தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 19 - கலைமாமணி பாரதி திருமகன்

20210507155157977.jpg

என் தந்தையின் திரையுலகப் பணி 1957 முதல் 1964-ம் ஆண்டு வரை அதிகமாக இருந்தது. பிறகு, நாகேஷுக்காக அவர் இறக்கும் காலம் வரையிலும், தலைசிறந்த திரையுலக வில்லிசை பணியாக – உலக நாயகன் கமலஹாசன் அண்ணாவின் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களின் வாழ்த்துரையுடனும் – வெள்ளித் திரை தோற்றம்… என பலப்பல திரையுலக சாதனைகள்..!

என் தந்தை பணியாற்றிய திரைப்படங்களில் ‘படித்த மனைவி’, ‘மணமகள்’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘விடுதலை’, ‘பாக்யவதி’, ‘ஏன்?’, ‘உலகம் இவ்வளவுதான்’, ‘வீட்டுக்கொரு பிள்ளை’, ‘அன்னை அபிராமி’ மற்றும் பலப்பல தெலுங்கு திரைப்படங்கள், நாகேஷ் அண்ணாவின் காமெடி டிராக், பல பாடல்கள்… மனோரமா ஆச்சி பாடிய ‘மஞ்சள் கயிறு’, சமீபத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் என் தந்தையுடன் கமலஹாசன் அண்ணா பாடிய ‘தந்தனத்தோம்…’!

– இப்படி ஒரு தலைமுறை கடந்த தமிழ்த் திரைப்பட பணி என் தந்தைக்கு இருப்பதால்தான், அந்த அனுபவம் – வில்லிசை மேடையில் எங்களின் வெற்றிக்குப் பெரிதும் உதவுகிறது..!

கடந்த 1960-ம் ஆண்டுகளில் என் தந்தைக்கு ஒரு திரைத்துறை உதவியாளர் இருந்தார். அவர்தான் இயக்குநர் ஆர்.சி.சக்தி அவர்கள்..! இவர் இயக்கத்தில் வெளியான ‘உணர்ச்சிகள்’ திரைப்படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!

கலைவாணர் என்.எஸ்.கே மறைவுக்குப் பிறகு, என் தந்தைக்கு சற்று கஷ்டம் நிறைந்த வாழ்வியல்… எங்களுடன் கொஞ்சம் கஷ்டத்தை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ள, ஆர்.சி.சக்தி என்ற உதவியாளர்.
நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது.. தினசரி என் தந்தையிடம் வந்து, அவர் சொல்வதை எழுதும் பணி இவருக்கு… அவரை நாங்கள் மழலை மொழியில் ‘சக்தி மாமா’ என்றுதான் அழைப்போம். அதை பிறகு அவரிடம் நினைவு கூறும்போது கண்ணீர் விட்டார்..!

சென்னை தி.நகர், உஸ்மான் ரோட்டிலுள்ள எங்கள் வீட்டுக்கு அவர் காலையிலேயே வந்துவிடுவார். அவரை பார்த்ததும், ‘‘அப்பா… சக்தி மாமா வந்தாச்சு..!” – நாங்கள்.

என் தந்தை சற்று நேரத்தில் வெளியே வர… திண்ணையில் காத்திருந்த சக்தி மாமா, என் தந்தைக்கு ‘வணக்கம்’ சொல்ல… பின்னர் என் தந்தை சொல்ல சொல்ல, இவர் எழுத ஆரம்பித்துவிடுவார்..!

சினிமாவுக்கு வசனம் எழுதும்போது, சக்தி அவர்கள் பேப்பர் மடிப்பதே ஒரு கலை… அதை அவருக்கு, என் தந்தைதான் கற்றுக் கொடுத்திருந்தார். சிறிது நேரம் எழுத்துப் பணி. பிறகு இருவரும் செல்வது, சென்னை தி.நகரில் அந்நாளைய பிரபல ஓட்டல் – பார்க் உட்லண்ட்ஸ்..!
அங்கு ஒரு பிளேட்டில் 2 இட்லிகளை இருவரும் பகிர்ந்து சாப்பிட்ட ‘வறுமையும் வாழ்வும்…’ நினைவுகளை என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

‘‘நீங்க சாப்பிடுங்க சக்தி…’’னு என் தந்தை சொல்ல, ‘‘அண்ணே..! நீங்க சாப்பிடுங்க…’’னு சக்தி அவர்கள் சொல்ல… இவர்களின் பிளேட்டில் இட்லி சூடு ஆறுவதுதான் மிச்சம்..! ஆனால், அதுதானே அன்பின் உச்சம்..!
அவர்கள் இட்லி சாப்பிட்டார்களா, இல்லையா என்பது யாருக்கும் தெரியாது… அங்கு பசிக்கு வேலை இல்லை… பாசத்துக்குத்தான் வேலையே..! அப்படியொரு நட்பு இருவரிடமும்..! இதேபோல், இன்னும் பல சுவையான சம்பவங்களுக்கு…

– காத்திருப்போம்