
அவரைச் சந்திக்க ஃபோனில் அனுமதி பெற்றேன்.
காலை மணி ஒன்பது. அழைப்பு மணியை அழுத்தினேன்.
தோளில் ஒரு துண்டுடன், வேஷ்டி பனியன் என சாதாரண உடை .நெற்றியில் லேசாய் விபூதி.
விருது பெற்ற எழுத்தாளர்.
"வாருங்கள்"
அழைத்து சோஃபாவில் அமரச் சொன்னார்.
வழக்கம் போல் சம்ப்ரதாயம்.
காஃபியா,டீயா ?.
“எனி திங்” என்றேன்.
காஃபியை அருந்திக் கொண்டே, அலசத் தொடங்கினோம்.
உலகம் மற்றும் உள்ளூர் இலக்கியம்..
“உங்கள் பத்திரிக்கை எப்படி போய்கிட்டிருக்கு”.
“பரவாயில்லை சார்.அதே ஸ்டாண்டர்ட். சர்குலேஷன் மட்டும் கொஞ்சம் பிக் அப் ஆயிருக்கு ”.
“உங்களப் போல நல்ல எழுத்தாளர் படைப்புகளும் அதுக்கு கைக் குடுக்குது”.
“நன்றி” என்று சொல்லி விட்டுச் சிறிது மவுனமானார்.
மைய விஷயத்துக்குத் தாவினோம்.
"இந்த விருது உங்களுக்கு இவ்வளவு தாமதமாக கிடைச்சது பற்றி". அவர் கருத்தை அறிய முயன்றேன்….
‘எனக்கு எந்த வருத்தமும் இல்லை”.
அந்த பதில் நேர்மையானதா. அதில் சந்தேகம் இருந்தது.
நான் சோதித்தேன்.
“முத்திரை பதித்த உங்கள் பல படைப்புகளைத் தவிர்த்து, இந்தச் சிறு கதை தொகுப்பைத் தேர்ந்தெடுத்திருக்காங்களே”..
என் ஆதங்கத்தை அவரிடம் சொன்னேன்
“ஆமாம்…. அந்த நாவல் பெயரைச் சொல்லி, அது எனது நல்ல கதைன்னு நான் நினைக்கிறேன்”.
வாசகர்கள் மத்தியிலும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அதுக்கு கிடைச்சிருந்தா இன்னும் பெருமையா இருந்திருக்கும்”.
நல்ல பல ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளில் உள்ள நுணுக்கங்களை, அவர் எடுத்துச் சொன்னார்.
இதற்கு முன் இந்த விருது பெற்ற எழுத்தாளர்கள் பக்கம், அந்த அலசல் திரும்பியது.
நம்மூர், அந்த பிரபல எழுத்தாளர் பற்றியும், அவர் எழுத்துக்கள் பற்றியும் கேட்டேன்.
சின்ன புன்முறுவல் செய்து,சிறிது நேரம் மவுனமானார். .
“தயவு செய்து அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்”
அந்த தவிர்ப்பில் பயமில்லை.ஏதோ ஒரு கணக்கு இருந்தது.
அவர் என்னை நேராகப் பார்த்து,
"நீங்க சொன்ன எழுத்தாளர் நிறைய எழுதுகிறார்".
“அவர் எழுத்தைப் பற்றிய உங்கள் அபிப்ராயம்” .
நானு்ம் விடாமல் தொடர்ந்தேன்.
“அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?
உங்கள் பத்திரிக்கையிலும் நிறைய எழுதுகிறார்”
"இருந்தாலும் உங்கள் கருத்து"
அவரிடம்தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
“அவர் நிறைய எழுதுகிறார். வார்த்தை கோர்வைகள் நிறைய. கதையும் இருக்கு.
சிறிய இடைவெளிக்கு பின்....இரு புருவங்களை உயர்த்தி...
"இலக்கியத் தரம் இருக்கா? நீங்களே சொல்லுங்கள்," என்னிடம் திரும்பியது கேள்வி.
“அதைக் கூற எனக்குத் தகுதியில்லை”. நான் பின் வாங்கினேன்.
அவர் என்னை சோதித்தாரா? இல்லை
அவர்கருத்தை என் மூலம் வெளியிட நினைத்தாரா?
அவர் மெதுவாகச் சிரிக்க, அந்தச் சிரிப்பில் பாதுகாப்பு அரண் தெரிந்தது.
பின் மெதுவாக,
இது “ஆஃப் தி ரெகார்ட்.வெளியிடாதீர்கள்".
வேண்டுகோளா? வெளியே விட்டு விட வேண்டு மென்ற மறைமுக ஆசையா?
நான் தலை அசைத்தேன்.
பேட்டி வந்தது.
அந்தப் பகுதியை நான் நீக்கியிருந்தேன்.
எடிட்டர் பார்த்தார்.
“அதை ஏன் நீக்கி விட்டாய். அது இருந்தால் பேட்டி இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்”.
“அவர் வேண்டா மென்றார்".
"அவர் அதை அழுத்திச் சொன்னாரா?".
"இல்லை ஒரு தார்மீக உணர்வு" என்றேன்.
எடிட்டர் சிரித்தார்.அதில் ஒரு ஏளனம் இருந்தது.
"தார்மீகம் யாரைக் காப்பாற்றுகிறது".
இதழைக் கொண்டு அவரிடம் கொடுத்தேன்.
அவர் அதை அமைதியாகப் புரட்டினார்.
பக்கம் விடாமல் கண்கள் தேடின.
எதிர் மறை வாக்கியம் எங்குமில்லை.
அவர் முகத்தில் மங்கிய வெற்றிடம்.
நிம்மதியா? தன் கூர்மையை உலகம் அறியாது போன ஏமாற்றமா?
இதழை மூடிவிட்டு
"நல்ல பேட்டி" என்றார்.
நான் சிரித்தேன்.
நான் தார்மீகமாயிருந்ததைக் கண்டு, என் எடிட்டர் ஏமாற்றமடைந்தார்
ஒரு சந்தேகம் மட்டும் என்னை விடவில்லை.
அவர் உண்மையில் வெளியிட விரும்பவில்லையா?
அல்லது வெளியிடப்பட்டால் தான், தன் கருத்துக்கு எடை கூடுமென நினைத்தாரா.
அந்த வாக்கியம் இதழில் இல்லை.
மூவரின் மனதிலும் இருந்தது.
நான் மட்டும் நடுவிலிருந்தேன்.

Leave a comment
Upload