தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

‘கூழாங்கல்’ - சர்வதேச விருது..!

நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் சினிமாவில் காசு பார்த்து, காதலித்து வந்தாலும்... தயாரிப்பு, விநியோகம் என்று இன்ன பிற சினிமா தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் சினிமா கம்பெனி பெயர் ‘ரவுடி பிக்சர்ஸ்’.

நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தைக் கூட ரவுடி பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இது தவிர “காத்துவாக்குல ரெண்டு” படம் கூட ரவுடி பிக்சர்ஸின் தயாரிப்பு தான். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘ராக்கி’ பட வெளியீட்டு உரிமையை கூட, ராக்கி பிக்சர்ஸ் வாங்கி இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில், புது இயக்குனர் வினோத் ராஜ் இயக்கும் ‘கூழாங்கல்” படத்தை, முதல் பிரதி அடிப்படையில் ரவுடி பிக்சர்ஸ் வாங்கி இருக்கிறது. இந்தப் படம் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனை ரொம்பவும் பாதித்தது. இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய இசையில் ஆன்மாவை மீட்டு எடுக்கிறார் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

20210505073401408.jpeg

இந்தப் படம் நெதர்லாந்தில் நடைபெற்ற ஐம்பதாவது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் பிரிவுக்கு போட்டியிட்டு சிறந்த படத்திற்கான விருதை ‘கூழாங்கல்’ பெற்றுள்ளது. ரோட்டர்டாம் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’. இரண்டாவது இந்தியப் படம் என்ற பெருமையும் இதற்கு கூடுதல் பெருமை. 2017-ல் இயக்குனர் சனல் குமார் சசிதரன் இயக்கிய ‘செக்ஸி துர்கா’ மலையாள படம், இந்த விழாவில் விருது பெற்றது. ‘கூழாங்கல்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததில் நயன்தாரா மகிழ்ச்சியாக இருக்கிறார்.


தேவி திரையரங்கம் மூடலையாம்...

20210505073440131.jpeg

தமிழ்நாட்டில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கிறது. 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக திரையரங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால், தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல திரையரங்கு உரிமையாளர்கள் நொடிந்து போய் இருக்கிறார்கள். தியேட்டர் இயங்கா விட்டாலும், பராமரிப்பு செலவு தவிர்க்க முடியாதது. அதற்கே பல திரையரங்கு உரிமையாளர்கள் திணறிப் போகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்... 50 ஆண்டுகளாக சென்னையில் அண்ணா சாலையில் இயங்கிவரும் தேவி திரையரங்கம் விரைவில் மூடப்படும் என்று யாரோ கிளப்பிவிட... அது செய்தியாக வெளிவந்து விட்டது. அதிர்ச்சியடைந்த தேவி தியேட்டர் நிர்வாகம், இது வதந்தி... அதெல்லாம் நம்பாதீங்க என்று வீடியோவை ரிலீஸ் செய்து, செய்தி வெளியிட்ட நாளிதழை... தயவுசெய்து மறுப்பு வெளியிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டது தேவி திரையரங்கம்.


வட்டி அதிகமானா, ஓடிடி-க்கு வாங்க...

இப்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று உத்தரவாதமாக தெரியாது என்பதால், ஓடிடி-யில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம்.. தியேட்டர்கள் திறக்கும் வரை தயாரிப்பாளர்கள் காத்திருந்தால், பைனான்ஸியரிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி ஏறிக்கொண்டே இருக்கிறது. எனவே நஷ்டம் இல்லாமல், படத்தை ரிலீஸ் செய்வோம் என்று எல்லோரும் ஓடிடிக்கு போகிறார்கள். சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தயாரிப்புகள் கூட இந்தத் தளத்தில் தான் பிசினஸ் ஆகியிருக்கிறது.


பராசக்தி கிடைக்கவில்லை...

மலையாளத்தில் சமீபத்தில் ஒடிடி-யில் வெளிவந்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் கதைக்கரு தான்.

வாழ்க்கையில் படித்து சாதிக்க நினைக்கும் பெண் ஒருவருக்கு, திடீரென திருமணம் ஆகி... திருமணத்திற்கு பிறகு சமையலறையில் தனது கனவுகளை மறந்து தள்ளப்படுகிறார். கணவரின் ஆசை, சமையல் என்று இருக்கும் ஒரு பெண், அதிலிருந்து எப்படி விடுபடுகிறாள் என்பதுதான் கதை.

அதர்வா அனுபமா பரமேஸ்வரன் நடித்த ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘தள்ளிப்போகாதே’ படத்தை இயக்கிய ஆர். கண்ணன் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய தொடங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்தப் படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து, இறுதியில் ‘பராசக்தி’ என்று முடிவுசெய்து, சிவாஜி நடித்த ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்திடம், ‘பராசக்தி’ பெயரை வைக்க முறைப்படி பேச போனபோது... ஏவிஎம் நிறுவனம் முடியாது என்று மறுத்து விட்டதாம். இப்போது வேறு பெயருக்கு யோசிக்கிறார்கள்.