தொடர்கள்
கதை
டிவியும் ரிமோட்டும் ! கி.ரமணி

20260207000234560.jpg

காலக்ஸி டிவியில் இருந்து பரதனுக்கு போன் வந்தது.

" பரதன் சாரா? கேலக்ஸி டிவியில் இருந்து கூப்பிடுகிறோம். அடுத்த சண்டே எங்க ஆபீசுக்கு வர முடியுமா?

பொங்கலுக்கு பட்டிமன்றம் ஷூட் பண்ணணும். 'அடக்கும் கலை ஆணுக்குரியதா? பெண்ணுக்குரியதா? ' என்று தலைப்பு.

சௌம்யா மேடமும் வராங்க.

'ஆணு'க்கு நீங்களும் ' பெண் ' ணுக்கு மேடமும் தலைமை தாங்கணும்.

மத்த பேச்சாளர் எல்லாம் நம் வழக்கமான ஆளுங்க தான். நடுவரும் நம்ம பெரியவர் மீனாட்சி சுந்தரம் ஐயா தான்.

விவாத சம்பந்தமான விஷயம் எல்லாம் நீங்க மீனாட்சி ஐயா கிட்டயும் மேடம் சௌம்யா கிட்டயும் பேசிக்கிங்க."

" சரி" என்றார் பரதன்.

கடந்த பத்து வருடமாக டிவியில் கொடி கட்டிப் பறக்கும் பட்டி மன்ற பேச்சாளர் பரதன்.

சௌம்யாவும் அப்படியே தான்.

பெரிய பண்டிகை நாட்களில் காலை பத்து மணிக்கு தெருவில் கூட்டமே இருக்காது. எல்லோரும் வீட்டில் காலக்ஸி பட்டிமன்றத்துக்காக, டிவிமுன் இருக்கையில் அமர்ந்து தங்களை

அரால்டைட் போட்டது போல் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

தன் அணிக்கு மூன்றாவது பேச்சாளராக பரதன் பேசும்போது அரங்கம் சும்மா அதிரும்.அடுத்து சௌமியா, பரதன் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து, ஆராய்ந்து பதிலடி கொடுப்பார்.

கூட்டம் அப்படியே தெறிக்கும்.

கடைசியில் நடுவர் மீனாட்சி சுந்தரம், "எல்லோரும் நல்லா பேசுனாங்க. அதுவும் பரதன், சௌம்யா ரெண்டு பேரைப் பற்றி சொல்லவே வேணாம். ஆனாலும்..." என்று கூறி விட்டுத் தன்( கேலக்ஸிக்கு முரண்படாத) தீர்ப்பைப் படிப்பார்.

அடுத்த பட்டிமன்றத்தில் சௌம்யாவின் பேச்சுக்கு அப்புறம் பரதன் கடைசியில் பேசி, வார்த்தை ஜாலத்தில் சிக்ஸர்கள் அடிப்பார்.

இவர்கள் பேச்சு என்றால் மக்களுக்கு எல்லாம் ஒரே ஜாலிதான். இவர்களில் யார் சிறந்தவர் என்பதற்கு ஒரு தனி பட்டிமன்றமே நடத்தலாம்.

பரதன், மீனாட்சி சுந்தரம் அய்யாவிடம் கைபேசியில் மரியாதையுடன் பேசினார்.

" அடுத்த ஞாயிறு பார்க்கலாம் ஐயா. தலைப்பு பார்த்தீர்களா? 'ஆணா பெண்ணா '' வகை.

நான் தான் ஐயா கடைசியா பேசணும், இந்த முறை . போன தடவை சௌமியா தான் பேசிச்சு."

" சரிப்பா இதை சௌம்யா கிட்டயும் சொல்லிடு."

சொல்லுறேன் ஐயா. முடிவை இப்பவே நிச்சயம் பண்ணி எழுதி இருப்பீங்க இல்லையா? " கொஞ்சம் நக்கலுடன் சிரித்தார் பரதன்.

பதிலுக்கு சிரித்தார் ஐயா.

"ஆண் பெண் மோதல் சப்ஜெக்ட் இல்லையா? ரெண்டு தரப்புக்கும் பொதுவாக முடிக்கணும்னு காலக்ஸியில் சொல்ல வாய்ப்பு இருக்கு."

