தொடர்கள்
கவிதை
ஓர் தமிழ் மகனின் இதயத் துடிப்பு... - இரா.சு.இராசன்

20210505075206907.jpeg

ஆசிரியர் குறிப்பு: திரு.இரா.சு.இராசன் அவர்கள் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951- 53-ல் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து, திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் 1953 - 55-ல் பி.எஸ்.சி (விலங்கியல்) பட்டம் பெற்றார். தமிழ்நாடு மீன் வளத்துறையில் துணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். மீன்வளத்துறையில் தமிழார்வலர்களால் தலைமைப் புலவர் என்றும் பெருங்கவி என்றும் பாராட்டப்படுபவர். மரபு சார் கவிதைகள் புனைவதில் புதுமைகளை கையாள்பவர். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் ஆழ்ந்த புலமைப்பெற்றவர்.

திரு. இரா.சு.இராசன், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடிய பெரும் ‘புலவர் மனோன்மணியம் சுந்தரனார்’ அவர்களின் உறவின் முறை
ஆவார்.

இவரது தந்தை திரு. இரா.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குமரி மாவட்டம் - பத்மநாபபுரம் நகரசபைத் தலைவராகப் பலஆண்டுகள் பணியாற்றி உள்ளார். திருவிதாங்கூர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அப்பகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கபப்பட்ட முதல் தமிழரென்ற பெருமை பெற்றவராவார்.

அன்னாரின் கவிதை இதோ..

குமரிக் கடலோரத்தில்
சித்திரைப்பௌர்ணமியன்று
தமிழ்ச்சங்க இலக்கியச்
செல்வங்களை
இழந்த துயரத்தால்
ஏங்கி நிற்கும் ஓர்
தமிழ் மகனின்
இதயத் துடிப்பு.

***** ***** *****
முழுமதியம் மெல்ல
எழுந்து மேல்
நோக்கி நகர்கிறது
தென்கடலே நீயும்

எழுச்சி பெற்று
அவனுறவில்
மகிழ்ந்து
ஆர்ப்பரிக்கிறாய்
எனது நெஞ்சம்

அழுது துன்புற்று
துயரத்திலுனை
இரந்து வேண்டி
நாங்கள் இங்கு

இழந்தவற்றைத்
திருப்பிப் பெற
முயன்று கேட்பது
அனைத்துமுன்
காதில் விழுமென
எண்ணுகிறேன்.

பழந்தமிழ்ச் சங்க
நூற்களுமெங்கள்
பெருஞ் சிறப்பின்
குமரிக் கண்டமும்

விழுங்கி விட்டாய்
எனப்பழித்தால்
சினந்து பொங்கி
எழ வேண்டாம்

செழித்த தமிழ்
செல்வங்கள் நீ
திருப்பித் தர
வேண்டும்.சீர்
மிகுந்த இரண்டு

எழில் சங்கமாண்ட
மூதாதை எமக்குச்
சேர்த்து வைத்த
செல்வமெலாம்
சிதையாமல் பெற
வேண்டும்.

தலைச்சங்க அகத்தி
யத்தைதத் தந்து
விடு.தரணியாள்
பாண்டியனின்
பொற்சுரங்கம்

பலவாண்டாய்
சீனத்து அடிமை
களால் அவன்
சேர்த்த செல்வக்
குவியலெங்கே

விலை மதிக்கவா
இயலும் எங்கள்
முதற் சங்கத்து
ஐநூற்று நாற்பத்
தொரு புலவர்

கலைச்செல்வமாய்
இயற்றி எமக்கு
எழுதி வைத்த
உயர் பனுவல்
அற நூல்கள்.

இடைச் சங்கத்தில்
ஐம்பத்து ஒன்பது
ஏற்றமுறு புலவர்
யாத்திட்ட எமது
இலக்கியங்கள்

தடையிலாது தமிழ்
சொல்ல இலக்க
ணங்கள் அதில்
வாழ்வியலுக்கு
வழிகாட்டல்.

நில வளங்கள்
வடக்கில் பஃறுளி
தெற்கில் குமரி
ஆறு இடைப்பட்ட எழுநூறு கவட்டம்
நீர் வளங்கள் குமரி
ஆறும் குடிலை,
சிவை,உமை,
தரணி,சுமனை
சிங்கை யென

ஏர்வளம் காக்கும்
புனல் வெள்ளம்
மணி மலை
புத்தூர்,கபாட
புரம் எனப்பல

சீர் கொண்ட நகரங்
கள்,செப்பரிய
சிறப்பின் பரி
பாடல்,முதுநாரை
பேரதிகாரம் என

பார் போற்றுமுயர்
நூல்கள் அனைத்
தும் நீ தந்துவிடு.
அவை எமக்குரிய
என்றேன்
தென்கடல் என்

காலைப் பலமுறை
தொட்டுத் தழுவி
கலங்கி நெஞ்சு
குமுறி நொந்து
சொன்ன விடை.

வேலை என்று
எனக்கோர் பேர்
உண்டு.நான்
செய்த வேலை
மிகக் கொடுமை

காலம் பல ஊழி
கடந்ததனால்
உங்கள் செல்
வமெலாம்
எந்தன்

நீலக் கடல் முற்றாக
அழித்து விட நீ
கேட்டது எதுவும்
தர இயலாத

கோலமிது காண்
எனக் கடலும்
தனது நிலை
கூறித் தேம்பிக்
கதறி நிற்க

காலம் கடந்தென
மேலைத் திசை
நோக்கி நிலவும்
சாய்ந்து விட

காலது சோர்ந்து
உடல் சோர்ந்து
நள்ளிரவில்
வெறும் கையாய்
திரும்பிச் செல்கின்றேன்
இழந்தபொருள்
எதுவும் இனிக்கிட்டாது.