தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!.- ஜாசன்

ராஜீவ் காந்தி படுகொலை...

20210509114119509.jpeg

பத்திரிகையாளன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய.. நிறைய... அதில் மறக்க முடியாத சம்பவங்கள், அதுவும் நிறைய.. நிறைய தான். ஆனால், ஒரு சம்பவமே வரலாறு... அது என் முன்னால் நடந்தது என்று சொன்னால் அது ராஜீவ் காந்தியின் படுகொலைதான். இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டு வெடிப்பு என்பதே ஒரு மறக்கமுடியாத அனுபவம்தான்.

மே 21-ம் தேதிக்கு முன் தினம் நானும் புகைப்பட நிபுணர் மேப்ஸ், இருவரும் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற திமுக தலைவர் கருணாநிதியுடன் விழுப்புரம் வரை சென்றுவிட்டு, அதிகாலை தான் சென்னை திரும்பினோம். மாலையில் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு எங்களை போகச் சொன்னார் ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் சுந்தரம் சார். விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜீவ் காந்தி விமானத்தை விட்டு இறங்கி வெளியே வந்ததும்... மூப்பனாரிடம் “எனக்கு பசிக்கிறது... சாப்பிட ஏதாவது வேண்டும்” என்றார். மூப்பனார் உடனே, இரண்டு பிஸ்கட் பாக்கெட், பிளாஸ்கில் காபி எடுத்துக்கொண்டு ஓடி வந்தார். பிஸ்கட் பக்கெட்டை பிரித்து, பிஸ்கெட்டை வாயில் வைக்க சென்றபோது...

தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஓடி வந்து... “பத்திரிக்கையாளர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே ராஜீவ் காந்தி, அந்த பிஸ்கட்டையும் சாப்பிடாமல் வைத்துவிட்டு வந்தார். வந்தவர்... நிருபர்களிடம் ஒரு நிமிடம் அனுமதி கேட்டு விட்டு, பாத்ரூம் போய் வந்தார். அவர் உட்காருவதற்கான நாற்காலி கூட சரியாக இல்லை. அதை அருகிலிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை வைத்து சரி செய்து, அதில் உட்கார்ந்துகொண்டு கேள்விகளைக் கேளுங்கள், நான் ரெடி என்றார். எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் யோசிக்காமல் பதில் சொன்னார் ராஜீவ்காந்தி. ரொம்பவும் உற்சாக மூடில் இருந்தார். கடைசி கேள்வி என்று சொன்னதும்... அந்தக் கடைசி கேள்வியை, நான் தான் கேட்டேன். ராமஜென்மபூமி விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு நொடி கூட தயங்காமல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்... அங்கு ராமர் கோயில் கட்டப்படும்.. நிச்சயம் கட்டப்படும். அதே சமயம் மசூதி இடிக்கப்படமாட்டாது என்றார். அப்போது கோயிலை எங்கு கட்டப்படும் என்று கேட்டேன். அதற்கு அவர்.. நிச்சயம் சென்னையில் அல்ல... அயோத்தியில்தான் என்றார்.

அதன் பிறகும் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது...

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது சம்பந்தமான கேள்விக்கு... பதில் சொன்னார். எல்லாம் முடிந்து விட்டது என்று அவர் எழுந்திருக்கும்போது, ஒரு பெண் நிருபர், அதிமுக-விற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லையெனில், காங்கிரஸ் அவர்களுடன் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளுமா..? என்று கேட்டதும்... இந்த ஐடியாவை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூறியபடியே கிளம்பிவிட்டார்.

ராஜீவ் காந்தியுடன் சென்னையில் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர் செய்திருக்கிறேன். ஆனால் மே 21-ஆம் தேதி வழிநெடுக வந்த கூட்டம், என்னை ஆச்சரியப்பட வைத்தது. நான் தேர்தல் நேரம் என்பதால் தான் நிறைய கூட்டம் என்று நினைத்தேன். ஆனால், அது அவரை வழியனுப்ப வந்த கூட்டம் என்பது அப்புறம் தான் தெரிந்தது. பல இடங்களில் அவர் கார் மீது வைக்கப்பட்டது... சால்வை, சந்தன மாலை, பூமாலை என்று அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் என்று அவருக்கு உற்சாகமாக மரியாதை செலுத்தினார்கள். ஒரு சிறுவன் போர்த்திய பட்டு சால்வையை, அந்தச் சிறுவனுக்கே போர்த்தி... அவனை தன்னுடன் இழுத்து சேர்த்துக்கொண்டு, போட்டோ எடுக்கச் சொன்னார். இதேபோல் ஒரு வயதான பெண்மணிக்கும், இதே மரியாதையை செய்தார் ராஜீவ்காந்தி.

