தொடர்கள்
தமிழ்
எமதினிய தமிழ்ச் சொற்களை இழக்காமல், மீட்டெடுப்போம்... - இரா.சு.இராசன்

இரா.சு. இராசன்

சுந்தரனார் தாத்தா மனோன்மணிய அவையடக்கத்தில்...

“அடியேன் கடையேன் அறியாச் சிறியேன் கொடு மலையாளக் குடி இருப்புடையேன்”

அன்றவர் வாழ்ந்த அனந்தைப் பதியினில் மலையாளம் ஆட்சி செய்யத் தமிழ் வளர்ச்சிக்கோர் தடை இருப்பதனை உணர்ந்து உரைத்தார்.

ஆயின் ஆரியம் சுமந்து அங்கு ஆரியர் வருமுன்னே மொழிக் கலப்பும் இனக்கலப்பும் நேருமுன்னே சேர நன்நாட்டில், வஞ்சி நாடு, வேள் நாடு (வேணாடு) என்றழைக்கப்பட்ட மேலைக்கடலோர பகுதிகளில் செந்தமிழே ஆட்சி மொழியாக மன்னர் குலம் மக்கள் குலம் பேசிப்பழகி நிலைத்து நின்றது என்பது வரலாறு.

பின்னாளில் ஆரிய மொழியோடு தமிழும் விரவிக்கலந்து மலையாளமெனும் மொழி பிறக்க, அதற்கென லிபியும் வடமொழி சார்ந்த மொழி இலக்கணமும் அமைத்து மொழியை வளப்படுத்திக் கொண்டார்கள். என்றாலும் அதில் பாதிக்கு மேல் தமிழ் சொற்களே பயன்பாட்டில் உள்ளன. முத்தொள்ளாயிரம் கண்ட கோக்கோதைச் சேர நாடும் இன்று கொங்கு நாடும் குமரியும் நீக்கி கேரளம் என்ற வடிவு பெற்று பிறந்தின்று ஆண்டு அறுபத்து ஐந்தும் ஆகியது.

நமது தாய்த்திரு தமிழ் நாட்டினிலோ யார் யாரொ ஆண்டதனால் அவர் சார்ந்த மதங்களில் மக்களும் கலந்திணைய நாம் நித்தம் பேசுகின்ற வழங்கு தமிழில் வட மொழியும் உருதுச் சொற்களும் பல பிற மொழிச்சொற்களும் கலந்து தமிழ் சொற்களாக நாமுமதை ஏற்றுக் கொண்டு விட்டோம். அதை மறைமலையார் போன்ற பேரறிஞர்கள் ஏற்காது தனித்தமிழ் இயக்கத்தை முன்னிறுத்தி செய்த பெருமுயற்சி இன்றும் தொடர்கிறது. பல புதிய தமிழ்ச் சொற்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மெல்ல மெல்லத் தமிழினம் ஏற்றுக் கொள்ளும்.

நான் சொல்ல முனைவது, புதிய சொற்கள் உருவாவதை வரவேற்பதில் மகிழ்ச்சியே என்றாலும் நம்மிடம் இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பிற மொழிக்கீந்து விட்டு நாம் வட சொல்லையும் உருதுச் சொற்களையும் இரவல் பெற வேண்டாம் என்பதை நிலைநாட்டவே இத்தனையும் உரைத்தேன். இன்று ஒரு சொல்லை எடுத்துக் காட்டாய் தேர்வு செய்துள்ளேன்.

“தைரியம்” என்ற சொல் வடமொழிச்சொல் (சமஸ்கிருதம்). நாம் தமிழ்ச்சொல்லாய் ஏற்றுக் கொண்டோம். நம்மில் பலர் பிற சொல் என்றறிய மாட்டார். இதற்கு நேரான மிக நெருக்கமான பொருள் கொண்ட தமிழ்ச் சொல் ஒன்று மலையாளத்தில் பயன் பாட்டில்உள்ளது.

“தன்றேடம்” என்ற சொல் தான் அது. தன் திடம் என்பது தன்றிடமாகி இன்று “தன்றேடம்” என்று வழங்கி வருகிறது. இது அன்று சேர நாட்டுத் தமிழில் வழக்கில் இருந்திருக்க வேண்டும்.

நாம் அதை பயன்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம். ஓரளவு தைரியம் என்ற சொல்லாட்சி இதனால் குறையும். வேண்டுமிடத்து தைரியம் என்ற சொல்லையும் வைத்துக் கொள்ளலாம். மெல்ல மெல்லத் தூய தமிழ் மலரும். தமிழுலகம் இதை ஏற்கும் என்றே நம்புகிறேன்.

மீண்டும் அடுத்த கிழமை இன்னொரு சொல்லுடன் வருவேன். வாரம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. கிழமை என்பதே தமிழ்ச் சொல்.... நன்றி.