"அதுவும் சரி தானுங்க. " சிரித்துக் கொண்டே சொன்னார் பரதன்.

" ஆமாப்பா! நீயும் சௌம்யாவும் வந்தா போதும் மக்களுக்கு. "

" நீங்க இல்லாமலா ஐயா? " என்று ஐஸ் வைத்தார் பாரதன்.

பின் சௌம்யாவிடமும் பேசினார்.

சௌம்யா ஒரு மல்டி நேஷனல் மென்பொருள் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். நாற்பது பக்க வயசு. அழகு, தோரணை இரண்டின் ரசாயனக் கலவை.

கணவர் உயர் பதவியில் இருக்கிறார். குழந்தைகள் இல்லை.

ஞாயிறு காலை வருவதாக பரதன்

காலக்ஸி டிவி கிட்ட சொல்லிவிட்டார்.

பரதன் போன வருஷம் இன்சூரன்ஸ் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.

பென்ஷன் உண்டு. வீட்டில் மனைவி அவர் ரெண்டு பேர் தான். மகன் ஸ்ரீராம் பெங்களூருவில் படிக்கிறான். மனைவி சுமதி வேலைக்கு போகவில்லை.

பரதனுடைய பேச்சின் சிறப்பு, புள்ளி விவரங்கள் அல்ல. எதிராளியின் பேச்சை கேட்டு அதிலிருந்து தன் விவாதத்திற்கு வேண்டிய சொல் ஆயுதங்களைத் தயாரித்துக் கொள்ளும் திறன்,

சமயோஜிதமான வார்த்தைகள், நகைச்சுவை, மெல்லிய கிண்டல், எந்த எதிரியையும் அடங்க வைக்கும் பேச்சு நளினம், இவைதான்.

சௌம்யாவின் பேச்சு ஆவேசமாய் ஏராளமான தரவுகள் கொண்டு பாரதியின் புதுமைப் பெண் சாயலுடன் பெண்ணியம் பொங்க இருக்கும்.

ஞாயிறு அன்று அண்ணா சாலை காலக்ஸி அலுவலக ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது.

மீனாட்சி சுந்தரம் ஐயா வழக்கம் போல அவர் பாணியில் ஆரம்பித்தார். அரதல் பழசான அந்த பட்டிமன்றத் தலைப்பை தம் பிடித்து உயர்த்தி நிறுத்தி,

" எக்காலமும் இளமை மாறாது, எங்கும் பொருந்தும் என் தமிழன்னை போன்ற தலைப்பு இது. "என்றார்

அணிகளை அறிமுகப்படுத்தினார்.

சௌம்யா, பரதன் என்று பெயர் சொன்னவுடன் அதிரடி கைதட்டல் அரங்கத்தில் அடங்க ஒரு நிமிஷம் ஆச்சு.

ரெண்டு அணியிலும் தலா இரண்டு பேர்கள் பொறி பறக்க பேசினார்கள்.

இப்போ முதல் அணியின் தலைவியான சௌம்யா எழுந்து பேச ஆரம்பித்தாள்.

"ஆண்கள் முரட்டுத்தனமாகத்தான் பெண்களை ஆளுமை செய்ய முயல்வார்கள், தங்கள் உடல் மொழி, வாய்மொழி, மற்றும் அதிகாரத்தால்.

ஆனால் பெண்கள் அப்படி இல்லை. நளினத்தால், சமயோஜிதத்தால் எளிதாக ஆண்களை அடக்கியாள்வார்கள்.

நம் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி ஆண்கள் போல என்றால், ரிமோட் பெண்கள் போல.

டிவியில் சேனல் மாறுவது டிவிக்கே தெரியாது! அவ்வளவு கச்சிதமா பெண்களின் ரிமோட் கட்டுப்பாடு இருக்கும்."

ஐயா மீனாட்சி சுந்தரம் குறுக்கிட்டு,

" அப்போ, உங்ககிட்ட மாட்டிகிட்ட உங்க கணவர் ஒரு அப்பாவி தான். பாவம்!" என்றார் அரங்கம் சிரித்தது.