ராஜீவ் காந்தி பயணப்பட்ட காரின் வரிசையில், ஐந்தாவதாக எங்கள் வேன் போய்க்கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் மேடைக்கு 500 மீட்டருக்கு முன்பே, ராஜீவ் காரிலிருந்து இறங்கினார். ராஜீவ் காந்தியின் தேர்தல் நிகழ்ச்சி நிரலில், ஸ்ரீபெரும்புதூர் இல்லை. அப்போது வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் சந்திரசேகரின் வற்புறுத்தலால் ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. உண்மையில்... அன்று அவர் அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, மறுநாள் காலை கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில்... ராஜீவ்காந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்ட இடம், அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அது ஒரு அத்துவான காடு போலிருந்தது. ராஜீவ்காந்தி காரிலிருந்து இறங்கியதும்... வாணவேடிக்கைகள் ஆரம்பித்தது. நாங்களும் வேனிலிருந்து இறங்கி ஓடினோம். அவரைக் கிட்டத்தட்ட நெருங்கும்போது... திடீரென, ஒரு டமால் சத்தம் கேட்டது. அங்கிருந்த கார்பெட் பற்றி எரிந்தது... பலரும் தரையில் விழுந்து கிடந்தார்கள். ஏதோ மின்கசிவு காரணமாக விபத்து என்றுதான் முதலில் நினைத்தோம். ராஜீவ் காந்தி உடலை பார்த்ததும் தான், இது ஏதோ சதி வேலை என்று தெரிந்தது. அவரது லோட்டோ ஷூவை வைத்துதான், மூப்பனார் அவர் உடலை அடையாளம் கண்டார். அந்தளவுக்கு அவர் உடல் சிதறிப்போய் இருந்தது.

20210509114151365.jpeg

மனித வெடிகுண்டு என்று பின்னால் தெரிந்த தனுவின் தலை மட்டும் தனியாக 500 அடி தள்ளி விழுந்து கிடந்தது. அதை மேப்ஸ் போட்டோ எடுத்தார். என் தலையில் கூட ஏதோ பிசுபிசு என்று இருந்தது. தொட்டுப் பார்த்து எடுத்தால்.... யாருடைய உடலின் சதை என் தலையில் ஒட்டியிருந்ததோ... என் சட்டையில் கூட சின்னச் சின்னதாக சதை துணுக்குகள் இருந்தது. வீட்டுக்கு வந்ததும் எனது சட்டையை தூர எறிந்தேன்.

வெடித்த இடத்திலிருந்து எல்லோரும் ஓடி விட்டார்கள். ஆனால், கர்ம சிரத்தையாக மேப்ஸ் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்... மூப்பனார், அவர் முதுகை தட்டி எடுத்தது போதும் என்று நிறுத்தினார். ஆனாலும் அவர் தொடர்ந்தார். அந்த இடத்தில்... நான், மேப்ஸ், இன்னும் சில பத்திரிக்கையாளர்கள், மூப்பனார், ஜெயந்தி நடராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மட்டுமே இருந்தார்கள்.

தியாகராஜன், டிஐஜி ராகவனை என் தலைவன கொன்னு விட்டீர்களே, என அவர் தொப்பியை காலால் மிதித்து, அவரை அடித்துக் கொண்டிருந்தார். மூப்பனார், அவரையும் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார்.

ராஜீவ் காந்தி உட்பட இறந்தவர்களின் உடல்களை ஏற்றிக்கொண்ட வேனில், மூப்பனார் ஏறினார். நானும் அந்த வேனில் ஏறினேன். அந்த வேனுக்கு தாழ்ப்பாள் கூட இல்லை, ஒரு பாண்டேஜ் துணியால் கட்டி வைத்திருந்தார்கள்.. அதுவும் சரியில்லை.. வேன் போகும் போது, திடீரென அந்த கதவு திறந்து கொண்டு விட்டது. மூப்பனார் அந்த கதவை இழுத்துப் பிடித்துக் கொண்டு, அழுதுகொண்டே... இவர் குடும்பத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று சொல்லியபடியே வந்தார். நான் அவரை உட்கார சொல்லிவிட்டு, அந்தக் கதவை மருத்துவமனை வரை பிடித்துக் கொண்டு வந்தேன்.

ராஜீவ்காந்தி போஸ்ட் மார்ட்ட அறிக்கையில், ‘எம்டி ஸ்டொமக்’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். கடைசிவரை பசியோடு தான் இருந்தார். பாவம் ராஜீவ் காந்தி...

