தொடர்கள்
ஜோக்ஸ்
க்ரோ பதி

20260206163446379.jpg

கோடீஸ்வரனான 'பதி' என்பவரை பத்திரிக்கை நிருபர் பேட்டி காண வருகிறார்.

' வணக்கம் க்ரோர் பதி சார் "

'' வாங்க, நான் க்ரோர் பதி இல்லை, க்ரோ பதி".

''கோடீஸ்வரன்னா க்ரோர் பதி என்று தானே சொல்லணும்.?"

" நான் க்ரோ பதி தான் சார். விவரமா சொல்லறேன். ஒரு காலத்தில் கௌன் பனேகா க்ரோர் பதி ப்ரோக்ராம் பார்க்கற சமயம்...எனக்குள் நான் பெரிய பணக்காரனாகணும் என்கிற ஆசை சிறகடித்து பறந்தது. காலை எழுந்ததும் என் முன் ஒரு காக்கா சிறகடித்துப் பறந்தது. காக்கா மூலம் என் வாழ்வில் வருவாய் ஈட்ட ஒரு திருப்பு முனை வருமென்று நினைக்கவேயில்லை. காக்கவும் என் முன் தன் கழுத்தை திருப்பி பார்த்து எதிர் முனைக்குப் பறந்தது. காக்கா பிடித்து பெரும் வருவாய் ஈட்ட முடியுமா? என்று யோசித்தேன்.

நிருபர்: (குறுக்கிட்டு) பல பேர் இன்று காக்கா பிடித்து தானே உயரிய நிலை அடைகிறார்கள்?

பதி: அந்த காக்கா பிடித்தல் இல்லை சார், நிஜமான காக்கா பிடித்தல் மூலம் சம்பாதிக்க வழிவகை இருக்கான்னு யோசிச்சேன்.

நிருபர்: இன்டரஸ்டிங்...அப்புறம்?

பதி: ஒரு நாள் மதியம் , பக்கத்து வீட்டுக்காரர் முன்னோர்க்கு திதி கொடுக்கும் நாளில் காக்காவுக்கு உணவு வைத்து ...கா...கா ... என்று கரடியாகக் கத்தினார்.. காக்கா சாப்பிட்டா தான், தான் சாப்பிட முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் . காக்க வேண்டி இருந்தது.. காக்கா வேண்டி இருந்தது...ஆனால் கடைசிவரை காக்காவைக்காணோம்.

அப்போதான் தோன்றியது...காக்காவை கூண்டில் வளர்த்து வாடகைக்கு விடலாமே என்று.. ஒரு புதிய பிசினஸ் ஆப்பர்ச்சுனிடி.. வேறொரு திதி கொடுக்கும் நிகழ்வில், ஒரு காக்காவை கூண்டுடன் கொண்டு சென்றேன். அன்ன உருண்டைகள் வைத்தார்கள். காக்கா சாப்பிடணுமே..? ஊஹும். காக்கா கரைந்த வண்ணம் இருந்தது..பிறகு தான் தெரிந்தது. மற்ற காக்காவை கூப்பிடாமல் ஒரு காக்கா தனியாக சாப்பிடாது என்று. பிறகு முயற்சியில் மனம் தளராது மூன்று காக்கா பிடித்து ஒரு கூண்டில் அடைத்து தொழிலைத் துவங்கினேன். சில நாட்களிலேயே , ஏகப்பட்ட டிமாண்ட் காக்கா கூண்டுக்கு.. மாளயம் சமயத்துல வாடகைக்கு காக்கா கூண்டைக்கொடுத்து மாளலை . பிசினஸ் படு வேகமாக வளர பல நகரங்களில் ஆயிரக்கணக்கில் கூண்டுகள் தயார். நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி பிரான்ச் ஆபீஸ்கள் வளர்ந்தது.. பிசினெஸ் மேலும் பிக் அப் ஆக ஆன்லைனில் பத்து நாளைக்கு முன் ரிஜிஸ்டர் பண்ணா தான் காக்கா கூண்டு என்ற நிலைக்கு அபிவிருத்தி. வெளிநாடுகளில் , காக்காவே பறக்காத நாடுகளில், செட்டில் ஆன நம் நாட்டவர், காக்கா கூண்டுக்கு எந்த வாடகையும் தரத் தயாராயினர்..

இது ஒருபக்கம் இருக்க சோசியல் மீடியாவில் , ஜோசியர்கள்,சனீஸ்வரனைத்திருப்தி படுத்த காக்காவுக்கு தினமும் உணவு வையுங்கள் என்று கூறிவிடுகிறார்களா!, சிலர் மாத வாடகை அடிப்படையில் காக்கா கூண்டை எடுத்து செல்கிறார்கள்..சனீஸ்வர பரிகார ஸ்தலங்களில் நிரந்தர ஸ்டால் வைத்துவிட்டோம்...

நிருபர்: ஆஹா, நீங்கள் கோடீஸ்வரனாக உயர்ந்ததற்கு வேறு விளக்கம் தேவையில்லை ... உண்மையிலேயே நீங்க க்ரோர்பதி தான் , சாரி , க்ரோ பதி தான்.

பதி: கடைசியாக ஒண்ணு சொல்லியே ஆகணும்..நேற்று தான் மேல் லோகத்துலே இருந்து சனைஸ்வரன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி ஒண்ணு கொரியரில் வந்தது.

நிருபர்: விவரம்?

பதி: சனீஸ்வரனின் உத்தரவாதம் பின் வருமாறு -நீங்கள் என் வாகனத்துக்கு பெரிய சேவை செய்வதால், உங்களை அஷ்டம சனி , ஏழரை சனி காலத்தில் எந்த தொல்லையும் செய்ய மாட்டேன்.

நிருபர் : ?...?...?...

பி கு : - சனிப்பெயர்ச்சிக்கு தன் சமர்ப்பணம் என்கிறார் தேவா.