், அமைச்சர்கள் பதவியேற்பு எல்லாமே ஆரம்பம் முதலே இழுபறி. என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றாலும்... என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். இரு தினங்களுக்குப் பிறகு முதல்வர் ரங்கசாமி கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி, மே 17ஆம் தேதி புதுச்சேரி திரும்பினார்.
என்ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா துணைமுதல்வர், மூன்று அமைச்சர்கள்... இதுதவிர துணை சபாநாயகர் பதவி கேட்டது. முதலில் சம்மதித்த ரங்கசாமி, பிறகு.. திடீரென பின்வாங்கினார். துணை முதல்வர் பதவிக்கு, முதல்வர் ரங்கசாமி ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும். ஆளுநர் அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இதுவரை ரங்கசாமி துணை முதல்வருக்கான ஒப்புதல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார்.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் தள்ளிப் போவது பற்றி சர்ச்சையானதும்.... ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்தார். அதைத் தொடர்ந்து மே 25ஆம் தேதி அதாவது பௌர்ணமி தினத்தன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். இந்நிலையில் மத்திய அரசு, மூன்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்தது. இது தவிர நான்கு சுயச்சை சட்டமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா தங்கள் கட்சியில் இழுத்து இணைத்தது. தற்போது பாரதிய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் மூன்று சுயேச்சை உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா. இது நடந்தால் பாரதிய ஜனதாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துவிடும். ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 மட்டுமே. எனவே பாரதிய ஜனதா நினைத்தால், தனியாகவே ஆட்சி அமைக்கும் சூழல் தற்போது ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்... பாரதிய ஜனதாசட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பாரதிய ஜனதாவுக்கு உள்துறை, நிதி, சுகாதாரம், பொதுப்பணித்துறை ஆகிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் ரங்கசாமி, இதற்கும் எந்த முடிவும் செல்லாமல் இழுத்தடித்து வருகிறார்.
பாரதிய ஜனதாவின் புதுச்சேரி டெல்லி பார்வையாளர், ரங்கசாமியை சந்திக்க அனுமதி கேட்டு இரண்டு நாள் புதுச்சேரியில் காத்திருந்தார். ஆனால், அவரை சந்திக்க ரங்கசாமி அனுமதி தராமல் இழுத்தடிக்க... இந்த விஷயம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காதுக்கு எட்ட... கோபப்பட்ட அமித்ஷா, இனி யாரும் ரங்கசாமியை பார்க்க வேண்டாம். அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என்று சொல்லிவிட்டார்.
ரங்கசாமி, பாரதிய ஜனதாவுக்கு துணை முதல்வர் பதவி உட்பட முக்கிய இலாகாக்களை தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் இந்த இழுத்தடிப்பு. இது ஒரு பக்கமிருக்க... ரங்கசாமி, தற்போது காங்கிரஸ், திமுகவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைப்பது பற்றி யோசிப்பதாக ஒரு பேச்சு வரத் தொடங்கியிருக்கிறது.
எது எப்படியோ தேர்தல் முடிந்தும், முதல்வர் பதவி ஏற்றதோடு அப்படியே புதுச்சேரி ஆட்சி இழுபறியில் தள்ளாடுகிறது. இப்போதைக்கு... புதுச்சேரிக்கு தமிழிசை தான் தாற்காலிக ஆளுநர், தற்காலிக முதல்வர் என்ற இரண்டு பதவிகளுடன் ஆட்சி செய்கிறார். அதான் உண்மை.
Leave a comment
Upload