விடிஞ்சதும்.... சோனியா, பிரியங்கா இருவரும் வந்தார்கள். ராஜீவ் காந்தியின் உடல் ஒரு அழகான சவப்பெட்டியின் வைக்கப்பட்டு, மீனம்பாக்கம் விமான நிலைய லவுஞ்சில் வைத்திருந்தார்கள். அங்கு நான், மூப்பனார், தியாகராஜன், மூப்பனாரின் உதவியாளர் பார்த்தசாரதி ஆகியோர் தான் இருந்தோம். சோனியா காந்தி, சோகமே உருவாக எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். பிரியங்கா காந்தி அங்கும் இங்கும் அலைந்து, ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராஜீவ்காந்தியை ஏற்றிச் செல்லவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டிருந்தது. உடனே பிரியங்கா, மூப்பனாரிடம் கேட்க... அவர் ஜனாதிபதி வெங்கட்ராமனுக்கு, அங்கிருந்து போன் செய்து பேசினார். முப்பனார் ஏதோ கேட்க... அதற்கு ஜனாதிபதி... அதன் பிறகு, மூப்பனார் போனை வைத்து விட்டார். அடுத்த பதினைந்து நிமிடம் கழித்து, மீண்டும் பிரியங்கா... மூப்பனாரிடம், ஜனாதிபதியின் தொலைபேசி எண்ணை தாருங்கள்... நான் பேசுகிறேன் என்று வாங்கி தொலைபேசியில்,,, ஜனாதிபதியை தொடர்பு கொண்ட பிரியங்கா... ஆங்கிலத்தில் மிஸ்டர் பிரசிடென்ட் என்று ஆரம்பித்து, உங்களால் விமானத்தை அனுப்ப முடியுமா.. முடியாதா என்பதை இப்போதே சொல்லுங்கள். இல்லையென்றால் நாங்கள் வேறு ஏற்பாடு செய்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஜனாதிபதியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் தொலைபேசியை வைத்துவிட்டார் பிரியங்கா.

சிலநிமிடங்கள் கழித்து, அந்த தொலைபேசி ஒலிக்க... மூப்பனார் எடுத்துப் பேசினார். இது தேர்தல் நேரம்... அப்போது ராஜீவ் காந்தி வேட்பாளர் மட்டுமே. அவருக்கு அரசு விமானத்தை அனுப்பினல், எதிர்க்கட்சிகள் ஏதாவது ஆட்சேபிக்க வழி இருக்கிறதா என்பதை ஜோதிபாசு, வாஜ்பாய் போன்ற தலைவர்களிடம் கருத்து கேட்க... அதற்கு அவர்கள், அதுலாம் ஒரு பிரச்சனையும் இல்லை... அனுப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். விமானம் புறப்பட்டு விட்டது என்று சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு... மூப்பனார், பிரியங்காவிடம் ஜனாதிபதி சொன்னதை அப்படியே சொன்னார்.

ராஜீவ்காந்தி உண்மையில் ஒரு உன்னதமான தலைவர், அதில் எனக்கு என்றுமே மாற்றுக்கருத்து இல்லை. ஒருமுறை சங்கரமடம் சார்பாக, ராஜீவ் காந்தி காஞ்சிபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியையும் நான் போய் கவர் செய்தேன். திரும்பும்போது நல்ல மழை. ராஜீவ் காந்தி பயணம் செய்த காரின் வைப்பர் வேலை செய்யவில்லை. அந்த மழையில், ராஜீவ் காந்தி காரைவிட்டு இறங்கி, அதை சரி செய்து கொண்டிருந்தார். நானும் என்னுடன் வந்த புகைப்பட நிபுணர் சிவபெருமாளும் இறங்கி அவர் அருகே சென்றோம். சிவபெருமாள், அவர் வைப்பரை சரி செய்வதை போட்டோ எடுத்தார். அப்போது ராஜீவ் காந்தி, என்னையும் சிவபெருமாளையும், அருகே அழைத்து... இது விளம்பரத்துக்காக செய்யவில்லை... வைபர் வேலை செய்யாமல், ட்ரைவர் ஓட்ட சிரமப்பட்டார். இது தவிர... இதில் என் சுயநலமும் இருக்கிறது. அவர் சரியாக ஓட்டினால் தான், நான் பாதுகாப்பாக திரும்ப முடியும். இது ஒரு பெரிய விஷயம் அல்ல... இதற்கெல்லாம் முக்கியத்துவம் தராதீர்கள் என்று என்னைத் தட்டிக் கொடுத்து திருப்பி அனுப்பினார். இப்போதும் அந்தச் சம்பவம் என் முன் அப்படியே வந்து போகிறது.