" நடுவர் அவர்களே! நான் சொல்வதைக் கேட்டு நடப்பதில் அவர்களுக்கும் என் வீட்டுக்கும் நிம்மதி கிடைக்கிறது என்பது என் கணவருக்கு நன்கு தெரியும். என் பர்மிஷன் இல்லாமல் எங்க வீட்டுல ஒண்ணுமே நடக்காது. அப்படி எதுவும் நடப்பதை என் கணவரும் விரும்ப மாட்டார். " என்றாள் சௌம்யா.

சௌம்யா மேலும் தொடர்ந்து தன் கருத்துக்களுக்கு வலு சேர்த்து, கைதட்டலுடன் முடித்தாள்.

அடுத்து பேசிய பரதன்

அம்மா சௌம்யா! நீங்க உங்க வீட்ல ரிமோட்டா இருந்துட்டு போங்க. அது உங்க இஷ்டம். ஆனா எதையும் ஓவரா பண்ணாதீங்க.

ரிமோட் கெட்டுப் போச்சுன்னா உடனே பக்கத்து கடையில இருனூறு ரூபாய்க்கு வாங்கிக்கலாம்.

டிவி கெட்டுப் போச்சுன்னா அவ்வளவு ஈஸி இல்லை அம்மா. அதனால்

வீட்டில் உங்கள் டிவியை ஓவரா வேலை வாங்காதீங்க.

நடுவர் கேட்டார்." பரதன்! உங்க வீட்டிலயும் நீங்க தான் டிவி போல.. "

" இல்லை! நான் ஒரு அன்பான ரிமோட், நடுவர் அவர்களே! எங்க வீட்டு டிவிக்கு தெரியாம இந்த ரிமோட், டிவியின் சேனல எப்பவுமே மாற்றாது. நல்ல வேளையா எங்க டிவிக்கும் இந்த ரிமோட் மேல் மதிப்பு மரியாதை அன்பு எல்லாம் ரொம்ப உண்டு." என்று தொடர்ந்து கணவன் மனைவி புரிதலின் அவசியம் பற்றி பேசினார் பரதன்.

கைத்தட்டல் அரங்கைப் பிளந்தது.

கடைசியில் நடுவர் களத்தில் இறங்கினார்.

"அன்பால் அடக்குவது தான் ஆளுமை. ஆணவத்தால் அடக்குவது அடக்குமுறை. ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றவர் அடக்கவோ, பயமுறுத்தவோ கூடாது. ஆனால் அன்பால் ஆட்சி செய்யலாம்."

என்று சொல்லி,

" இரண்டு அணியும் இதே கருத்தைத்தான் வெவ்வேறு விதமாகக் கூறின. அதனால் இரண்டு அணியுமே இன்று ஜெயித்தன." என்று முடித்தார்.

அங்கு கூடிய மக்களின் நிஜக் கைத்தட்டலுடன் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கரகோஷமும் சேர்ந்து அரங்கத்துக்குள் டெசிபெல்கள் எகிறன.

எல்லாரிடமும் விடைபெற்று பரதன் கிளம்பிய போது சௌம்யா அழைத்தாள்.

பரதன் சார் உங்க வீடு மயிலாப்பூர் தானே. நான் அடையாறு தான் போறேன். வழியில் உங்களை ட்ராப் பண்ணிடுறேன்."

"உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் ஆட்டோ ஏதாவது புடுச்சு போயிடுறேன்."

" என் ஹஸ்பண்ட் வந்து என்னை பிக்கப் பண்ணப் போறாரு. வழியில் உங்களை வீட்டில் இறக்கி விட்டு விடுவோம்."

ஒரு புது லெக்ஸஸ் கார் வந்து நின்றது. நடுத்தர வயது ஸ்டைலிஷ் மனிதர் கார் ஓட்டும் இடத்தில் இருந்தார். ரால்ஃப் லாரன் போலோ டீ ஷர்ட், ரேபான் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். முன் கதவைத் திறந்து அவர் அருகில் அமர்ந்து கொண்ட சௌம்யா "பரதன் சார் பின்னால் ஏறி உட்காருங்கள்." என்றாள்."

