மாஞ்சோலை கிராம ரேசன் கடை...
சரவணன் எழுத்தராகவும், அரி எனும் அரிச்சந்திரன் உதவியாளராகவும் பணிபுரிகின்றனர்.
அதே கிராம பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரமேஷ், 20 கிலோ விலையில்லா அரிசி வாங்க பில் போட்டுக்கொண்டு பொருள் வழங்குமிடத்திற்கு சென்று வரிசையில் நிற்க, வரிசையில் வசை பாடியபடியே சிலர்.
“இங்கே ஒழுங்கா அளக்கிறது இல்லை. இந்த அரிசந்திரன் இருந்தாலே, எதை வாங்கினாலும், அதில் எடை குறையும். என்ன ஏதுனு யாராவது தட்டி கேட்டாக்க, கம்ப்யூட்டர் எடை மிஷின்னு என்னென்னோம காரணம் சொல்வான். மீறி கேட்டால்... இஷ்டம் இருந்தா வாங்கு, இல்லைன்னா அதுவும் கிடையாது, கிளம்பு என அதிகாரமாக பேசுவான்.
சே... இந்த ரேசன் கடைக்கு வந்தாலே பொருளும், மரியாதையும் குறைவாகத்தான் கிடைக்கும் போல என்றார் ஒருவர்.
“இவங்க எல்லாம் தானாக திருந்தினாத்தான் உண்டு” என்றார் ஒருவர்.
“இவங்க திருந்தவே மாட்டாங்க” என்றார் வேறருவர்.
இதையெல்லாம் காதில் வாங்கிய ரமேஷிற்கு எல்லோரும் தம்மை போலவே நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கமாக தெரிந்தனர்.
அதில் காய்கறி விற்பவர், பழ வியாபாரி, பால்க்காரர், இட்லி கடை வைத்துள்ளவர் மற்றும் ஆசிரியர் உட்பட பலர் இருந்தனர். இவர்கள் அனைவரையுமே நன்கு அறிந்தவன் ரமேஷ்.
நியாய விலைக்கடை... பெயருக்கேற்ற ‘நியாயம்’ அளவில் இல்லை என்பதே இவர்களின் முக்கிய விவாதமாக இருந்தது.
ஆனால், அது இவர்களுக்கும் பொருந்தும் என யார் அவர்களிடம் சொல்வது?
காலையில் 8ம் வகுப்பு படிக்கும் தனது மகள் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது ரமேஷிற்கு.
அஃகம் சுருக்கேல்! அதாவது தானியங்களை சுருக்காதே!
எந்த பொருளாயினும், எந்தத் துறையாயினும் அதற்குண்டான அளவும் முக்கியம், என மகள் படித்தது ஞாபகம் வந்தது.
இவர்கள் அனைவருமே தங்கள் வியாபாரத்தில், தொழிலில் நியாயமாக நடப்பவர்களா?
எத்தனை சுய நலமாக இருக்காங்க! ஆனா, இவங்க அடுத்தவர்களிடம் அதை எதிர்பார்க்கிறாங்க என மனதில் நினைத்துக்கொண்டே, எடை குறைவுடன் அரிசியை பெற்றுக்கொண்டு குறை சொல்லவோ வாக்குவாதமோ செய்ய மனமில்லாமல் வீடு திரும்பினான்.
மறுநாள்... ஞாயிற்றுக்கிழமை, அங்காடி விடுமுறை நாள்.
அரிச்சந்திரனின் மனைவி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினாள்.
அரிக்கு ஆதரவாக அவள் மனைவியும், அம்மாவும்தான். வாரிசுகள் இல்லை. சொந்தவீடு, வாகனம், என ஓரளவு வசதியுடன் வாழ்ந்தவன்,
தனது நிலை கண்டு அன்றுதான் முதல் முறையாக வருந்தினான்.
வயதான அம்மா, வாரிசு இல்லா மீதமுள்ள எதிர்கால வாழ்க்கை குறித்த பயம் அன்று இரவு அவனை தொற்றிக்கொண்டது.
அரி மனைவியின் சடங்கிற்கான பொருட்களை வாங்க கிராம மக்கள் சில பேர் கடைவீதிக்குச்சென்றனர்.
பூக்கடையில் மாலை கேட்க,
யாருக்கு..? என்று கேட்ட கடைக்காரரிடம், அரியின் மனைவி என்றனர் ஊரார்.
பூவால் கட்டிய மாலை இல்லை என்றும் தழையால் கட்டிய மாலை மட்டுமே தரமுடியும், அதுதான் இருப்பதாக கூறினர்.
