தொடர்கள்
பொது
மொக்கை வாங்கிய பீட்டா! சபாஷ் அமுல்... - தில்லைக்கரசி சம்பத்

20210504155306438.jpeg

மிருக நலனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிக்கொண்டு, மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையே வழக்கமாக கொண்ட பீட்டா, இந்த முறை இந்திய நிறுவனமான குஜராத்தின் அமுல் கூட்டுறவு நிறுவனத்திடம் வாலாட்டி செருப்படி வாங்கியுள்ளது.

சென்ற வாரம் பீட்டா, அமுல் நிறுவனத்திடம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில்... “இந்தியர்கள் மாட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக, தாவரப் பாலை ஏன் பயன்படுத்தக் கூடாது? தாவரப் பாலை உலகம் முழுவதும் வீகன் (vegan) உணவை உண்பவர்கள் அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே நீங்களும் தாவரப் பாலுக்கு மாறுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.

பீட்டா சொல்லும் தாவர பால், மரபணு மாற்றப்பட்ட சோயாவிலிருந்து (GM Soya) உற்பத்தி செய்யப்படுகிறது. உலக நாடுகளில் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட உணவு, பயிர்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் உருவாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான சந்தையை ஏமாந்த இந்தியர்களிடையே கடை பரப்புவதற்காக இப்போது கடிதம் எழுதி இருக்கிறது இந்த பீட்டா.

பீட்டாவின் இந்த “நரி” ஆலோசனைக்கு, தக்க பதிலளித்து.. பீட்டாவின் மூக்கை உடைத்திருக்கிறார், அமுலின் மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ். சொதி.

அவர் தனது டிவிட்டரில் “10 கோடி ஏழை விவசாயிகளின் வாழ்வை பீட்டா அழிக்க முயல்கிறது. கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டில் தொடர்ந்து நல்ல முறையில் கட்டமைக்கப்பட்ட விவசாயிகளின் நலன்களை பறித்து, அவர்களின் வயிற்றில் அடிப்பதற்காகவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை மிக அநியாய விலைக்கு விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்கின்றன” என்று காட்டமாக எழுதியிருந்தார்.

அத்துடன் “10 கோடி விவசாயிகளுக்கு வாழ்வளிப்பதாக கூறுகிறது பீட்டா. அதில் 70% விவசாயிகள் நிலமற்றவர்கள். சொந்தமாக நிலம் கூட இல்லாத விவசாயிகள் பரிசோதனை கூடங்களில் ரசாயனங்கள், செயற்கை விட்டமின்கள் சேர்த்து பயிரிடப்படும் விலை உயர்ந்த சோயா விதைகளை எவ்வாறு வாங்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தியாவில் கால்நடை வளர்ப்பை நம்பி 15 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் இது எதிரானது.
இதற்கு பதிலளித்த பீட்டா, “உலகளவில் பிரபலமாகி வரும் தாவரப் பால் உற்பத்தியை இந்திய விவசாயிகள் செய்ய ஆரம்பித்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், மாடுகளை அடிமைப்படுத்தும் இந்த கொடுமைகளிலிருந்து காப்பாற்றலாம்” என்று கூறியிருக்கிறது.

“அடேங்கப்பா... இந்த உருட்டு பெரும் உருட்டாக இருக்கிறதே!! மாடுகளை கொன்று மாட்டுக்கறியை உலகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை ஏன் என்று கேட்க மாட்டார்களாம். ஆனால் பாலுக்காக மாடுகளை பராமரித்தால், மாடுகளை அடிமைப்படுத்தி கொடுமை செய்கிறார்கள் என்று சொல்வார்களாம்” என்று பலரும் பீட்டாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள்.

தனது காப்பகத்தில் வைத்திருக்கும் மிருகங்களை வைத்து பராமரிக்க வக்கில்லாமல் அதில் 98% மிருகங்களை கொன்றுவிடும் பீட்டா, எந்தத் தகுதியை வைத்து கொண்டு பாலுக்காக அமுல் நிறுவனம் பராமரிக்கும் மாடுகளை அமுல் நிறுவனம் கொடுமைப்படுத்துகிறது என்று கூறுகிறது?

அத்தோடு... “நாங்கள் எதை குடிக்க வேண்டும், எதை சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பது வெளிநாட்டுக்காரனின் வேலையல்ல... போய் வேறு ஏதாவது உருப்படியான விஷயத்தை கவனியுங்கள்” என்று இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள். நாட்டு மாடுகளை ஒழிப்பதற்காக, ஜல்லிக்கட்டு தடை என்ற விஷயத்தை பீட்டா கையில் எடுத்தபோதே... அதன் சூழ்ச்சியை தெரிந்து, பீட்டாவை வெற்றிக்கொண்ட நாம், இனி நம் விஷயங்களில் பீட்டா மூக்கை நுழைத்தால் அதன் மூக்கை உடைப்பதே நல்லது. ஒவ்வொரு முறையும் மூக்கு உடைப்பட்டாலும், தனது நரித்தனத்தை விடாது பீட்டா பல்வேறு ஆதாயங்களுக்காக திரும்பத் திரும்ப இங்கே பிரச்சினை செய்து வருகிறது. செய்வதற்கு உருப்படியான‌ வேலை இல்லாத, சில காலம் போன பிரபலங்களை கையில் வைத்துக் கொண்டு, பொய்யான கருத்துகள் பலவற்றை பரப்பி வரும் பீட்டாவின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை, நமது ஒன்றிய அரசு கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்பதே நாட்டின் நலம் விரும்பிகளின் கோரிக்கை ஆகும்.