பரதன் ஏறி அமர்ந்து கதவை சரியாக சாத்துவதற்குள் வண்டி கிளம்பி விட்டது.

" மெதுவா பிரதீப். பரதன் சார் இன்னும் சரியாக உட்காரவில்லை!"

"அதற்கு நான் என்ன பண்ண முடியும்? நீ கவனமாகப்பார்த்து முன்னமே எனக்கு சொல்லி இருக்கலாம் தானே?" காட்டமாக சொன்னார் பிரதீப்.

ஒரு நிமிஷம் பேசாமல் இருந்த சௌம்யா மெதுவாக " பிரதீப் இவர்தான் பரதன். என்னுடன் நிறைய பட்டிமன்றங்களில் பேசுவார் என்பேனே, அவர் தான்.

பரதன் சார்! இவர்தான் என் கணவர் பிரதீப். பிராஃபிட் ஆட் ஏஜென்சீஸ் ல ஒரு டைரக்டர். "

" நைஸ் மீட்டிங் யூ சார்" என்றார் பரதன்.

பிரதீப் உடனே பதில் சொல்லவே இல்லை. பின்னர்,

" சரி. சாரை எங்க ட்ராப் பண்ணலாம்னு சொல்லு. உன்னையும் வீட்டில விட்டுட்டு அப்புறம் எனக்கு லீலா பேலஸ் ஹோட்டல் வேற போகணும். சீக்கிரமா சொல்லு." என்றான்.

தன் வீட்டு லொகேஷன் மேப்பை பரதன் சௌம்யாவின் கைபேசிக்கு அனுப்ப சௌமியா மேப்பை திறந்து பிரதீப்புக்கு வழி சொன்னாள்.

பரதன்வீட்டு பக்கத்து சந்துக்குள் சௌம்யா திரும்பச் சொல்லிப் பின் அவசரப் பதட்டத்துடன்...

"இது இல்லை. அடுத்த லெஃப்ட்."

என்ற போது பிரதீப் கோபத்தில் காரை நிறுத்தினான்.

"சரியா சொல்லித்தொலை. சின்னதா கார்ல இடிச்சாலும் மினிமம் இரண்டு லட்சம் செலவு ஆகும்."

" நான் இங்கேயே இறங்கி விடுகிறேன். வீடு ரொம்ப பக்கம்தான். தேங்க்ஸ். " என்று காரை விட்டு இறங்கி, பரிதாபமாய் பார்த்துக்கொண்டு இருந்த சௌமியாவிடம் விடை பெற்றுப் பின்னர் நடந்தார் பாரதன்.

" சௌமியா பாவம் நல்ல ரிமோட் தான். ஆனால் இந்த டிவி சுத்தமா சரியில்லையே!" என்று எண்ணிக் கொண்டு தன் பிளாட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினார்.

கடுகடுப்புடன் வந்து கதவை திறந்த அவர் மனைவி சுமதி " ஏன் இவ்வளவு லேட்? " என்றாள்.

"கொஞ்சம் லேட்டா முடிஞ்சது நிகழ்ச்சி." என்றவாரே வீட்டுக்குள் தயங்கி நுழைந்தார் பரதன்.

"ரிட்டயர் ஆனதுக்கப்புறம் உங்களை ஒரு கேள்வி கூட கேட்க முடியல. லேட்டானால் அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணக் கூடாதா? இவ்வளவு நாழி ஊரை சுத்திட்டு வர்றீங்க. ஆவின் வெண்ணை, காபி பொடி வாங்கிட்டு வரச் சொன்னேன். கையில ஒண்ணும் காணோமே? மறந்து போயாச்சா? எல்லாம் என் தலை எழுத்து. " என்று படபடத்தாள் சுமதி.

எந்த பதிலும் சொல்லாமல் கம்மென்று தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார் பாரதன்.

"இங்கேயும் நம்ம டிவியை எப்படி சமாளிக்கிறது என்று ரிமோட்டுக்கு தெரியல." என்று தனக்குள் சிரித்துக் கொண்டார்.

தொலைவில் ஸ்பீக்கரில்,

" வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" என்று இளையராஜா அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தார்.