இளையராஜாவின் பிறந்த நாள் வாரத்தை விகடகவியில் எழுதவில்லை என்றால் எப்படி..?? நாம் எழுதுவதை விட இளையராவை சுவாசம் போல் நேசிக்கும், அவர் இசை மட்டுமே கேட்டு சிலாகித்து வாழும் ஒரு கடைக்கோடி ரசிகன் எழுதுவது தான் சிறந்தது என்று கேட்ட போது ஆஹா ராசய்யாவுக்கா என்று கேட்டு எழுதினார் ஒரு ராஜா ரசிகர்.
இந்த வாரம் இளையராஜாவின் பிறந்த நாள். இசையின் பிறந்த நாள் என்று கூட சொல்லலாமோ?
ஐம்பது வயது கடந்த என்னைப் போன்றவர்களுக்கு, ராஜா நம் வாழ்க்கையோடு பயணிக்கும் ஜீவன்.
அம்மா, அப்பா, சகோதரன், நண்பன், ஆசான், காதலி, என்று எல்லாவுமாகி உயிரோடு கலந்த தேவன்.
பெரிய பெரிய genius எல்லாம் அவரின் மேதாவி குணத்தை புகழும் போது, சாதாரண பாமர ரசிகன் நான் என்ன சொல்ல!!
சத்தியமாக சொல்கிறேன்... இன்னிக்கும் இப்பவும், லாலி லாலி லாலி, லாலி லாலி லாலி என்று ஜானகியம்மா மச்சான பாத்தீங்களா என்று கேக்கும் போது, என்னவோ நேத்து போட்ட மெட்டு போல அத்தனை பிரெஷ்!!!
பிரபலமான பாடல்கள் சொல்லு என்று மற்ற இசை அமைப்பாளர்கள் படத்தில் இருந்து கேட்டா, ரூம் போட்டு யோசிச்சு சொல்லணும். தலைவரோட famous பாடல்கள் சொல்லு என்று சொன்னால், என்னால், கடகடவென்று ஒரு 100 பாடல்களை 5 நிமிஷத்துல சொல்லிறுவேன் . அப்படி ஒரு சங்கீதம் அவரோடது.
இன்னிக்கு இருக்கும் சூழலில் பாடல் பதிவின் நிகழ்வு காலத்தின் கட்டாயமாக, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாய், தனித்தனியே ரெகார்ட் பண்ணி, பின்னர் இழை இழையாய் சேர்த்தாலும், ராஜா சாரின் உச்சகட்டத்தில் ரெகார்டிங் முறையே வேறு. 6.30 மணிக்கு வந்தார்னா இரவு 7-8 கூட ஆகுமாம், அவர் வீடு செல்ல.
STRING செக்க்ஷன், RYTHYM, FLUTE, BASE GUITARS, LEAD GUITARS, TIMING INSTRUMENTS செக்க்ஷன் என்று ஒரு ஜமாவே அவரின் ஒற்றை விரல் அசைவுக்கு காத்திருக்கும்.
என்ன வேலை இருந்தாலும், string செக்க்ஷன் இருக்குன்னா... எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓடிப் போய் விடுவாராம். சுகா ஒரு பேட்டியில் சொன்னார்.
நண்பர் ஒருவர் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாட்டு ரெகார்டிங்க நேர்ல பார்த்ததை, இன்றும் பிரமிப்போடு சொல்வதை வாய் பிளந்து கேட்பேன்.
சதா மாஸ்டர் VS நரசிம்மன், டோலக் பாலா, பெரிய பிரசாத், பிரபாகர் சார், புரு, அருண்மொழி, பண்டிட் பாலேஷ், தவில் சுந்தர் என்று அன்னக்கிளி காலம் தொட்டு அவரோடு பயணிக்கும் மாலுமிகள், இன்றும் அவரோடு இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம்.
அவரோடு வேலை செய்த அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரே விஷயம், அவரோட ஞானம், வேகம்!!!