பால் வாங்க சென்றனர்... யாருக்கு எனக்கேட்டு, ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் கண்ணெதிரே தண்ணீர் ஊற்றி இரண்டு லிட்டருக்கு காசு வாங்கினார் கடைக்காரர்.
எல்லோரும் அவரவர் தொழிலுக்கேற்ப அரிக்கான பழியைச் செய்தனர்.
பாடை அலங்காரம் செய்ய, மூங்கில் அளவு எங்கும் பெரியதாக கிடைக்கலை என திரும்பி வந்தனர், குறைந்த அளவு மூங்கிலே உள்ளதாகவும் அதில் கட்டினாள் மனைவியின் கால்பகுதி வெளியே நீளும் எனவும்... ஆகையால் அமரர் ஊர்தியை வரவழைக்கலாம் என யாரோ பேசுவது கேட்டது அரிக்கு.
ஒரு வழியாக சடங்குகள் முடிந்து, சடலத்தை வாகனம் வைத்து எடுத்துக்கொண்டு இடு காட்டிற்கு சென்றனர்.
துப்புறவு பணியாளர் ரமேஷ், அரியின் மனைவிக்கான
குழியை பேசிக்கொண்டே தோண்டிக் கொண்டிருந்தான் சக உதவியாளருடன்.
ஏய் ரமேஷ்... போதும்டா இந்த நீளம், ஆழம்.
அந்த அரிச்சந்திரன் செய்யற வேளைக்கு, அவன் மனைவிக்கு இதுவே அதிகம், இவனுக்காக மெனக்கடாதே... அரிசி கேட்டா, இன்றைக்கு மண்ணெண்ணை தருகிறோம் என்பான். சரக்கே இல்லை என்பான், பயறுகளில், அரிசிகளில் கலப்படம் செய்வான். அரிசி, சீனி என அனைத்துப் பொருட்களிலும் அளவை குறைத்துதான் எடை போடுவான. பேர் மட்டும் அரிச்சந்திரனாம்! என வசை பாடினான்.
ச்சீ.. கம்னு கெட. அவன்தான் அப்படி செய்யறான்னா, நாமும் அப்படி செய்யனுமா. அந்தப் பால்காரன், பூக்கடைக்காரன் எல்லாரும் செஞ்சாங்கன்னு நாமும் செய்யக்கூடாது.
தொழில்ல நேர்த்தி மட்டும் பத்தாது, அளவும் முக்கியம். அதற்கு எந்த குந்தகமும் செய்யக்கூடாது.
என்னடா அளவு ?
இட்லி மாவுல இவ்வளவு உளுந்து, இவ்வளவு அரிசி சேர்க்கனும்னு இருக்குல்ல, அதை ஓட்டல்காரன் மீறக்கூடாது, அதுதான் அவனின் அறம். அதாவது தானியங்களை குறைக்கக்கூடாது. இது போல எல்லா துறைக்கும் பொருந்தும்டா, என் பொண்னு சொல்லிச்சுடா.
நம்ம தொழில் பிணத்திற்கு குழி எடுக்கிறது... அதோட அளவும் முக்கியம்தானே. நாய், நரி தோண்டாம இருக்கனும். அதுதான் நாம வாங்குகிற காசுக்கு மரியாதை எனக் கூறிக்கொண்டே வேலை செய்தான் ரமேஷ்.
அவர்கள் பேசியவையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரிச்சந்திரனுக்கு, ஏதோ உள்ளுணர்வு உந்தியதில் கனவு கலைந்து எழுந்தான், எதிரில் மனைவி தண்ணீர் குடத்துடன் நின்றாள்.
தான் கண்ட கனவால் திடுக்கிட்டவன், தன் செயலுக்கு வெட்கினான்.
கனவாகினும் வாக்கு கொடுத்தமையால் ஆட்சி, மனைவி மற்றும் மகனை இழந்தும், உண்மையையே பேசிய அரிச்சந்திரனுக்கு மயானத்தில் சோதனை நடத்தி, இறைவன் காட்சியளித்து அரிச்சந்திரனை ஆட்கொண்டார்.
இந்த அரிச்சந்திரனுக்கோ, கனவில் மயானம் வரை வந்து உண்மையை உணர்த்திய அவன் மனைவி், தெய்வமாக காட்சியளித்தாள்.நேர்மை அன்று முதல் அரிச்சந்திரனை ஆட்கொண்டது.
Leave a comment
Upload