கல்லூரியில் படிக்கும் போது, கரகாட்டக்காரன் ரிலீஸ். ஐயோ... ஐயோ!!!!!
மாங்குயிலே பாட்டை, அண்ணா இன்னொரு வாட்டி போடுண்ணா என்று கேட்டு 5-6 வாட்டி டீ குடிச்சு, பில்டர் கிங்ஸ் அடிச்ச இனிய நாட்கள் இப்பவும் கண்முன்னே.
அந்தப் பாட்டை கேக்கும் போது, அவனவனுக்கு அவனவன் கனவுல கனகா வந்து போவாள்.
2 ‘பார்’ தள்ளி ‘மரி மரி நின்னே’ கம்போசிங் செய்தார் என்று சொல்வதை டெக்னிக்கலா புரிந்து கொள்ளும் அறிவு நிச்சயம் இல்லை எனக்கு.
ஆனால், சித்ராம்மா குரலில் கேக்கும் போது என்னவோ செய்யும் என்பது உண்மை.
ஒரு ரசிகனா என்னத்த சொல்லி கொண்டாடுவது, எந்தப் பாட்டை சிலாகிப்பது என்று தெரியாமல், சிலசமயம் அட போங்கய்யா என்று என் அறியாமை மேல எனக்கே கோவம் வரும்.
அவரை முழுவதும் புரிந்து கொள்ள, இந்த ஜென்மம், என் போன்ற பாமரனுக்கு பாலகுமாரன் பாஷையில் போறாது.
1000 படங்கள், 7 மொழிகள், 300 இயக்குனர்கள், 400 பாடகர்கள், 7000 பாட்டு, 200 பாடல் ஆசிரியர்கள், 600 தயாரிப்பாளர்கள்...!
இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா...!! மூச்சு வாங்குது சொல்றதுக்கே!!! செஞ்சு காமிச்ச ராசைய்யா எனக்கு தெய்வங்க...!
இந்தக் கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அவரோட இசைதான் கோவிஷீல்டு.
விரக்தி அடைந்த பலருக்கு, நொந்து போன மனசுக்கு, அவரோட பல பாடல்கள் இருட்டுக்கட அல்வா. கரைஞ்சு போயிருவான் கேட்ட பிறகு.
ஓப்பனா சொல்லனும்னா, 2 பெக் போட்டுவிட்டு ராஜா சாரோட செந்தாழம் பூவில் கேக்கலேன்னா, செஷன் முழுமை பெறாது.
ரொம்ப கர்வமா இருக்கு, இந்த மாமேதை நம் தமிழ்நாட்டு பொக்கிஷம், இங்க பிறந்தார் என்று எண்ணும் போது.
ஆண்டவன் புண்ணியத்துல, அம்மா, அப்பா ஆசீர்வாதத்துல, ஒரு குறையும் இல்ல எனக்கு. இறைவனுக்கு நன்றி.
அவன்கிட்ட ஒரே ஒரு விண்ணப்பம் எனக்கு உண்டு.
நேர்ல ஒரு முறை என் தெய்வத்தை பாக்கணும். கால்ல விழணும்...! இறுக்க கட்டிப் புடிச்சுக்கணும்.
அவர்கிட்ட பேசுவேனா...? விவாதிப்பேனா..? இல்ல உடைஞ்சு ஓன்னு அழுவேனா...! தெரியாது....
என்னமும் ஆகட்டும், பரவாயில்லை. 7000 பாட்டுக்கு ஆர்மோனியம் வாசித்த விரல்களை என் தலையில் வைத்து ஆசி கேக்கணும்.
நீடுழி வாழ்க என் ராகதேவன்.
கோடானு கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். என் குரலும் செய்தியும் உங்களுக்கு எட்டுமா...? தெரியல!!!!
மணியே மணிக்குயிலே opening bgm என் நெஞ்சில் நுழைந்தது போல, இந்த செய்தி உங்களை அடைய ஆசைப்படுகிறேன்.
மணி ஹாங்காங்.
Leave a comment
Upload